எளியவர்களைக் காப்பதே வலிமை

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalaiஉலகிலேயே பணக்கார நாடு; மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் நாடு என்றெல்லாம் தன்னைப் பற்றியே பீற்றிக்கொள்ளும் நாடு, அமெரிக்கா.  சிகாகோ இந்த நாட்டின் ஜனத் தொகையைப் பொறுத்தவரை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பெரிய தொழில் நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அதிகக் குளிரும் பனியும் உண்டு என்பதோடு பயங்கரக் காற்றும் இங்கு வீசும் என்பது போன்ற வேண்டாத குணங்களும் சிகாகோவிற்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் நாங்கள் வாழ்ந்த போதும் இந்நகரின் தெற்குப் பகுதியில் நிறையக் கருப்பர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் வறியவர்கள் என்பதால் வன்முறை அதிகம் என்றும் அறிந்திருக்கிறோம். இந்தத் தென்பகுதியில் ஹைட்பார்க் (Hyde Park) என்னும் பகுதியில் சிகாகோ பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. அப்போது எங்களுடைய பழக்கம் எல்லாம் பல்கலைக்கழக ஆசிரியர்களோடும் அங்கு வேலை பார்க்கும் மற்றையோரிடம் மட்டும்தான். அதனால் வறிய நிலையில் இருக்கும் கருப்பர்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு நிறையக் கிடைக்கவில்லை.

இப்போது இன்னொரு தடவை சிகாகோவில் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த நகரில் கடந்த ஏழு மாதங்களாக வசித்து வருகிறோம்.  பல்கலைக்கழகத்திற்கு அப்பால் வசிக்கும் மனிதர்களைப் பற்றியும் அறிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அப்போதும் கருப்பர் இனத்தைச் சேர்ந்த சிலருடைய பழக்கம் கிட்டியிருந்தாலும், இப்போது அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

சிகாகோவில் அறுபதுகளில் முதல் முதல் குடித்தனம் ஆரம்பித்தபோது ஒரு நண்பர் இந்தப் பகுதியில் உள்ள சியர்ஸ் (Sears department store)  என்ற டிபார்ட்மெண்ட் கடைக்குத்தான் எங்களைக் கூட்டிச் சென்று பல சாமான்கள் வாங்க உதவி புரிந்தார். அமெரிக்கச் சங்கிலித் தொடர் கடைகளில் (chain stores) இதுவும் உன்று. இக்கடையின் கிளைகள், நாடு முழுவதிலும் உண்டு. அதே கடை இப்போதும் இருக்கிறது. இந்தக் கடை ஊழியர்கள் அனைவரும் – கடையின் மேனேஜர் உட்பட – கருப்பர்கள். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கருப்பர்கள். அதன் உள்ளே ஒரு மூலையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இயங்கும், வருமான வரி கட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஒரு கம்பெனி உண்டு; அதன் ஊழியர்களும் அதற்கு வரும் வாடிக்கையாளர்களும் கருப்பர்களே.

Chicago

இதற்கு வடக்கே சில சாலைகள் தள்ளி அமைந்திருக்கும் வருமான வரி தயாரிக்கும் கம்பெனியின் இன்னொரு கிளை இருக்கிறது. இங்கும் ஊழியர்களும் அங்கு வரும் வாடிக்கையாளர்களும் கருப்பர்களே.

அமெரிக்க அரசின் கீழ் சமூகப் பாதுகாப்புத் துறை ஒன்று இயங்கி வருகிறது. இதன் கிளை அலுவலகங்கள், நாடு முழுவதும் உண்டு. நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு அலுவலகத்திற்குப் போயிருந்தோம். அங்கும் இதே நிலைதான். ஊழியர்கள், அதிகாரிகள், பொது மக்கள் உட்பட எல்லோரும் கருப்பர்கள். சிகாகோவின் தெற்குப் பகுதியில் கருப்பர்கள் அதிகம் என்றாலும், அந்த அலுவலகங்களோடு சம்பந்தப்பட்ட எல்லோரும் கருப்பர்களாயிருந்தது எனக்கு ஆச்சரியத்தையும் இவர்களுடைய நிலை பற்றி ஒருவித அயர்ச்சியையும் தந்தது.

அமெரிக்காவில் சிகாகோ போன்ற பெரிய ஊர்களில் பொதுப் போக்குவரத்து வசதி ஓரளவிற்கு இருக்குமென்றாலும் பலர் சொந்தக் கார்களில்தான் வருவார்கள். அதற்காகப் பொது அலுவலகங்களில் கார்கள் நிறுத்த வசதி இருக்கும். மேலே குறிப்பிட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய இடத்தில் ஓரிரண்டு கார்களைத் தவிர வாகனங்கள் ஏதுமில்லை.

அங்கு வந்திருந்தவர்களில் பலர் வசதி படைத்தவர்கள் இல்லை என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது. பொதுவாக அமெரிக்காவில் அழுக்குத் துணிகளோ, கந்தல் துணிகளோ உடுத்திக்கொண்டு வருபவரைப் பார்க்க முடியாது. அடுக்குமாடிக் கட்டடங்களிலும் அங்குள்ளோர் வசதிக்காக துணி துவைக்கும் மெஷின்கள் உண்டு. அதற்கு மேல் சாலைகளிலும் இந்த மெஷின்களை வாடகைக்கு விடும் கடைகள் இருக்கும். ஆனால், இங்கு வந்திருந்த பலரின் கம்பளிக் கோட்டுகள் நைந்து போயிருந்தன. அவர்கள் அவற்றை அடிக்கடி மாற்றவில்லை என்று தெரிந்தது. அதிகம் படித்தவர்கள் இல்லையாதலால் விபரம் தெரிந்தவர்களாகவும் தோன்றவில்லை.

சிகாகோ நகரம் இவர்களைத் தென்பகுதியில் ஒதுக்கி வைத்திருக்கிறது என்பதை விட வறுமைக் கோட்டிற்குக் கீழேயும் சிறிது மேலேயும் இருப்பவர்களில் கருப்பர்கள் தான் பெரும்பான்மை என்பதால், இவர்கள் சிகாகோவின் தெற்குப் பகுதியை விட்டு நகரின் வசதியான பகுதிகளில் குடியிருக்க முடியாது. கருப்பர்களில் சமூக ஏணியில் மேலே சென்றவர்கள் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டிருக்கிறார்கள். ஏற முடியாதவர்கள் நம் சேரிப் பகுதிகள் போன்ற தென்பகுதியில் வாழ்கிறார்கள்.

chicago universityநிறையக் கருப்பர்கள் வசிக்கும் இப்பகுதியில் சிகாகோ பல்கலைக்கழகம் மாத்திரம் ஒரு தீவு போல் அமைந்திருக்கிறது. இதில் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களும் பயிலும் மாணவர்களும் வசிக்கிறார்கள். இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையோர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டிலிருந்து படிக்க வந்த மாணவர்களும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்துவிட்டது போல் தோன்றும். இதைப் பிரிப்பது ஒரு தெருதான். இப்படிக் கருப்பு அமெரிக்கர்கள் ஒரு உலகத்திலும் மற்ற அமெரிக்கர்கள் இன்னொரு உலகத்திலும் வாழ்ந்து வருபது போல் தோன்றும்.

1861 ஏப்ரல், 12ஆம் தேதி உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்து, இந்த வாரம் 150 ஆண்டுகள் ஆகின்றன. கருப்பர்களை அடிமைகளாக வைத்திருந்ததால் அதிகப் பயன் பெற்ற தென்மாநிலங்கள் அடிமை முறையை நீட்டிக்க மத்திய அரசிலிருந்து பிரிய முயன்றனவா அல்லது மத்திய அரசின் அதிகாரத்தைக் குறைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் பிரிந்து போக நினைத்தனவா என்ற சர்ச்சை இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசிலிருந்து பிரிந்து போனால்தான் அடிமை முறையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று நினைத்ததால்தான் மத்திய அரசிலிருந்து பிரிந்து போக நினைத்தன. தாங்கள் விரும்பியதைச் சாதித்துக்கொள்ள மாநிலங்களின் உரிமைகள் என்ற ஆயுதத்தைப் பிரயோகித்தனர். கருப்பர்கள் இன்னும் அடிமைகளாக இருந்திருக்க வேண்டும், அவர்களுக்கு வெள்ளையர்கள் அளவு குடிமை உரிமை கொடுத்திருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இன்னும் சிலர் குடியரசுக் கட்சியில் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

Martin Luther Kingஉள்நாட்டு யுத்தம் முடிந்து, கருப்பர்களுக்கு விடுதலை கிடைத்து, அதன் பிறகு அவர்கள் தங்கள் குடிமை உரிமைகளுக்காக நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. மார்ட்டின் லூதர் கிங் போன்ற கருப்பர்களின் தலைவர்கள் மிகவும் போராடி கருப்பர்களுக்கு குடிமை உரிமைகள் பெற்றுக் கொடுத்தனர். கிங் அதற்காகத் தன் உயிரையே கொடுத்தார். கருப்பர்களுக்குச் சம உரிமைகள் வாங்கிக் கொடுத்தது பிடிக்காத ஒருவன், அவரைக் கொலைசெய்தான்.

சட்டப்படி கருப்பர்களுக்கு சம உரிமைகள் இருந்தாலும் தாங்கள் இன்னும் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைக் கருப்பர்கள் பலர் உணர்கிறார்கள். இப்போது மத்திய அரசின் செலவைக் குறைக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏழைகளுக்கு உதவும் (ஏழைகளில் பலர் கருப்பர்கள் என்பதை இங்கு நினைவுகூர வேண்டும்) பல திட்டங்களில் கைவைக்கிறார்கள். இப்படி இவர்கள் செய்யும் காரியங்களால் பாதிக்கப்படுபவர்களில் பலர் கருப்பர்களே. அமெரிக்காவிற்கு இருக்கும் கடனைக் குறைக்க வேண்டும் என்பதை விடக் கருப்பர்களுக்கு உள்ள சலுகைகளைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நோக்கம் போல் தோன்றுகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் வறுமையில் வாடும் கருப்பர்கள் இன்னும் தொடர்ந்து வறுமையிலேயே இருப்பார்கள்.

Obamaஎல்லா வறியவர்களுக்கும் முடிந்த அளவு உதவி செய்ய முயன்ற ஒபாமாவை வெள்ளையர்களின் செல்வத்தை எடுத்துக் கருப்பர்களுக்குக் கொடுக்க முயல்கிறார் என்று இந்தக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் பழி சுமத்தினார்கள். 2010 டிசம்பர் மாதத்தில் பணக்காரர்களுக்குப் புஷ் கொடுத்த வரிச் சலுகை காலாவதியாக இருந்த தருணத்தில் அதை நீக்க ஒபாமா முயன்ற போது, அப்படிச் செய்தால் வேலையற்றோர்களுக்கான உதவித் தொகையையும் நீட்டிக்க விட மாட்டோம் என்று கூறி, பணக்காரர்களுக்கான வரிச் சலுகையை 2012 டிசம்பர் வரை நீட்டித்துக்கொண்டனர் (வேலையற்றோர்களில் பெரும்பகுதியினர் கருப்பர்கள் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்).

கட்சி சார்பற்ற அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தலையாட்டி வருவதாக நினைத்துக்கொண்டிருந்த என் போன்றவர்களுக்கு, ஒபாமா சென்ற வாரம் ஒரு கல்லூரியில் பேசிய பேச்சு, இன்னும் அவர் ஒரு மனிதநேயர்தான் என்பதை வலியுறுத்தியது. குடியரசுக் கட்சியினர் அரசின் சமூக நலத் திட்டங்களை ஒழித்து, அரசின் பற்றாகுறையை நீக்க மனதைரியம் வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். இதைக் குத்திக் காட்டி, “வாஷிங்டன் அரசியலில் எந்தச் செல்வாக்கும் இல்லாத, தியாகம் செய்வதற்கு இனி எதுவும் இல்லாத வறியவர்களிடம் உங்கள் நலன்களைத் தியாகம் செய்யுங்கள் என்பது ஒன்றும் தைரியமான செயல் அல்ல” என்றும், “உண்மையான தேச பக்தி என்பது எளியவர்களையும் வறியவர்களையும் பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதுதான்” என்றும் கூறி, ஒபாமா என் போன்றோர் உள்ளத்தில் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டார். “வாழ்க ஒபாமா” என்று வாழ்த்தவும், “இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் அமெரிக்காவை ஆள அவருக்கு இறைவன் அருள் புரியட்டும்” என்று இறைவனை வேண்டுவதையும் தவிர செய்ய வேறு என்ன இருக்கிறது?

================================================

படங்களுக்கு நன்றி: http://walldig.eu, http://en.wikipedia.org, http://www.hhmi.org

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.