இந்திய மாணவர்கள் 9 பேர், அமெரிக்கா பயணம்
புதுமையான அறிவியல் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் நடவடிக்கைகள் எடுக்கும் என்று அத்துறையின் அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பங்கேற்பதற்குத் தேர்வு செய்யப்பட்ட ஒன்பது மாணவர்களை வழி அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி புது தில்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பவன்குமார் பன்சால், “இந்த மாணவர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவர்களுடைய ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் புதுமைகளுக்கு மதிப்பு சேர்த்து சமுதாயத்திற்கும் சாதாராண மனிதர்களுக்கும் உதவி அளிக்கும்” என்று குறிப்பிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி மாணவர்களிடையே கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டி ஆராய்ச்சி பூர்வமான கல்வி கற்றலுக்கு வழிவகுக்கும் என்றும் புதுமையான சிந்தனைகள் உலகை மாற்ற வல்லவை என்றும் இந்தத் திறன் மிகுந்த மாணவர்கள் சர்வதேச அளவில் நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
அறிவியலில் ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான இந்திய திட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்கள் 2011 மே மாதம் எட்டாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியின் ராகவேந்திர ராமச்சந்திரன் என்ற மாணவரும் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ள மாணவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
