‘பி.எஸ்.எல்.வி. சி-16’ ராக்கெட் வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான, பதினெட்டாவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் சீறிப் பாய்ந்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் அவற்றின் இலக்கை அடைந்தன. செயற்கைக்கோள்கள் சரியான சுற்றுப் பாதையில் செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, 2011 ஏப்ரல் 20 அன்று காலை, சரியாக 10:12க்கு, பி.எஸ்.எல்.வி – சி16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. முந்தைய ராக்கெட்டுகளை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ‘இஸ்ரோ’ தெரிவித்துள்ளது. இதற்கான, ஐம்பத்து நான்கரை மணி நேர கவுன்ட் டவுண், 18ஆம் தேதி அதிகாலை 3.42 மணிக்குத் தொடங்கியது.
2011 ஏப்ரல் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், இந்திய தயாரிப்பில் உருவான 1,206 கிலோ எடை கொண்ட, “ரிசோர்ஸ்சாட்-2′ என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், இயற்கை வளம் குறித்து அதிகம் அறிய முடியும்.
மேலும் சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கைப் பேரழிவுகள் தொடர்பாகவும், ஆராய முடியும். இத்துடன் 92 கிலோ எடை கொண்ட, இந்திய – ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான, “யூத்சாட்’ என்ற, சிறிய ரக செயற்கைக்கோளும், சிங்கப்பூரில் உருவான 106 கிலோ எடை கொண்ட, “எக்ஸ்- சாட்’ என்ற சிறிய ரக செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இதில், யூத்சாட் செயற்கைக்கோள், கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில், வான்வெளிக்கும், பூமி மண்டலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
=========================================
படத்திற்கு நன்றி: பத்திரிகை தகவல் அலுவலகம்
