சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !
 
ஒரு நாட்டின் ஊடகம் என்பது அந்நாட்டின் முதுகெலும்பைப் போன்றது. ஊடகங்கள் சர்வாதிகார அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் அந்நாட்டுப் பிரஜைகளின் குரல்வளை நெரிக்கப்படுவது போன்ற ஒரு நிலையே தோன்றுகிறது.
 
ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. ஊடகங்களின் சுதந்திரத்திலேயே நாடுகளின் சுபீட்சமும், தன்மானமும் காக்கப்படுகிறது.
 
ஊடகங்களுக்கே பதவியிலிருப்போர் அப்பதவியின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகிக்கும்போது அதைத் தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. நாட்டின் முன்னனிப் பிரஜைகள் தவறான பாதையில் போகும் போது அதைச் சுட்டிக் காக்கும் கடமை சுதந்திரமான ஊடகங்களின் கைகளில் தங்கியுள்ளது.
 
ஆனால் அச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மக்களுக்கு அவ்வூடகங்கள் தரும் செய்திகளில் உள்ள உண்மையின் மீது நம்பிக்கை வலுவடைய வேண்டுமானால் அதைப் பாதுகாக்கும் கடமை கூட அவ்வூடகங்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. சுதந்திரத்திர்கும், தாந்தோன்றித்தனத்திற்கும் இருக்கும் எல்லையைக் கடந்து விடாமல் இருக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகிறது.
 
என்ன சக்தியின் இம்மடலின் பீடிகை நீண்டு கொண்டே போகிறது ? என்ன விடயமாக இருக்கும் என்னும் ஆவல் உங்களுக்கு ஏற்படுவது எனக்குப் புரிகிறது.
 
பி.பி.ஸி உலக ஊடகத்துறையினருக்கே ஒரு முன்னுதாரணமாக, பல நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்த பிரித்தானிய நாட்டின் தேசிய ஊடகத்தின் மீது படிந்த கறைகளைப் பற்றிய ஒரு அலசலுக்கான பீடிகையே நீங்கள் மேலே கண்டது.

பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பெனி (British Broadcasting Company) 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி ஆறு பிரத்தியேக கம்பெனிகளினால் பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இதன் முதலாவது ஒலிபரப்பு 2LO எனும் ஸ்டேசனுக்காக லண்டனில் உள்ள மார்க்கோனி ஹவுஸ் எனும் இடத்தில் இடம்பெற்றது.

இதனுடைய விரிவாக்கம் தம்முடைய பத்திரிக்கைகளின் விற்பனையைத் தாக்கிவிடும் எனும் பீதியால் பிரித்தானிய பத்திரிக்கைத்துறையினர் அன்றைய அரசாங்கத்தினூடாக இவ்வானொலிச் சேவைச் செய்திகளை மாலை 7 மணிக்குப் பின்னரே ஒலிபரப்பலாம் எனும் நிபந்தனையைக் கொண்டுவந்தார்கள்.
 
இப்ப‌டியாக‌ ஆர‌ம்பித்த‌ இவ்வூட‌க‌த்தின் முக்கிய‌ ஸ்தாப‌ன‌ங்க‌ளில் ஒன்று பிரித்தானிய‌ தேசிய‌ தாபாற் சேவை இலாகாவாகும். தேசிய‌ச் சேவையான‌ தாபாற்சேவை இலாகா ஒரு த‌னியாருட‌ன் இணைந்த‌ கூட்டுத்தாப‌ன‌த்திற்காக‌ ம‌க்க‌ளிட‌ம் இருந்து வ‌ரி வ‌சூலிக்கத் த‌ய‌ங்கிய‌தால் இக்கூட்டுத்தாப‌ன‌த்தில் அங்க‌ம் வ‌கித்த‌ த‌னியார் நிறுவ‌னங்க‌ள் வில‌கின‌. 1926ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ பிரித்தானிய‌ பொது வேலை நிறுத்த‌ம் ப‌த்திரிக்கைக‌ளின் வெளியீட்டில் இடையூறு ஏற்ப‌டுத்த‌ இக்கூட்டுத்தாப‌ன‌த்தின் மீது விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ நேர‌த்த‌டை அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து. இப்பொது வேலை நிறுத்த‌த்தின் போது இவ்வொலிப‌ர‌ப்பு ஊட‌க‌ம் எடுத்த‌ ந‌டுநிலையான‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இக்கூட்டுத்தாப‌ன‌த்திற்கு ஒரு உய‌ரிய‌ இட‌த்தை அளித்த‌து.
 
விளைவாக பிரித்தானிய அரச முத்திரையுடன் 1926ம் ஆண்டு இன்றைய பி.பிஸியின் அமைப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டு நிறுவனராக சார் ஜான் ரீத் நியமிக்கப்பட்டார்.
 
இத்தகைய ஒரு சூழலில் ஆரம்பிக்கப்பட்ட பி.பி.ஸியே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் முத‌லாவதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஊடக சேவையாகும்.
 
இதன் முதலாவது தொலைக்காட்சிச் சேவை 1936ம் ஆண்டு லண்டனில் அலெக்ஸாண்ரா மாளிகையில் இருந்து ஒலிபரப்பப்பட்டது.
 
இச்சேவையில் நடுநிலைமையான ஊடகச் சேவையின் மதிப்பு பலநாடுகளிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக தற்போது உலகெங்கும் ஒலிபரப்பாகும் பி.பி.ஸி உலக தொலைக்காட்சி, வானொலி சேவை உலகநாடுகளின் பல செய்திகளை உடனுக்குடன் எம்மை வந்தடையச் செய்கிறது.
 
இத்தகைய ஒரு முன்னணி ஊடகத்துறை இன்று ஒரு அவதூறுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு தத்தளிக்கிறது. இதுவரை இதன் தலைவரான ஜார்ஜ் என்ட்விசில் (George Entwistle ) அவர்களது பதவியைக் களைந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இன்னும் பல முக்கிய பதவியிலிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.

இந்நிலை தோன்றக் காரணமென்ன ?
 
நான் ஒருவாரங்களுக்கு முன்னால் தீட்டியிருந்த மடலில் குறிப்பிட்டிருந்த ஜிம்மி சவைல் (Jimmy Saville) அவர்களின் மீதான சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றியதோர் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதை கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம் தடை செய்தமை தொடர்பாக மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு பி.பி.ஸி உள்ளாகியிருந்தது.
 
அதனால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தீவிரமாக விசாரிக்காமல் தம்மீது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னனனி அரசியல்வாதி பலவருடங்களுக்கு முன்னால் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டிய ஒருவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தமது நியூஸ் நைட் (News night) என்னும் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பான செய்தியை ஒலிபரப்பிவிட்டார்கள்.
 
விளைவு ஒரு முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதியான லார்ட் மக் அல்ப்பைன் (Lord McAlpine) என்பவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.
 
பி.பி.சி நிகழ்ச்சியில் அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர்மீது தேவையற்ற அவதூரு சுமத்தப்படுவதற்கு தீர ஆராயப்படாமல் ஒலிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியே காரணம் என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட்டது. பி.பி.சியின் நடுநிலைமையான ஊடகத்தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்பதே பெரும்பான்மையோரின் ஏகோபித்த அபிப்பிராயம்.
 
பிரித்தானிய பத்திரிக்கை ஊடகத்துறையினர் கையாண்ட சில கபடத்தனமாகச் செய்தி சேகரிக்கும் முறையினால் பத்திரிக்கைகளின் மீது தணிக்கை அவசியமா என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அதன் முடிவுகள் வெளியாகப்போகும் தருணத்தில் தம்மீது விழப்போகும் பழியைத் திசைதிருப்ப, பத்திரிக்கைத் துறையினருக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலான சந்தர்ப்பம் ஆகி விட்டது எனச் சில அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
 
அது மட்டுமின்றி இத்தகைய ஒரு அனர்த்தத்தினால் முன்னணி நிறுவனமான பி.பி.சி உட்ப்பட ஊடகத்துறையினரின் சுதந்திரத்திர்கு வேட்டு விழுந்து விடுமோ என்றும் பழுத்த‌ அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.
 
தொடர்ந்து எடுக்கப்படப்போகும் நடவடிக்கைகள் தான் பிரித்தானிய ஊடகத்துறையினரை இந்நிகழ்வு எந்த அளவிற்குப் பாதிக்கப் போகிறது என்று உணர்த்தப் போகிறது.
 
ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானல் அது அந்நாட்டின் ஊடகத்துறையினருக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. ஆனால் அதைப்பாதுகாக்கும் கடமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டியது அவ்வூடகத் துறையையும் அதை சார்ந்தவர்களையுமே சேர்ந்துள்ளது.
 
இதை உணர்ந்துதான் எமது தமிழ்ப்பாட்டன் பாரதி ” தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது ” என்றானோ ?
 
மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்
 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *