சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

காலவேகத்தின் பரிணாம மாற்றம் நாகரீகம் எனும் போர்வையில் உச்சத்தை எட்டிப்பிடிக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தத்தை ஒவ்வொரு சமுதாயமும் தனக்குப் பிடித்த  வகையில் மாற்றியமைத்து தமது கண்மூடித்தனமான நடத்தைகளை நாகரீக வளர்ச்சி என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலம் இது.

ஒரு காலத்தின் நடைமுறை மற்றொரு காலத்திற்கு ஒவ்வாத நிலமை ஏற்படுவது சகஜம். காலத்திற்கேற்ப சில சில விடயங்களில் மனிதர்கள் தமது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக் கொள்ள‌ வேண்டிய தேவை இல்லாமல் இல்லை.

ஆனால் கால மாற்றத்தினால் மாற்ற‌ப்படமுடியாத, மாற்ற‌ப்படக் கூடாத விடயங்கள் பலவுண்டு. குடும்ப உறவுமுறைகள், கலாச்சார விழுமியத்தின் அடையாளங்கள், திருமணம் போன்ற பந்தங்களின் முக்கியத்துவம், குடும்ப அமைப்புமுறை என்பன இவற்றுள் அடங்குவது யதார்த்தமானது.

ஆனால் இந்த நூற்றாண்டிலே தனிமனித சுதந்திரம் எனும் போர்வையில் பல மனித வாழ்வின் அடிப்படைக் கலாச்சாரங்கள் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. குறிப்பாக திருமண வாழ்வின் முறிவுகள் மிகவும் சகஜமாகிப் போய்விட்டனவோ என்றொரு ஆதங்கம் மனதில் எழாமல் இல்லை.

திருமணம் எனும் பந்தத்தில் புகுந்து விட்டோம் எனும் காரணத்தினால் தம்மீது கண்மூடித்தனமாக இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு தவறானதே. இப்பந்தத்தை முறிப்பது சுலபமல்ல எனும் காரணத்தினால் தமது உறவு கொடுக்கும் அதிகாரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கொடுமைகள் புரியும் ஆணிடமிருந்தோ அன்றிப் பெண்ணிடமிருந்தோ பிரிந்து செல்வதைத் தவறென்று வாதிடுவது என் நோக்கமல்ல.

ஆனால் தனிமனித சுதந்திரத்தின் அர்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையை அறவே மறந்து சட்டத்தின் துணை கொண்டு மணவாழ்வை அவசரமாக முறித்துக் கொள்ளும் பலரை அனுபவரீதியாகப் பார்த்துள்ளேன்.

என்ன எங்கே செல்கிறது இந்த கருத்தாடல் ? என்று எண்ணுகிறீர்களா?

இந்த வாரம் இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபேத் அவர்கள் தமது 65வது திருமணநாளை மிகவும் அமைதியாகக் கொண்டாடியுள்ளதை நினைத்துப் பார்க்கையில் அவரது அந்த வாழ்க்கையின் வெற்றி மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேலே அலசியவை.

திருமண வாழ்வு என்பது ஒரு ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையில் நிகழும் ஒரு ஆயிரங்காலத்து பந்தம் என்பதே எமது ஆன்றோர்கள் எமக்கு போதித்த அனுபவக் கல்வி ( ஓ இப்போது ஆணுக்கும், ஆணுக்கும் அன்றி பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையில் கூட இப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறதே ! ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமோ ?)

இம்மணவாழ்க்கை வெற்றியடையவதற்கு பல காரண்ங்கள் கைகொடுக்கின்றன. ஆனால் அவற்றில் முக்கியமானது  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையேயாகும்.

இந்த 65 வருட கால மண்வாழ்க்கையில் எலிசபேத் மகாராணியாரும் அவரது கணவரான பிரின்ஸ் பிலிப் அவர்களும் ஒருவருக்கொருவர் எத்தகைய விட்டுக் கொடுப்புகளை செய்திருப்பார்கள் என்று எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது.

எனது தந்தை இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்த போது எனது பெற்றோர் மண்வாழ்க்கையில் 54 வருடங்களைப் பூர்த்தி செய்திருந்தார்கள். தந்தை மறைந்து சரியாக ஆறு வாரங்களில் எனது அன்னையும் அவருடன் இணைந்து கொண்டார்.

அவர்களது மணவாழ்வின் 54 வருடங்களும் அமைதியாக நடந்தது என்று சொன்னால் அது உண்மையாகாது. அவர்களுடைய மண்வாழ்வினிலே பல சமயங்களில் புயல் வீசத்தான் செய்தது ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையும், திருமண்ம் எனும் பந்தத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே அவர்களுக்கு கைகொடுத்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

எனது பெற்றோர்கள் சாதாரணமானவர்களே ! அவர்கள் மீது சமூகம் கொடுத்த எதிர்பார்ப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் என்று பெரிய அள்வில் எதுவும் இருக்கவில்லை.

ஆனால் இங்கிலாந்து மகாராணியாரும், அவரது கணவரும் ஒரு நாட்டின் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய கெள்ரவ பிரஜைகள் ஆவார்கள். அவர்களது நாட்டு மக்களின் பார்வையில்  உதாரணப் புருஷர்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்ட்ட ஒரு நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களது அந்த வாழ்க்கையில் அவர்கள் 65 வருட காலம் மணவாழ்வில் நிலைத்திருப்பது என்பது ஒரு சாதனையான விடயம் என்றே சொல்ல வேண்டும்.

இங்கிலாந்து மகாராணியார் இளவரசியாக இருந்த போது தனது கணவர் பிலிப் அவர்களை முதன் முதலில் 1934ம் ஆண்டும் பின்னர் 1937ம் ஆண்டும் சந்தித்தார். தனக்கு 13 வயதாக இருக்கும் போதே பிலிப் மீது தனக்குக் காதல் ஏற்பட்டதெனச் சொல்கிறார்.

அபோதைய இங்கிலாந்து மன்னரான ஜார்ஜ் அவர்களுக்கு பிலிப் தனது மருமகனாக வருவதில் மகிழ்ச்சி இல்லாதிருந்ததாம். காரணம் அவர் பெயரளவில் இளவச‌ராக இருந்து அவருக்கென ஒரு அரசோ அன்றி நாட்டின் தலைமைப்பதவியோ கிடையாது என்பதுவேயாகுமாம்.

பிபில் அவர்களின் தந்தை கிரேக்க நாட்டு இளவரசர்களில் ஒருவரான அன்ட்ரூவிற்கும், விக்டோரியா  மகாராணியாரின் மகள் வழி வந்த பேரப்பிள்ளையான இளவரசி லூயி அவர்களுக்கும் பிறந்த மகனாவார்.

இளவயதினிலே பாரிசில் கல்வி பயின்ற பிலிப் அவர்கள் மிகவும் திறமையாக பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிக்ளைப் பேசும் திறமை பெற்றவராவார்.

இங்கிலாந்து பட்டத்து இளவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்கள் பிரின்ஸ் பிலிப் அவர்களை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி லண்ட்னில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மணமுடித்தார்,. திருமணத்திற்கு முன்னதாக பிலிப் அவர்கள் தனது கிரேக்க மதத் தழுவலை நிராகரித்து ஆங்கில கிறித்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார். இவருக்கு இங்கிலாந்தின் இளவரசர் எனும் பட்டத்தையும், டியூக் ஆப் எடின்பரோ எனும் பட்டத்தையும் அப்போதைய இங்கிலாந்து மன்னரான 5ம் ஜார்ஜ் மன்னர் அளித்துக் கெளரவித்தார்.

நோயினால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரணமடைய இங்கிலாந்தின் இரண்டாவது எல்சபேத் மகாராணியாராக இங்கிலாந்தின் இளவரசி முடிசூடினார்.

தனது பட்டத்து அரசியான வாழ்விலே பல மாற்றங்களைச் சந்தித்தும் அவையனைத்தும் தனது மண்வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படாத வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

அவருக்குத் துணையாகத் தானும் எந்தவித சர்ச்சைகளுக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் பிரின்ஸ் பிலிப் அவர்களும் மகாராணியாருக்கு ஏற்ற கணவராக தனது வாழ்வை மேற்கொண்டார்.

இவர்களின் மூத்த மக்னான இளவரசர் சார்லசின் மணவாழ்க்கை முறிவடைந்து அவர் இளவரசி டயானவை விவாகரத்துச் செய்தார், இரண்டாவது மக்னான இளவரசர் அன்ட்ரூ தனது மனைவியை விவாகரத்துச் செய்தார்.

இளவரசி டயானா மரணமானார். இளவரசர் சார்ல்ஸ் அவர்கள் தனது பதின்ம வயதுக் காதலியை மறுமணம் செய்தார்.

இப்படியான பல பாதிக்கக்கூடிய விடயங்கள் அனைத்துக்கும் முகம் கொடுத்து இங்கிலாந்து ராணி எனும் தனது பதவிக்கு எவ்வித களங்கமும் ஏற்படாத வகையில் தனது பிரத்தியேக வாழ்க்கையை செப்பனிட்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தம்பதியரின் மணவாழ்க்கை நிச்சயமாக ஒரு சாதனையே.

ஒரு வியாபாரம் செழிக்க வேண்டுமானால் அவ்வியாபாரத்தின் விஸ்தரிப்புக்காக எமது உழைப்பை அர்ப்பணிப்பதைப் போல திருமண வாழ்க்கையின் வெற்றிக்காக எமது பண்புகளை மேம்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

“ஒரு மனிதன் விழாமலே வாழ்வது பெருமையல்ல‌
  ஒவ்வொருமுறை விழுந்த போதும் எழுந்தான் என்பதுவே பெருமை “

அடுத்த மடலில் சந்திக்கும் வரை

அன்புடன்
சக்தி சக்திதாசன்
 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (33)

  1. மணவாழ்க்கை இன்றைய நவீன இளைஞர்களிடையே நீடித்து நிலைப்பதில்லை என்பது ஓரளவு உண்மையே. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை என்று போதிக்கப்பட்டபின் மணவாழ்க்கை பெரும் மாற்றம் கண்டுவிட்டது. பெண்ணும் வேலைக்கு செல்வதால் குடும்பப் பொறுப்பில் அவளின் கவனமும் குறைந்துவிட்டது. கணவனைக் கவனித்து பணிவிடை ஏன் செய்யணும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது. கணவனுக்கு சமைத்துப் போடுவதும், அவன் சாப்பிட்ட எச்சில் தட்டை கழுவுவதும், அவனின் அழுக்கு ஆடைகளைத் துவைப்பதும் மனைவி கட்டாயம் செய்யத் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அவனின் காம இச்சைக்கு அவனுக்கு வேண்டும்போதெல்லாம் பலியாகவேண்டுமா என்றுகூட கேள்விகள் எழுப்பப்படுகின்றன! அவனுக்கு பிறக்கும் பிள்ளைக்கு கட்டாயமாக தன்னுடைய பால் தந்து தனது மார்பக அழகை கெடுத்துக்கொள்ள வேண்டுமா, முழுநேரமும் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டுமா, அதற்கு ஒரு ஆயா அல்லது வேலைக்காரி போதாத என்ற கேள்விகளும் எழவே செய்கின்றன. கணவனின் அப்பா அம்மாவை ( மாமனார், மாமியார் ) கவனிப்பது என் வேலை இல்லை என்று எண்ணும் பெண்களும் உளர். கணவனுக்கு பணிவிடை செய்வதும், அடங்கி நடப்பதும் பெண்கள் படிப்பறிவு இல்லாத காலத்தில் நடந்த பெண்ணடிமை, இனியும் நாங்கள் அப்படி கண்மூடித்தனமாக நடக்கமாட்டோம் என்று குரல் எழுப்பும் காலம் இது. முடிந்தவரை கூடி வாழ்வோம், முடியாவிட்டால் விவாக ரத்துக் கோரி வேறு ஒருவனுடன் சேர்வோம் என்ற மனநிலையில் உள்ள பெண்கள் அதிகரித்து வருகின்ற
    கணவன் மனைவியுடனே புரிந்துணர்வு குறைந்து வரும் காலம் இது. ஈகோ அதிகமாக முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது. இதனால் மணமுறிவுகள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. நவீன நாகரீகத்தின் ஒரு முக்கிய விளைவு மணவாழ்க்கை முறிவு !
    ஒரு பெண் கணவனுக்கு அடங்கிப்போனால் அவளின் சுதந்திரம் பறிபோகிறது. இல்லாவிட்டால் மணவாழ்க்கை கெட்டு மணமுறிவில் முடிகின்றது!
    இந்த கட்டுரை ஆசிரியர் மணவாழ்க்கையில் புரிந்துணர்வின் முக்கியத்துவத்தை கூறும் வண்ணமாக எலிசபெத் மகாராணியையும் அவரது கணவர் பிலிப் இளவரசரையும் உதாரணம் காட்டியுள்ளது சிறப்பாகும். அவர்களின் பின்னணி வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இரு புதல்வர்களின் மணவாழ்க்கை மணமுறிவில் முடிந்தாலும் அவர்கள் தொடர்ந்து ஓர் உதாரண தம்பதியர்களாக உலகுக்கு உணர்த்தி வருகிறார்கள் என்பதை சிறப்பாக கட்டுரையாளர் கூறியுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!…டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. காலம் மாறியதால் இதெல்லாம் சாதனையாக தோன்ற ஆரம்பிக்கிறது நமக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.