தலையங்கம்

வல்லமையின் பார்வையில் 2012

பவள சங்கரி

தலையங்கம்

2012ல் நம் அகண்ட பாரதத்திற்கு  பிரச்சனைகளும் அகண்டு ஆழ்ந்து இருப்பதுதான் வேதனைக்குரிய விசயம்.  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்பது போலத்தான் நம்முடைய வளர்ச்சிப்பாதையும்  உள்ளது நம் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மக்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும், உயர்ந்த இலட்சியங்களுடன் வாழ்பவர்களாகவே இருக்கின்றனர். தனி மனித முயற்சிக்கு விதவிதமான முட்டுக்கட்டைகள் போடாமல் அரசாங்கம் தகுந்த ஒத்துழைப்பை அளித்து வந்தாலே நம்முடைய இந்தியத் திருநாடு வல்லரசாகிவிடும் என்பதில் ஐயமில்லை. நம்முடைய கட்டமைப்பைப் பொறுத்தவரை சிறு தொழில்களைச் சார்ந்தே, பெருந்தொழில்கள். என்றிருப்பதால், பெருந்தொழில்கள் தானாகவே வளர்ச்சியடைய முடியாது. சிறு தொழில்களும் வளர்ந்தால்தான் பெருந்தொழில்களும் வளர முடியும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் பெருந்தொழில்கள் கட்டமைப்பினுள்ளே சிறுதொழில்களும் அடங்கிவிடும். ஆனால் இந்தியாவில் சிறு தொழிலைச் சார்ந்துதான்  பெருந்தொழில் இருப்பதால் நம்முடைய வளர்ச்சி எல்லா வகையான மக்களைச் சார்ந்த வளர்ச்சியாக இருக்கிறது. இன்று சிறு தொழில்கள் நசிந்து விடும் நிலையில் சூழ்நிலைகள் உருவாகிவிட்டன. தினமும் 4 அல்லது 8 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் தொழிற்கூடங்கள் எவ்வாறு செயல்பட முடியும்?. இதன் விளைவாக உழைப்பதற்குத் தயாராக இருந்தும், சிறந்த திட்டங்கள் கைவசம் இருந்தும் தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் சிறு முதலீட்டாளர்களும்,தொழிலாளர்களும் வாழ வழியின்றி திண்டாடும் சூழலில் 2012ம் ஆண்டு கடந்து போய் உள்ளது. விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால் அதன் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. வானி்லை மாற்றங்களால் வறட்சியும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்குரிய மின்சாரமும் இல்லாததால் பல விவசாயிகள் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை எற்பட்டுள்ளது, மின்சாரம் இல்லாத காரணத்தினால் விலை பொருட்களை பயன்படுத்தக்கூடிய ஆலைகள் பெருமளவில் கொள்முதல் செய்யாத காரணத்தினால் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால், பெரும் நட்டத்திற்குள்ளாகி செய்வதறியாது,  தொடர்கின்ற மரண ஓலங்கள்தான் விவசாயிகள் வீட்டில் கேட்க முடிகிறது. நமது அரசாங்கம் 2013 ல் இதற்கு சரியான தீர்வு சொல்லுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலை தொடருமானால் படித்த இளைஞர்கள் நாளுக்குநாள் பெருகி வருகிற சூழலில், வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற ஆலைகள் சரிவர இயங்காததால் படித்த இளைஞர்கள் மத்தியில்  மன அமைதியின்றி வாழும் நிலை உருவாகக் கூடுமாதலால் பல பிரச்சனைகள் முளைக்கலாம். மன விகாரங்கள் அடைவதால் பாலியல் பலாத்காரங்களும், கொலை, கொள்ளை போன்ற செயல்கள் நடப்பதற்கும் வழி வகுக்கின்றன. பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டிய அதே நேரத்தில், பெண்களுக்கான தற்காப்புக் கலைகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். பெண்களும் கால்ச் சூழல்கள் குறித்த விழிப்புணர்வுடன் சிந்தித்து செயல்படவேண்டும்.

இந்த 2013ல், 2012ல் நடந்த துயரமான நிகழ்வுகளைத் தவிர்த்து வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய நல்ல சூழ்நிலை உருவாகுவதோடு, இந்த 2013 நமது வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

ப்டத்திற்கு நன்றி:

http://2013-wallpapers.blogspot.in/2012/07/happy-new-year-wallpapers-2013.html

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க