கவிநயா

 

எப்படி அடக்கினாலும் அடங்காமல்

விட்டேனா பார் என்று

எகிறுகிறது மனசு.

 

பொறு, பொறு,

இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறு

என்கிறது அறிவு.

 

அடக்கி மடக்கி முடக்கி வைத்தவை யெல்லாம்

அடிவயிற்றில் சென்று அமர்ந்து கொண்டு

அனலாக எரித்துத் தகிக்கிறது.

 

விழிகளினின்றும் வழிகின்ற உவர் புனல்,

வெந்நீர் ஊற்றாய் முகிழ்த்து,

பேரருவியாய்க் கொதித்துப் பெருகுகிறது.

 

நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து

நெருப்புக் கங்குகளாய்ப் பிரசவிக்கத் தயாரான வார்த்தைகள்,

நாவின் நுனியில் நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றன.

 

தெறிக்கும் கனலின் வெம்மை விதையில்

ஊறித் திளைத்து முளைக்கத் தொடங்கி யிருக்கிறது,

நெற்றிக் கண்ணொன்று.

 

படத்துக்கு நன்றி: http://theholyarunachala.wordpress.com/category/rajarishi-sathguru-sri-rajalinga-swamigal-merges-with-lord-sri-arunachaleshwara-2/

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நெற்றிக் கண்

  1. சிறுமை கண்டு பொங்குவது அருமையான கவிதையில் தெரிகிறது. படித்து முடித்தபின், வரிகளின் வெம்மை படிப்பவர் மனதுள்ளும். பொறுமை மீறிய  நிலையில் உணர்ச்சிப் பிரவாகம் எப்படி இருக்கும் என்பதை இதை விடவும் படிப்படியாக விளக்க இயலாது.  முதலில் குமுறுதல், பின்னர் அழுகை, தாங்கமுடியாமல் வெடிக்கத் துடிக்கும் வார்த்தைகள், நியாயமான, தார்மீகக் கோபத்தின் உச்சியில் முளைக்கும் நெற்றிக் கண் என்று அபாரமான உணர்ச்சிக் கோவை. மிக்க நன்றி கவிநயா அவர்களே!!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *