சு. கோதண்டராமன்

புலவர் வகுத்தபடி புகழோடு  தோன்றினாய்.

பிறக்கும் கணமுதலே பிரகாசம் பரப்புகிறாய்.

கடமை முடிந்தவுடன் கணமும் உயிர் தரியாய்.

காலம் பலவாகக் கவிந்திருந்த இருளெனினும்

நிற்றல் இயலுமோ நின் முன்னே தேவனே.

சார்ந்தாரைக் காத்திடுதல் சான்றோரின் இயல்பென்பர்.

நீயோ சார்ந்தாரை நீறாக்கி மகிழ்கின்றாய்,

உயர்வும் தாழ்வுமென உனக்கில்லை பேதங்கள்

உன்னதக் கலைப் பொருளை ஓசையின்றி விழுங்கிடுவாய்.

அழுகிய பிணத்தினையும் ஆசையுடன் உண்டிடுவாய்

அழுக்கு தூசிகளை அழித்திடவே விரும்பிடுவாய்

பழையன நைந்தன உன் பசி வாய்க்கு உணவாக்கி

புதுமை பிறத்தற்குப் புவி தன்னில் வழியமைப்பாய்.

தங்கம் ஒளிர்வதுன் தயவின்றி நடைபெறுமோ?

வீட்டில் சமையலகம் வீதியில் வாகனங்கள்

எந்திரத் தொழிலகங்கள் யாவையும் இயக்கிடுவாய்

நீயின்றி எனக்கிந்தப் பொருளெல்லாம் ஏது?

நானே தான் ஏது?

என்னிடம் நீ இன்றேல் எனைத் தூக்கி நான்கு பேர்

உன்னிடம் சேர்ப்பித்தல் உலகில் மரபன்றோ?

மானிடரே வாருங்கள், மகரிஷிகள் சொன்னபடி

வேத மொழி சில கூறி வேண்டிடுவோம் அக்கினியை.

அக்னிமீளே புரோஹிதம்

யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம்

ஹோதாரம் ரத்ன தாதமம்

முன்னின்று வழிநடத்திச் செல்பவனே போற்றி

முதன்மையாய் நலம் செய்யும் முன்னவனே போற்றி

யாகத்தின் தலைவனாய் இயங்கிடுவாய் போற்றி

யாகங்கள் செய்பவனும் நீயே தான் போற்றி

சிறப்பான செல்வங்கள் சேர்த்திடுவாய் போற்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.