Featuredஇலக்கியம்பத்திகள்

தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 11

திவாகர்

ஒரு நல்ல திரைப்படம் எனும்போது, நல்ல கதையமைப்பு, அளவான திரைக்கதை, மனதில் பதியும்படியான வசனம், திறமையான டைரக்‌ஷன், ஒலி, ஒளி, இசை, கருத்தாழம் மிக்க பாடல்கள், அதற்கும் மேலாக திறமையான நடிக நடிகையர்கள் இவைகள் எல்லாம் அழகுற சேர்ந்தால்தான் அந்தத் திரைப்படம் வெற்றிகரமாக அமையும். பல நாட்கள் மக்களால் பார்க்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் புகழின் உச்சியை அடையும். ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கூட ஒரு நல்ல திரைப்படம் போலத்தான். ஆனால் இந்தத் தொடரில் இரண்டு பேர், ஒருவர் தேவன் இன்னொருபேர் சில்பி, இருவர் மட்டுமே சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தை வாசகர்களிடையே இத்தொடர் மூலம் ஏற்படுத்தினர் என்று சொல்லலாம்.

1948 ஆம் ஆண்டில் ஓவியர் சீனிவாசன் என்னும் ’சில்பி’யைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில் கடவுளர் மற்றும் சிற்பச் செல்வங்களை அப்படியே சித்திரத்தில் கொண்டுவந்து பதிப்பித்தால் என்ன என்ற ஒரு திட்டம் தேவன் மூளையில் உதித்திட, அதை உடனடியாக செயலில் காட்டினார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ சிறப் எழில் கூட்டிய எல்லாக் கோயில்களையுமே தென்னாட்டுச் செல்வங்களில் காணலாம். முக்கியமாக தஞ்சை, தாராசுரம், திரிபுவனம்,  ஸ்ரீரங்கம், பேரூர் போன்ற கோயில்களில் உள்ள தெய்வங்களோடு அங்கு கொஞ்சும் எழிலுடன் காணக்கிடைக்கும் சிறப்ங்களையும் கோட்டோவியமாகக் காண்பிக்கப்பட்டது. தென்னாட்டுச் செல்வங்களில் தலையானதாக சில்பியின் வரைவுகள் போற்றப்பட்டன. மேலே குறிப்பிட்டது போல திரைக்கதை வசன டைரக்‌ஷனை தேவன் பார்த்துக் கொள்ள ஏனைய முக்கிய வேலைகளை சில்பி பார்த்துக் கொள்ள, இந்தத் தொடர் வெளிவர வெளிவர  ஆனந்த விகடன் பத்திரிக்கையின் தரம் எங்கோ மேல்வானத்து உச்சியில் ஏற்றப்பட்ட காலங்கள் கூட அவைதான் என்றே சொல்லலாம். அந்தச் சமயத்தில் ஆனந்த விகடன் நிறுவனமான ஜெமினியின் ’சந்திரலேகா’ திரைப்படம் வேறு திரையுலகத்தை கலக்கிக்கொண்டிருந்தது என்பதையும் வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் என்னதான் திறமையான டைரக்டர், நல்ல திரைக்கதை போன்றவை பெரும்பங்கு பெற்றாலும், அதை மக்களுக்கு வெளிப்படுத்தும், மக்கள் பார்த்தவுடன் ரசிக்கும் வகையில் நடித்திட்ட நடிகர் மட்டுமே பேரும் புகழும் அதிகமாகப் பெறுவார்கள். கூடவே இசையும் பாட்டும் கனஜோராக இருக்கும் பட்சத்தில் பாடகர்களும், இசையமைப்பாளரும் பெரும் புகழ் பெறுவார்கள். ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில் நடிப்பது, இசை, ஒளியாக்கம், பாடல் எல்லாம் ஓவியர் சில்பியுடையதாகும். திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் என்பது தேவன் அவர்களுடையதாகும். ஓவியர் சில்பியின் முழுப் பரிமாணத்தை வெளிப்படுத்தியதாகும். ஆனாலும் தேவன் இந்தக் கட்டுரைகளில் எந்தவொரு இடத்திலும் தன் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை என்பது ஒரு சிறப்பு.

தென்னாட்டுச் செல்வங்கள் ஏறத்தாழ 13 வருடங்கள் (சிற்சில இடைவெளிகளுடன்) ஆனந்த விகடனில் தொடராகச் சென்றதாக பேராசிரியர் பசுபதி அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஓவியர் கோபுலு இந்தத் தொடரைப் பற்றித் தெரிவிக்கையில் தேவன் இருந்தவரை தேவனே தன் கைப்பட கட்டுரை எழுதியதாகத் தெரிவிக்கிறார். (எங்களை வழி நடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-இல் ஆனந்த விகடனில் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் ‘தேவன்’. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிக ஆர்வத்தோடு, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். “ )  (http://s-pasupathy.blogspot.in/2012/11/1_30.html) “ (சில்பி) தான் வரைந்த சிலைகளைப் பற்றிய குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டுவந்து , அந்தப் படங்களைப் பற்றி தேவனிடம் விளக்கிச் சொல்வார். தேவன்தான் அதை நயமாக எழுதுவார்” (http://s-pasupathy.blogspot.in/2013/03/8.html)

அதே போல தேவன் மறைந்த பின்னரும் பிற்காலத்தில் இந்த தொடர்க் கட்டுரை வரத்தான் செய்தது. இந்தக் கட்டுரைகள் தேவனுக்குப் பிறகு பி.ஸ்ரீ. ஆச்சார்யா தொடர்ந்திருக்கிறார் என்பது பேராசிரியர் பசுபதியின் கருத்து. எழுத்தாளரான பி.ஸ்ரீ. ஆச்சார்யாவும் மிகச் சிறந்த புலனாய்வு எழுத்தாளர் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது ஆழ்வார்கள் புத்தகம் இன்னமும் எனக்கு ஒரு வேதப்புத்தகம் போல.

தேவன் தன் காலத்தில் எழுதினாலும் ஏன் தன் பெயர் போட்டுக்கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. ஏற்கனவே அவரது புதினங்கள் அவர் பெயர் போட்டு தொடராக விகடனில் வந்துகொண்டிருந்ததால் இப்படி இன்னொரு தொடருக்கும் வேண்டாமே என்று போடாமல் இருக்கலாம். தேவனின் முழுப்பரிமாணம் தெரியும் எழுத்துகளுக்கே தேவன் தன் பெயரைப் போடுவதும் உண்டு என்ற காரணமாகவும் இருக்கலாம். இந்தத் தொடர் ’தேவன்’ என்கிற தனிப்பட்ட எழுத்தாளரின் சொந்தம் அல்ல என்று அவர் நினைத்திருக்கலாம். அதே சமயம் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பவர் தன் புத்தகத்தில் எத்தனையோ பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.  தேவன் பத்திரிக்கை ஆசிரியர் என்பதால் அவருக்குள்ள ஏகபோக உரிமையில் இந்தக் கட்டுரைத் தொடருக்கு தன் பெயர் போட்டுக்கொள்ளவில்லை என்று கூட சொல்லலாமோ என்னவோ. இருந்தாலும் இது தேவன் எழுத்துதான் என்பதற்கு ஒரு சான்று தருகிறேனே..

திரிபுவனக் கோயில் கட்டுரையில் ’கஷ்டப்படும் இஷ்ட தெய்வங்கள்’ என்ற தலைப்புப் பெயர் கொடுத்தவர் சில ஒதுக்கப்பட்ட சிலைகளைப் பற்றி வர்ணிக்கையில் இப்படி எழுதுகிறார்.

செல்லும் காலமெல்லாம் அதிகாரம் செலுத்திய தெய்வங்கெளெல்லாம் ‘இன்று கல்லானோம், செம்பானோம், எல்லாம் உங்கள் தயவினால்தான், உங்கள் நாஸ்திகத்தால்; அதற்கும் மேலாக உங்கள் ஆஸ்திக டம்பாச்சாரி விலாஸங்களால்தான்’ என்று சொல்லாமல் சொல்கின்றன.

ஒரு உடைந்த பிள்ளையார் சிற்பத்தில் மேலும் உடைக்கப்பட்ட ஒற்றைத் தந்தத்தைப் பற்றி எழுதுகிறார்.

“ஒரு காலத்தில் பூஜைக்கு உபயோகமாயிருந்து பின்பு கை கால்கள் பின்னமடைந்து, இப்போது இம்மண்டபத்தில் சிற்பக்காட்சிகளுக்கிடையேதான் இந்தப் பிள்ளையாரும் காட்சி தருகிறார்.

“வேதவியாஸர் மகாபாரதம் பாட விநாயகர் மேரு மலையை ஏடாகக் கொண்டு எழுதத் தொடங்கினாரே, அப்போது எழுத்தாணி இல்லையே என்று ஒரு கொம்பை (தந்தம்)  முறித்துக் கொண்டு, ஒற்றைக் கொம்பராக இருந்தாரல்லவா? அந்த மிஞ்சிய தந்தத்தையும் உடைத்துவிட்டான் ஒரு புண்ணியவான்’.

இன்னொரு இடத்தில் இதே கோயிலில் நாயர் மண்டபத்தில் ஒரு இடிந்த சிலையைப் பற்றி வர்ணிக்கிறார்.

‘நாயர் மண்டபத்து மூலைத் தூணின் கீழ், பிரம்மாவுக்கு இடது பக்கத்தில், வெண்சாமரம் வைத்துக் கொண்டு, சொகுசாக நிற்கும் சேடியின் சிற்பமொன்று காணப்படுகிறது. இது உருவில் சிறிதாக இருந்தாலும் நுட்ப வேலைப்பாடுகளிலும், ஜடையழகிலும் வெண்சாமரத்தின் ;கூந்தல்; வேலைப்பாட்டிலும், ரஸிகருள்ளத்தைப் பெரிதும் கவர்கின்றது.

மண்டபத்தின் கீழ்ப்பாகம் புதைந்து கிடக்கிறது. நம்மவர்களின் சிற்பக் கலைச் சுவை எவ்வளவு தூரம் க்ஷீணித்துக் கீழ்ப்பட்டிருகிறது என்பதற்கு ஒரு அறிகுறி போலே”

ஆனாலும் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் பரவிக்கிடந்த இந்த கோயில் சிற்பங்களை ஒரு சமூகத் தொண்டாகக் கருதி இப்படி ஒரு அழகிய விதத்தில் தொடராக பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்கு தேவனுக்கு உரியது. இந்தத் தொடரைப் படித்ததினால் சிற்பத் தெளிவு மக்களிடையே பெருகியது என்பதை விட நம் பழைய பண்பாட்டுக் கருவூலம் எச்சரிக்கையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வாவது படிக்கும் ஒவ்வொரு வாசகனிடத்தேயும் ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். சமூகம் சார்ந்ததாகவும் தெய்வீகம் மிக்கதாகவும், நம் கலாச்சாரத்தின் பெருமையை மிகப் பெரிய அளவில் ஒரு வாராந்தரி மூலம் கொண்டு சென்ற தேவன் அவர்களை நம் தமிழுலகம் என்றும் மனதில் நினைத்திருக்கவேண்டும். பத்திரிக்கையுலகில் இது பெரும் மாற்றத்தையும் உண்டுபண்ணியது என்றே சொல்லலாம். வாசகர்கள் எந்த நல்ல கருத்து கொண்ட எழுத்துக்களையும் எந்த நிலையிலும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையையும் பத்திரிகைகளிடையே இந்த சமுதாயத் தொடர் தோற்றுவித்தது. இல்லையானால் பதின்மூன்று வருடங்கள் இந்தத் தொடர்தான் தொடர முடியுமா?

ஆனால் தற்சமயத்தில் இன்றைய வாராந்தர பத்திரிகைகளின் நிலை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இன்று , பரபரப்பு செய்திகளையும் திரைப்படத்து நடிக நடிகைகளின் செய்திகளையும் அரசியல் ஆதாயச் செய்திகளுமே தங்கள் தலையாயப் பணியாகக் கொண்டு செயல்படும் வாராந்தரிகள், சமுதாயப் பணிகளிலும், தரத்திலும் – தேவன் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் – க்ஷீணித்துக் கிடக்கின்ற நிலையில் உள்ளன.. இப்படி ஒரு பொதுஜனத் தொண்டாக ஒரு உன்னதத் தொடராக  வாராந்தரிகளில்  எதுவும் வருவதில்லை என்ற ஏக்கம் எல்லோருக்குமே வருவதுண்டு.

இன்றும் கூட தென்னாட்டுச் செல்வங்கள்  ஒவ்வொரு தொடரிலும் வெளிவந்த ஓவியர் சில்பியின் தெய்வீக ஓவியங்கள் மக்கள் இதயங்களைக் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஓவியர் சில்பிக்கு இவைகளை ரசித்து ஆராதித்த மக்கள் ‘தெய்வீக ஓவியர்’ என்றே விருது கொடுத்து மகிழ்ந்தனர். ஓவியங்களின் உன்னத தரத்தை தமிழ்நாட்டில் வானுயர உயர்த்திய ஓவியர் சில்பி இன்றைக்கும் பல ஓவியர்களின் குருவாகத் தெரியப்படுகின்றார். இன்றைக்கு ஆனந்த விகடன் பதிப்பகம் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரை ஒரு புத்தகமாகக் கொண்டு வந்து – படைப்பு ஓவியர் சில்பி என்று பெரும்பெயர் கொடுத்து வெளியிட்டிருக்கிறது. நம் கட்டுரையிலும் தெய்வீக சில்பியின் ஒரு சில தெய்வீக ஓவியங்கள் உங்கள் பார்வைக்குக் கொடுத்திருக்கிறேன்.

இந்த ஓவியங்களில் புத்தக வண்ணத்தில் உள்ளது பேராசிரியர் பசுபதி அவர்களின் வலைப்பகுதியிலிருந்து அவர் அனுமதியோடு கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டோவியங்களுக்கு நன்றி : ஆனந்த விகடன்.

இனி தேவனின் கட்டுரைகளுக்கும், சிறுகதைகளுக்கும் வருவோம். தேவன் கட்டுரைகளும் சிறுகதைகளும் மட்டுமே ஆனந்தவிகடன் பத்திரிகையில் கல்கி ஆசிரியாக இருந்தவரை எழுதிக் கொண்டிருந்தார். 1939 இல் ஆரம்பித்த மைதிலி தொடர்கதை ‘நாரதர்’ பத்திரிகையில்தான் வெளிவந்தது. ஆனந்தவிகடனில் அவர் உதவி ஆசிரியராக இருந்தபட்சத்தில் ஏறத்தாழ முதல் எட்டாண்டு காலத்துக்கு தேவனின் கட்டுரைகளும் சிறுகதைகளும் வந்து வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. கட்டுரைகளில் அந்தக் காலப் போக்கும், அரசியலும், முக்கியமாக உலகநாடுகளின் அரசியலும், இந்திய பிரிட்டிஷ் அரசியலும் பேசப்படுவதைப் பார்த்தால் நமக்கு 1934 இலிருந்து அடுத்து வரும் ஆண்டுகளின் நிலை கண்கூடாகத் தெரியும். உலகப் போரைப் பற்றிய கிண்டலும் நக்கலும் கலந்த கட்டுரைகள் கூட தேவன் எழுதியுள்ளார். முதலில் சிறுகதைகளின் கதைக்கு வருவோம். பின் கட்டுரையையும் ஒரு கை பார்ப்போம்.

தொடர்ந்து வரும்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

 1. Avatar

  Migavum Arumaiyaana pathivu saar. am reminded of this song of the rettai pulavar

  கேட்டவரமளிக்கும் கீர்த்திமிகு தெய்வங்காள்!
  கூட்டோடு குடியெங்கே போனீர்? – பாட்டாய்கேள்!
  செல்காலமெல்லாம் செலுத்தினோம்; அல்காலம்
  கல்லானோம் செம்பானோம் காண்!

  vj

 2. Avatar

  //ஆனால் தற்சமயத்தில் இன்றைய வாராந்தர பத்திரிகைகளின் நிலை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இன்று , பரபரப்பு செய்திகளையும் திரைப்படத்து நடிக நடிகைகளின் செய்திகளையும் அரசியல் ஆதாயச் செய்திகளுமே தங்கள் தலையாயப் பணியாகக் கொண்டு செயல்படும் வாராந்தரிகள், சமுதாயப் பணிகளிலும், தரத்திலும் – தேவன் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் – க்ஷீணித்துக் கிடக்கின்ற நிலையில் உள்ளன.. இப்படி ஒரு பொதுஜனத் தொண்டாக ஒரு உன்னதத் தொடராக  வாராந்தரிகளில்  எதுவும் வருவதில்லை என்ற ஏக்கம் எல்லோருக்குமே வருவதுண்டு.//

  வாரப் பத்திரிகைகள் குமட்டிக் கொண்டு வருகின்றன.  எந்த வாரப் பத்திரிகையும், (துக்ளக் தவிர்த்து)  படித்துப் பல வருடங்கள் ஆகின்றன.  அவற்றின் தரமோ, அவற்றில் என்ன வருகின்றது என்பதோ எதுவுமே தெரியாது. 

 3. Avatar

  சிவப்புப் பின்னணியில் நீல வண்ண எண்களும் அதற்கான விடை எழுத்தில் நீல நிறத்தில் வருவதும் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது. 🙁

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க