முத்தம்
பழமைபேசி
இது என்றாவது நிகழ்கிற சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ அன்று. நியூயார்க் பங்குச்சந்தை திறவுபடுகிற நாட்கள், திறவுபடாத நாட்கள், அமெரிக்க டாலருக்கும் தங்கத்துக்கும் ஒட்டு உறவு இருக்கிறதாக நினைத்துக் கொள்கிற நாட்கள், நினைக்காத நாட்கள் என அனைத்து நாட்களிலும் நடைபெறுகிற உவப்புகால பூசையிது. உடனடியாக குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது எனக்கு.
சிந்தைக்கெட்டிய முதல் முத்தமாரி அதுதான். இரு கன்னங்களிலும் அடுத்தடுத்து மாற்றி மாற்றித் தொடர்ந்து முத்தங்கள் கொடுத்துக் கொஞ்சி நனைத்தவள் என் சின்னம்மா. அந்த நாள் தொட்டு, என்னை இடைவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது முத்தம்.
காத்து கறுப்பு அண்டிவிட்டதென்று சின்னம்மாவுக்குக் கல்யாணம் செய்து வைக்காமலே விட்டு விட்டார்கள். வீட்டில், ஊரில், எல்லாருக்கும் அவளைக் கண்டால் வேடிக்கை. அம்மா சாயலை ஒத்திருக்கும் சின்னம்மாவுக்கும் அம்மாவுக்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சின்னம்மாவுக்கும் அது வசதியாய்ப் போயிற்று. இடுப்பில் வைத்துக் கொண்டு எங்கும் கிளம்பி விடுவாள். அடிக்கடி கொஞ்சி முத்தமிட்டு அணைத்துக் கொள்வாள். அள்ளியள்ளிக் கொடுத்தவள் தனக்கொரு போதும் கேட்டு வாங்கிப் பெற்றதாக எனக்கு நினைவில்லை. அந்நினைவுகள் அறிவுப்புலத்தில் வாசம் கொள்ளத் துவங்கிய நாளிலிருந்து என்னை ஆண்டு வருகிறது முத்தமாரி.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு எதுவும் நிகழாத இனிய இந்நாளில், முத்தக் கச்சேரி இடம்பெறுகிறது எங்கள் அலுவலக நண்பர்களிடத்திலும். அதற்குக் காரணம் குதிரைவால் டீனா. முகபாவங்களுக்கொப்ப நர்த்தனம் மேற்கொள்ளும் அந்த குதிரைவால் சடை. எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அவள். வாய்த்துடுக்கும் விம்மித்திமில்கிற குயமிரண்டும் உடையவள். சிரித்து மாளும் அவளுக்கு ஒரே ஒரு கணவன், மைக் ஜெஃப்பர்சன். ஃபெட்எக்ஸ் கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அவனுக்கு வேலை. அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் டீனாவை எங்கள் அலுவலக வாயிலில் இறக்கி விட்டுப் போவான். போகிறவன் சும்மா போக மாட்டான். மனங்குழையும் காட்சியொன்றை எங்களுக்கு ஊட்டிவிட்டுப் போவானவன். இன்றைக்கு அது நிகழாமற்போனதுதான் முத்தம் குறித்தான எங்களது அரட்டைக் கச்சேரிக்கான வித்தாகும்.
நண்பகல் பசியாற்றுகைக்கு மெக்சிகன் உணவகமொன்றுக்குப் போவதெனத் தெரிவானது. அதன்படியே குதிரைவால் டீனாவும் நாங்களும் குடோபா துரித உணவகத்துக்குப் போய்ச் சேர்கிறோம். மோவாய் உச்சிநோக்க, கண்ணிமைகள் சரிந்திருக்க அவள் சிரித்துக் கொண்டிருக்கிற தருணமொன்றில், அவளது பெருமானங்களைக் களவாய்க் கண்டு இரசிக்கிறான் தொப்பை தீபக். அப்படியே நேக்காய்ச் சந்தில் சிந்துவும் பாடுகிறான்.
“”என்ன டீனா? காட்சி எதுவும் எங்க கண்களுக்கு சிக்கலையே இன்னைக்கு??”, வாகாய் வீசியெறிகிறான் தூண்டிலை.
“ஏய், காய்ஸ்? அதெல்லாமா பார்த்திட்டு இருக்கீங்க?? மைக்கேலுக்கும் எனக்கும் சும்மா ஒரு சின்ன ஊடல். அவன் ஃபேசுபுக்ல என்னோட தங்கச்சிகூட எதோ வறுத்துகிட்டு இருந்தான். அதான் சும்மா தொங்கல்ல விட்டிருக்கேன்!!”, மீண்டும் மோவாயை உயர்த்திச் சிரித்தாளவள். இம்முறை தொப்பை தீபக்கோடு சேர்ந்து நாங்களும் கண்ட பேறு கொண்டோம். அது படைக்கப்பட்ட படைப்பினுடைய வெற்றியேயன்றி காமனின் சிருங்காரக் குறும்பல்ல.
அமெரிக்காவில் அப்படித்தான். அவ்வப்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அல்லாவிடில் அவனுக்கு வேறொருவளுடன் தொடுப்போவென மனம் கிலேசங்கொள்ளும் அவளுக்கு. முத்தம் கொடுத்து அண்டியிருக்காவிடில் தொடுப்பு தூர்ந்து அந்தோவெனப் போய்விடுவாளோ என்கிற அச்சம் ஆடவனுக்கு. இப்படியாகத்தான் அடிக்கடி ஐலவ்யூ சொல்லிக் கொள்வதும் இச்சு கொடுத்துக் கொள்வதும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நாம் சொல்லிக்கொள்கிற இந்த மணித்துளியிலே கூட ஆயிரமாயிரம் இச்சுகள் பிறந்திருக்கும். சம்பிரதாயச் சடங்குகளாய் சிலபல ஆயிரங்களும், உள்ளபடியே மனத்தின் ஆழத்தில் இருந்து சிலபல ஆயிரங்களுமாக ஐலவ்யூக்கள் உதிர்ந்திருக்கும். ஹனி தடவப்பட்ட அம்புகளுக்குக் கூடுதல் வீரியம் உண்டு.
போட்டு வாங்கி நூதனம் கறப்பதில் யோகாசன கார்ப்பரேட் குருக்களை எல்லாம் மிஞ்சக்கூடியவன் தொப்பை தீபக். அதனாலேயே அவன் எங்கள் நிறுவனத்தினுடைய விற்பனைப் பிரிவின் இயக்குநராய் கோலோச்சுகிறான். முத்தக்கச்சேரியில் முதல் கறவையை நடத்திக் கொண்டிருப்பவனும் அவனே. நாகரிகமாயும் படிப்படியாயும் அடி மேல் அடி வைத்துக் கொண்டிருக்கிறான். அதை இரசித்தபடியே கச்சேரியில் முனைப்பாய் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள் டீனா.
காலையில் எழும்பும் போதே முத்தம் கொடுத்துவிட்டுத்தான் எழுவான் மைக்கேல். கண் விழித்த கணம் முதல் அலுவலகம் வந்து சேரும் வரையிலுமாக நான்கைந்து இச்சுகள். காரை விட்டு இறங்கும் போது ஒரு இச்சும் ஐலவ்யூக் கொஞ்சகமும். பிற்பாடு மாலையில் திரும்ப வந்து ஏற்றிச் செல்வதற்குமான இடைப்பட்ட நாழிகைகளில் அலைபேசியினூடாக நான்கைந்து. மஞ்சத்தில் நடப்பனவற்றை இக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டாள் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு. அத்தோடு அவர்கள் வீட்டுச் செல்ல நாய்க்கு மைக்கேல் கொடுக்கும் முத்தங்களும் வர்ணிக்கப்பட்டன. தூய்மைச் சிநேகத்தின் தூதுவர்கள் நாய்கள்.
இளம்பிராயத்தின் போழ்து வகுப்புத் தோழன் ஒருவனிடத்தில் எல்லாமும் ஈந்திருக்கிறாள். அக்காலகட்டத்தில் இடம் பெற்ற இச்சுகள்தான் துவக்ககால இச்சுகள். மழலைப்பருவத்தில் அம்மாவோ அப்பாவோ அவ்வளவாய் அணுக்கம் காட்டியிருக்கவில்லை. பாட்டிதான் எல்லாமும். ஆனாலும் பாட்டியின் முத்தங்கள் அரிதினும் அரிதாய் பிறந்த நாள் அன்று மட்டுமே. அவளுடைய முத்தகளத்தின் வளம் என்பது மைக்கேல் ஒருவனின் துணை கொண்டு மட்டுமே கட்டியெழுப்பப்பட்ட ஒன்று.
முத்தக்கச்சேரியில் அடுத்த ஆலாபனை நிகழ்த்தியவன் பிரையன் வோஷ்னி. ஏற்கனவே இரண்டு துணைகளோடு காதல்வீணையை மீட்டி மணமுறிவு பெற்று, தற்போது மணமெதுவும் முடிக்காமல் தாம்பத்தியப் பேரரசுக்கு ஈடு கொடுத்து வருகிறான். பஞ்சணை இச்சுகளைக் கொண்டு மட்டுமே இணையாளை ஆண்டு வருகிறான். வசியப்படுத்துவதில் கில்லாடி. காமவனக் கதைகள் எவ்வளவும் எழுதலாம். கிடைகொள்ளாமல் நெளியும் குதிரைவால் டீனாவைப் பார்த்து மனம் இளகி, ஆலாபனையைச் சுருக்கமாகவே முடித்துக் கொண்டான் சிநேக முத்தமலடு கொண்டவன்.
ஒடிசலாய்த் தலையை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தான் தொப்பை தீபக். அவனை டீனா இடைமறித்துச் கேட்கிறாள், “ஏய், நீர் சொல்லுமய்யா! சும்மா எங்களை மட்டும் துவையல் கல்லுல துடைச்சி எடுக்குற மாதிரி வளிச்சு வளிச்சு எடுத்தியே?”.
நன்றாகப் பேசுவான் தொப்பை. அடிக்கிற காற்றில் இருந்தே வெண்ணெய் எடுக்கக் கூடியவன். மிசிசிப்பி ஆற்றில் ஓடுவதெல்லாம் மின்னசோட்டாக் கால்நடைகளின் உச்சாதான் என மெய்ப்பிக்கும்படியான தந்திரச்செப்புகை கூட கைகூடி வரும் அவனுக்கு.
பாலகனாய் இருந்த நாட்களில் அம்மா அப்பாவின் வழமையான முத்தங்கள் அவனுக்கும் கிடைத்திருக்கிறது. சிறுவயதிலேயே வணிகச்சிந்தனை ஆட்கொண்டுவிட்டதால் மெல்லுணர்வுகளுக்கு அவ்வளவாக ஆட்பட்டிருக்கவில்லையவன். காதல் உணர்வு என்பதே கூட அரிதாய்த்தான் மேலெழுந்திருக்கிறது. கல்யாணமும் பெற்றோர் பார்த்து வைத்த உறவுக்காரப் பெண்ணோடுதான்.
தொப்பை தீபக்கின் மனைவி ஜெயஸ்ரீ. அலுவலக நிகழ்ச்சிகளின் வாயிலாக ஜெயஸ்ரீயை எங்களுக்கும் தெரியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிந்துணர்வு உண்டு. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அக்கறையின்பால் நிகழும் இச்சுகள்தான் பெரும்பாலும். அதுவும் என்றாவது ஒருமுறைதான். துயரம், சோகம், துக்கம் முதலானவற்றின் போது அவள் அழுகையைக் கட்டுப்படுத்த இவன் பாவிப்பது முத்தங்களைத்தான். இவனும் இச்சைப் பொழுதில் எழுவனவற்றை முத்தக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை.
கிரங்கிய கண்களோடு என்னைப் பார்க்கிறாள் டீனா. எந்த ஹார்மோன் சுரந்து என்ன விளையாட்டு விளையாடுகிறதோ அவளுக்குள்? தொப்பை தீபக்கும், பிரையன் வோஷ்னியும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். சாலையோரத்தில் நின்று போலீசுகாரரிடம் தண்டச்சீட்டு பெற்றுக் கொண்டிருக்கும் அகப்பட்ட வாகன ஓட்டியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தார்கள் என்னை.
கச்சேரியில் என்னுடைய ஆலாபனைக்கான நேரம். எழில் சிந்தும் அழகுப் பெட்டகமாய் என் முன்னால் அமர்ந்திருக்கும் டீனாதான் எனக்கிருக்கும் ஒரே இடைஞ்சல்.
நெளிகிறாள். சிரிக்கிறாள். சாய்த்த செவிகளில் உள்வாங்கி கண்களால் கொப்புளிக்கிறாள் தான் சுவையோடு நுகர்வதாய்ச் சொல்லும் உளக்குறிப்பை. குதிரைவால் சிலுப்பிச் சிலுப்பி ஆடுகிறது. ஒருசோட்டு பப்பாளிகளிரண்டும் அவ்வப்போது என் கண்களைச் சுண்டுகிறது. ஆனாலும், முத்தம் என்பதன் மீதான தாக்கம் எனது கச்சேரியைச் செவ்வனே செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
உதடுகளால் செய்கிற செய்கையெல்லாமே முத்தம் ஆகிவிடுமா? மாந்த நேயம் அற்ற பதர்கள் இதிலும் கலப்படம் செய்து தொலைத்து விட்டார்கள். அவர்களுள் முதலாவதாகக் காமனைத்தான் நான் சுட்டுவேன்.
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான்தான் வகுப்புக்கு சட்டாம்பிள்ளை. சட்டாம்பிள்ளைக்கென்று சில சிறப்புகள் உண்டு. ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் அதில் ஒன்று. சத்துணவு டீச்சர் என்னைத்தான் எதற்கும் நாடுவார்கள். டீச்சர் என்பதில் ஒரு முரண் உண்டு. ஆனால் கிராமத்தான்கள் நாங்கள் சொல்வதுதான் வெல்லும். வெல்ல வேண்டும்.
பள்ளியில் ஆண் ஆசிரியர்களை வாத்தியார் என்போம். பெண் ஆசிரியர்களை டீச்சர் என்போம். நகரத்து ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிர்மல் எங்களைப் பார்த்து கேலி செய்தான். ”டீச்சரும், வாத்தியாரும் ஒன்னுதானடா?”, கெக்கலித்தான். “டீச்சருக்கும் வாத்தியாருக்கும் வித்தியாசமே தெரீல இவனுக்கு? டவுன் பள்ளிக்கூடத்துல படிக்கறானாமா இவன்??”, ஒட்டுமொத்தமாய் நாங்கள் சொல்லிச் சிரித்ததில் அழுது கொண்டே போனவன் வெகுநாட்களுக்கு எங்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை.
சத்துணவு ஆயா என்பார்கள். ஆனால் எங்களுக்கு சத்துணவு டீச்சர்தான் அந்த சிவகாமி அக்கா. பக்கத்திலிருந்து அடுப்புக் கூட்டுவதற்கு என்னைத்தான் கூப்பிடுவார்கள். பெரிய காவுமொடாவில்தான் சோறுக்கு உலை வைத்து அரிசி போடும் சிவகாமி அக்கா. நான் பக்கத்திலிருந்து விறகுகளை உள்ளே தள்ளி, ஊதி விட்டு சமேதரம் பார்ப்பேன். முதலில் தொளக்புளக் சத்தம் வரும். பிற்பாடு சத்தம் மங்கி, மொடாவில் முக்கால் அளவில் தண்ணி அடங்கி நிற்கும். தண்ணியைத் தன்னுள் வாங்கி அரிசிப் பருக்கைகள் மகிழத் துவங்கும். ஒவ்வொரு பருக்கையும் மகிழ மகிழ அளவில் அது பெரிதாகிக் கொண்டே வரும். சரியாக நெகமம் பஸ் மேற்கே போகும் போது காவுமொடாப் பொங்கி, மூடியிருக்கும் தட்டினைப் புறந்தள்ளியபடி சோறு வெளித்தள்ளிக் கொண்டு இருக்கும்.
சிநேக பாவங்களுக்காய் மாந்தன் மனம் மகிழ்ந்து வரும். உள்ளம் கனிந்து, பின் உணர்வு மகிழ்ந்து மேலெழும்பிக் கொண்டே வந்து செவ்வாம்பல் இதழ்களில் முத்துகள் தெறிக்கும். அத்தகு முத்தங்களைக் கொடுக்கவும் பெறவும் ஆசைப்பட்டுப் பித்தனானேன் நான்.
உளம் கனிந்து மனம் மகிழாமல் கொடுக்கிற, கொடுக்கப்படுகிற எதுவும் வெறும் இச்சு மட்டுமே. நீர்க்குமிழி போல வெறுமனே பெரிதாகி வெடித்துச் சிதறும் ஒலிக்கூளமது.
இச்சைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் இடம் பெறுவன முத்தங்களா? அவை சும்பனங்கள். ”சும்பனத்துக்கடங்காத கொம்பன் எவன்டா நாட்டுல?” என்று எக்காளமிடுவார்கள் நாட்டுப்புறத்தில். கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ் கொடுப்பர். கூடவே சும்பனமும் உகப்பர் பரத்தையர் என்று கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.
டீனாவுக்கு இவையெல்லாமே புதிதாய் இருந்தன. முத்தமலட்டிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தான் பிரையன் வோஷ்னி. எங்க ஊர் நாட்டாமை சோமலிங்கத்தின் கைத்தடி நாகசாமியைப் போலவே, சொன்னதற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான் தொப்பை தீபக். “வாட் மேன், வாட் டு யு திங்க்?”, தொப்பையின் தொடையைத் தட்டினாள் டீனா தனக்கேயுரிய ஏகடியச் சிரிப்போடு. தொப்பை நெளிந்து நாணுகிறான்.
கலப்படமேதுமின்றி சிப்பிக்குள்ளிருந்து கிடைப்பது முத்து. முத்தமற்ற இதழ்கள் வெறும் கிளிஞ்சல்கள்.
சின்னம்மாவின் அன்பு முத்தங்கள் அகாலத்தில் நின்று போனது எனக்கு. என் அப்பாவுக்கும் தாய்மாமான் ஒருவருக்கும் நேர்ந்த பிணக்கில், என் பாட்டி வீட்டிலிருந்து எங்கள் ஊருக்கே கொண்டு வரப்பட்டேன். ஆனால் எனக்கான முத்தங்கள் நின்று விடவில்லை.
வீட்டில் கடைப்பிள்ளை என்பதால் நான் அப்பா செல்லம். வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னைக் கொஞ்சிக் கொண்டேயிருப்பார் அப்பா. “முலுவா, முலுவா” என்று விளித்துக் கொஞ்சுவார்.
“முலுவா, எனக்கொரு முத்தங்குடு பாக்கலாம். டேய், ஒன்னு குடுறா!”, கெஞ்ச விட்டுக் கொடுப்பேன் நானும். அவர் கொடுக்க எத்தனிக்கும் போதெல்லாம், “பீடி நாத்தம், பீடி நாத்தம்” எனச் சொல்லி போக்குக் காட்டி மகிழ்வேன்.
ஏழாம் வகுப்பு படிக்கத் துவங்கிய நாட்களில் படிப்படியாக அவருடைய நின்று போனது. ஆனால், கடவுள் மறுபக்கக் கதவுகள் பலவற்றைத் திறந்து வைத்தார் எனக்காக. என் அம்மாவின் மற்றொரு தங்கையின் வழியாக தம்பி தங்கைகள் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்தார்கள். முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்வேன். அவர்களும் எனக்கு வேண்டிய முட்டும் கொடுப்பார்கள்.
சின்னம்மாவின் குழந்தைகளில் சின்னவனுக்குக் கன்னத்தில் குழி விழும். அதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் உவந்து வரும். அப்போதிருந்து கன்னத்தில் குழிவிழச் சிரிக்கும்படியாக யாரைப் பார்த்தாலும் எனக்கு சிநேகம் சுரக்கும். முத்தங்கள் கொடுக்கத் தோன்றும். அதனால்தானோ என்னவோ, கன்னக்குழிக்கு சொக்கறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. எப்பேர்ப்பட்ட சிநேக மலட்டுக்காரரையும் சொக்க வைக்கும் அது.
கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது பக்கத்து வீட்டில் ஒரு சின்ன வாண்டு இருந்தது. சொக்கறை கொண்ட வாண்டு அது. எந்நேரமும் என்னுடன்தான் விளையாடித் திரியும். அதுக்கு நான் கொடுப்பேன் முத்தங்கள். அதுவும் எனக்கு வஞ்சனையில்லாமல் கொடுத்துச் சிரிக்கும். எங்களுக்குள்ளான அணியம் அந்த ஊரிலிருந்தே என்னை அந்நியனாக்கியது.
இந்நேரமும் நொட்டை நாகசாமியாய் தலையாட்டிக் கொண்டிருந்த தொப்பை தீபக் தன்னுடைய வேலையைத் துவங்கியிருக்கிறான் இப்போது.
“நம்ம ஆபிசுல யாருக்காவது டிம்பிள் இருக்கா? இவன்கிட்ட இருந்து எட்ட வைக்கணும். நல்லவேளை டீனாவுக்கு டிம்பிள் இல்லை!”, என்றான் நக்கல் சிரிப்போடு. “என்னோட கேர்ள் பிரண்டை இவன் கண்ணுலயே காண்பிக்க மாட்டேன்பா. ஏன்னா அவளுக்கு இருக்கு!”, என்றான் முத்தமலட்டு வோஷ்னி. சிரிப்பினை அடக்க வேண்டி தண்ணீர் குடித்துச் சிரிப்பினைத் திசை திருப்ப முயன்றாள் டீனா.
சிங்கப்பூரில் இருந்து விடை பெறும் நாளில், நிறுவன மேலாளர் ஷியாவ் லீ தன் மனைவியோடு விமானநிலையத்திற்கு வந்திருந்தான். கைகுலுக்கி முதுகு தட்டிக் கொடுத்துப் பிரியாவிடை கொடுத்தான் ஷியாவ். டொங் லீயும் எங்கள் அலுவலகத்தில்தான் சம்பளப்பிரிவில் கணக்காளராக வேலை பார்க்கிறாள். ஆனால் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. கைகுலுக்கப் போனேன். இரு தோள்ப் பட்டைகளையும் சாதுவாய்ப் பிடித்துக் கொண்டு வலது கண்ணத்தில் இதழ் பதித்து, “விஷ் யூ ஆல் தி பெஸ்ட்”, என்றாள்.
சிநேகம் சிவந்து வராத முத்தங்கள் நீர்க்குமிழி போலச் சற்று நேரத்திலேயே மரித்துப் போகின்றன. மனம் நெகிழ்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்து இதழ்களில் வெடிக்கும் முத்தங்களுக்குச் சாவே இல்லை. ஷியாவ் இணையரோடு தொடர்பு இல்லாவிடினும், டொங் லீ கொடுத்த முத்து மனச்சிப்பிக்குள் காத்திரமாகவே இருக்கிறது இன்னமும்.
அமெரிக்க விமான நிலையங்களை எல்லாம் செயலிழக்கச் செய்தது உயிரோட்டம் கொண்ட முத்தமொன்று. பாதுகாப்புச் சோதனை வளையத்துக்குள்ளிருந்த ஒருவர் வெளியிலிருந்த துணைவருக்குப் பரிசுத்தமான முத்தமொன்று கொடுக்க, இழுத்து மூடப்பட்டது நியூஜெர்சி விமான நிலையம். அந்நேரத்தில் நானும் விமான நிலையத்தில்தான் இருந்தேன்.
சிலகாலம் முத்தங்களை இன்னபிற தளங்களிலும் தேடித்திரிந்தேன். எங்கள் வீட்டுக் குழாயடிக்கு அண்மையில் எப்போதும் சேறும் சகதியுமாகவே இருக்கும். அங்கே போய் உட்கார்ந்து கொள்வேன். அரிதினும் அரிதாய்ப் பறந்து கொண்டே கொசுக்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிக்காகக் காத்திருப்பேன். அவை முகர்ந்து கொண்ட காட்சியைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மனம் மகிழ்ந்து வரும். ஓடிச் சென்று என் அண்ணன் மகனைக் கொஞ்சுவேன்.
முத்தம் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகவும் இருக்கிறது. கோத்தகிரியில் இருக்கும் நண்பன் மோகனுடைய அம்மா என் நெற்றியில் சிலுவையிட்டு முத்தம் கொடுப்பார்.
டொரொண்டோவில் இருக்கும் வகுப்புத் தோழன் பிரான்சிஸ் பிரெஞ்ச் நாட்டுக்காரன். அவர்கள் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் அவனுடைய அம்மாவும், அக்காவும் வரவேற்புக்காகவும் பிரியா விடைக்காகவும் முத்தமிடுவார்கள். வலது கன்னத்தோடு வலது கன்னமும், இடது கன்னத்தோடு இடது கன்னமுமாக மாற்றி மாற்றி ஒத்தி எடுப்பார்கள். ஒத்திக் கொள்ளும் போது அதரங்கள் உச்சுக் கொட்டும்.
பல்கேரியா நாட்டு சோஃபியாவைச் சார்ந்தவன் நண்பன் மேத்யூஸ். நானும் அவனும் டொரொண்டோவில் அலுவலக நண்பர்கள். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் வரவேற்புக்காய் வலது கையைப் பற்றிப் புறங்கையில் முத்தமிட்டு நலம் விசாரிப்பார்கள்.
அமெரிக்காவில் பண்பாட்டுத் தளத்தில் இன்னமும் வடக்கும் தெற்கும் பிரிந்தே இருக்கின்றன. வடக்கில் இருப்பவர்களுக்கு கைகுலுக்குவதே வழமை. தெற்கில் இருப்பவர்கள் அரவணைத்து நெற்றியில் உச்சி முகர்ந்து கொள்கிறார்கள். புளோரிடாவில் இருக்கும் நண்பன் ரிக்பெரியின் மனைவி, மருமகள்கள் எல்லாரும் என்னை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்புகிறார்கள்.
கனடிய நகரான பிக்கரிங்கில் இருக்கும் பஞ்சாப் நண்பன் லலித்தும் நானும் பதினேழு ஆண்டுகால நண்பர்கள். பங்காளிகள் எல்லாரும் கூட்டுக் குடும்பம். எப்போது போனாலும் பத்துப் பதினைந்து பேராவது வீட்டில் இருப்பார்கள். அவனுடைய குடும்ப வழக்கத்துக்கொப்ப இருக்கும் பெரியவர்கள் எல்லாருடைய காலிலும் விழுந்து ஆசி வாங்குவேன். அவர்களும் தோள்பிடித்து எழுப்பி தலையில் முத்தமிட்டுக் கைவத்தபடி ஆசி கொடுப்பார்கள். கிராமத்து மனிதரான லலித் அப்பாவுக்கு பஞ்சாபிமட்டும்தான் தெரியும். பஞ்சாபி தெரியாத நானும் அவரும் வணங்கிக் கொள்வதோடு சரி. நாவொலியால் பேசிக்கொண்டதில்லை. ஆனாலும் ஆசைதீரப் பேசிக் கொள்வோம். ஆசி வழங்கிய கையோடு என் வலக்கையைப் பறித்துத் தனது கைகளுக்கிடையில் வைத்துப் பொத்திக் கொள்ளும் அந்த வெள்ளந்தி. எங்களது கைகள் தொடர்ந்து மாந்தம் பரிமாறிக் கொண்டிருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை அந்த வாஞ்சனைகள். “அவனைக் கொஞ்சம் வுடுறியா? வந்த எதனா சாப்பிடட்டும்!” என்று லலித் இரையும் வரை, சமவெளியில் அமைதியுற்றுப் பாயும் முதுநதி போல நேயசுகம் எங்கள் உடம்புக்குள் அசும்பிக் கொண்டிருக்கும்.
ராலேவில் இருக்கும் பாகிசுதான் நண்பன் இர்ஃபான் வீட்டுக்குப் போனால் இடது புறமும் வலது புறமும் மாறி மாறி அரவணைத்துக் கடைசியில் உச்சியில் முத்தமிட்டு வாழ்த்துவார்கள். மிசிசாகாவில் இருக்கும் பங்களாதேசு நண்பன் ஷகாரியர் இமாம் வீட்டுக்குப் போகும் போது, நம் இரு கைகளையும் ஒரு சேரப்பிடித்துக் குலுக்கி நான்கு கைகளும் இணைந்திருக்கும் இடத்தில் முத்தமிட்டு வரவேற்பான் அவன். இப்படி முத்து முத்தாய் முத்தங்கள் சூழ சுவாசித்து வாழும் வாழ்க்கையானது பரவசத்தில் ஆழ்த்தித் திளைக்கச் செய்கிறது.
மனைவி, மக்கள் என ஆன பிறகு முத்தங்களே வாழ்க்கையாகிப் போனது. முத்தங்களற்ற வாழ்க்கை ஒரு சூனிய வாழ்க்கை. பிள்ளைகள் செய்யும் சில விநோத செயல்களைப் பார்த்ததுமே மனம் வாஞ்சையுற்று மகிழத் துவங்கும். அடிக்கடி பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள் என மனையாள் கடிந்து கொள்வாள். எல்லாமும் தனக்கே வந்து சேர வேண்டியது எனும் ஆற்றாமையாகக் கூட இருக்கலாம் அது. யாருக்குத் தெரியும்?
வயதான கிழவன் கிழவிகள் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருந்து, சார்ந்தொழுகிக் கொள்வதைப் பார்த்தாலும் எனக்கு மனம் வாஞ்சையுற்றுப் பொங்கி வரும். இதற்காகவே மாலை நேரங்களில் குளக்கரைக்குப் போவதும் உண்டு. அங்கிருக்கும் அமர்விடங்களில் பெரியவர்கள் ஆற அமர இருக்கும் பாசமுறு காட்சியை எப்போதும் காணலாம். அக்கணங்களில் மனைவியோ, பிள்ளைகளோ இருந்தால் அவர்களுக்கு முத்தமிட்டு இன்புற்றுக் கொள்வேன். அவர்கள் இல்லாத நேரங்களில், வலது கை விரல்களை உள்மடக்கி உள்ளங்கையினைக் குவித்து அதன் மீது முத்தமிட்டுக் கொள்வேன். வலது கைக்குமிட்டியில் கொட்டிக் கிடக்கின்றன ஜீவனுள்ள முத்தங்கள் மாமாங்கமாய்.
முதல்முறையாக இடைமறித்தாள் குதிரைவால் டீனா. “காலையில் வேலைக்குக் கிளம்பி வரும் போது உங்களுடைய முத்தப்பரிமாற்றம் எப்படி இருக்கும்?”, ஏக்கமுசுமுசுப்போடு கேட்கிறாள் அவள்.
அப்படியொரு பழக்கமே எங்களுக்கில்லை என்றதும் அவள் முகம் சூம்பிப் போனதே பார்க்கலாம். இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
பிற்பகல் மணி மூன்று இருக்கும். இராலே நகரத்தின் ஊர்ப்புறமொன்றில் இருக்கும் அலுவலக வளாகம். ஆந்திர நண்பன் பெஞ்சல் ரெட்டிதான் வந்து முதலாவதாகக் காதைக் கடித்தான். அடுக்ககத்தில் பழக்கமான ஜெகன் சவுத்ரி நெஞ்சு வலியால் போய்ச் சேர்ந்து விட்டானாம். உடனே போயாக வேண்டுமென்கிறான்.
சேப்பல்ஹில் மருத்துவமனைக்குப் போகும் வழியில் அவன் மனைவிக்குத் தெரியப்படுத்தி விட்டு வரச் சொல்கிறான் பரத் ரெட்டி. கணவனை இழந்திருக்கும் மனைவியிடம் போய் என்னவென்று எப்படிச் சொல்வது? நெஞ்சு பிசைகிறது எனக்கு. கூடவே வாந்தி பேதியும் வருவது போல இருக்கிறது. பொழையாப் போன பெஞ்சல் ரெட்டி என்னை விட்டானில்லை. என் மனைவியையும் கூட அழைத்து வரச் சொல்லி அக்கப்போர் செய்கிறான். “ஒதனம்மத்தோ நேனே செப்பானு!”, இந்தக் குழைச்சலுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்லை.
என் மனைவி, நான், அவன் என மூன்று பேருமாகச் சென்றோம். ஏற்கனவே செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே அழுகைச் சத்தம். தரையில் விழுந்து புரண்டு கொண்டிருக்கிறாள் ஜெகனின் மனைவி சாரதா. “எப்பவும் இல்லாதபடிக்குக் கிளம்பும் போது முத்தமெல்லாங் குடுத்திட்டுப் போனயே, நாவாடு இங்க்க ராடா? கொண்டமார உண்டுத்துடே?!”, ஓலமானது கடைக்கோடி வீட்டு வரைக்கும் உள்ள எல்லா மேப்பில் மரங்களையும் அதிரச் செய்து, எல்லாரும் வெளியில் வந்து பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
அன்று தீர்மானமானது; வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஒருநாளும் முத்தம் கொடுக்கவே கூடாதாம். தீர்மானமாய்ச் சொல்லி விட்டாள்.
இந்த அமெரிக்கப் பெண்மணிகளுக்குத்தான் அடுத்தவர் மேல் எவ்வளவு கரிசனம்? நாகரிகம், மாந்தநேயம், பண்பாடு, இங்கிதம் முதலானவற்றைக் கருவில் வைத்தே ஏதாவது ஊசிமூலம் செலுத்தி விடுவார்களோ? அப்படியிருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும்?? “சாரி! ஐ ஃபீல் சாரி!!”, மனமுருகிச் சொல்வது தெரிகிறது அவள் கண்களில்.
பேசிக் கொண்டே உணவகத்திலிருந்து வெளியே வருகிறோம். வானம் பூராவும் நீலம் பாய்ச்சிக் கிடக்கிறது. உயரெழும்பி அலை பாய்ந்து சேட்டை செய்து கொண்டிருக்கக்கூடிய நான்கு மனங்களும், வாளாது தாழ்ந்து பணிந்தே இருக்கின்றன.
அந்த ஓக் மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை ஏன் கரைகிறதென்று அதற்கே தெரியாது. தன் கால்களால் அமர்ந்திருக்கிறதா, அல்லது நின்று கொண்டிருக்கிறதா அந்தக் காகம்? காகங்கள் கூடத் தன் அலகுகளால் ஒன்றையொன்று உரசி முத்தமிட்டுக் கொள்கின்றன. மனம் கசிந்து முத்தமிட்டது போக, எதையாவது கொண்டு வந்து பங்கித் தருகிறது மற்றவர்களுக்கும். காகம் ஒரு பகுத்துண்ணி. மனப்பாடம் செய்தால் மட்டும் போதுமா?
இனி நாங்கள் மூவரும் தொப்பை தீபக்கின் காரில் அலுவலகம் போய்ச் சேர வேண்டும். டீனா அவளது காரில் தனியாக வந்திருக்கிறாள். போகிற வழியில் வங்கி வேலை எதோ இருக்கிறதாம் அவளுக்கு.
எதுவும் சொல்லிக் கொண்டா நடக்கிறது? அதற்கான தருணங்கள் வாய்க்கும் போது அதனதன் வீச்சில் யாவும் நடக்கத்தான் செய்கின்றன. நினைத்த மாத்திரத்தில் கனடியன் கீசுகள் மேலெழும்பிப் பறக்கின்றன. காரணகாரியம் எதுவுமேயில்லாமல் வெறுமனே துள்ளிக் குதிக்கிறது குளத்து மீன். எனக்கும் இன்று மாலையில் மனைவி மக்களோடு குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது.
நாங்கள் நால்வரும் பங்கேற்ற முத்தக் கச்சேரியின் கடைசிக் கட்டமான மங்களம் பாடும் நேரம் வந்து விட்டது.
மணவாளனுக்குக் காலையில் தராமல் விட்டுப் போனதற்குப் பிராயச்சித்தமாய், இப்போது காகமாகவே மாறிப் போயிருக்கிறாள்.
உறவு கலப்பதிலும் முத்தம். பிரிவதிலும் முத்தம். சிநேகச்சாறு வழிந்தோடி முத்தப் பெருநதிகளாய் உருக்கொண்டு பிரபஞ்சத்தின் பிறவிப்பயனை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது. முத்தப்பெருநதிகள் வற்றும் போது பிரபஞ்சமும் இல்லாது போகும்.
தேனுண்ட வண்டுப் போல முயங்கிவந்து ஆளாளுக்கும் கனிந்த மெலிந்த முத்தமொன்றை நெற்றிப் பொட்டில் கொடுத்துப் போகிறாள் குதிரைவாலி! கணிசமாக நீட்சி கொள்கிறது பிரபஞ்சத்தின் ஆயுளும்!! இந்த நாள் நமக்கு நல்ல நாள் என்கிற களிப்பில் தத்தம் வலக்கைகளை உயர்த்தி ஒன்றோடொன்று மோதிச் சப்பாணி கொட்டிக் கொண்டன சிநேகமும் முத்தமும்!!!
முத்தோர்வலம் அபாரம், பழமை பேசி. கேள்விக்கு பதில்.
உதடுகளால் செய்கிற செய்கையெல்லாமே முத்தம் ஆகிவிடுமா?
~ இல்லை
அன்பு பழமை பேசி எல்லாமே அளவுக்கு மீறினால் அமிருதமும் விஷம் என்ற கதையாகி விடுவதால் அந்தச்செயல் ஒருஇயந்தரம் போல் உணர்ச்சிகள் அற்று மடிந்துவிடுகிறது , என்பது என் கருத்து . தாய் அன்புடன் கொடுக்கும் முத்தத்தின் மதிப்பே தனிதான் அதில் ஸ்வார்த்தமில்லை .ஆனால் மனமார்ந்த ஆசிகள் தெரிகின்றன . ஆனால் மேல் நாட்டு கலாச்சாரத்தின் முத்தமோ …என்னத்தச்சொல்ல ?
அம்மா வணக்கம். எங்கும் கலப்படம் இருக்கத்தான் செய்கின்றன. பண்பாட்டு ரீதியாக மேலைநாடுகளில் ஒரு மரபு கடைபிடிக்கப்பட்டே வருகிறதுங்க அம்மா.
மிக்க நன்றிங்க ஐயா!
ஒரே முத்தச் சத்தமாக இருக்கிறதே? முத்தம் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கதையை எழுதியுள்ளீர்கள் போலிருக்கிறதே? முனைவர் பட்டமே தரலாம். 😉
நன்று! வாழ்த்துகள்!
@@மாதவன் இளங்கோ
🙂 நன்றிங்க.