எனக்குள் வந்த இன்னுமொரு உயிர்!

5

 

-தனுசு

 

எனக்குள்
நீ
எப்படி வந்தாய்?
என்னை
நீ
எப்படிச் சேர்ந்தாய்?
அது
எனக்கே தெரியவில்லை!

நீ வந்ததால்
என் வாழ்க்கை மாறியது
நீ சேர்ந்ததால்
என் செய்கையும் சிந்தனையும்
உன்னுள் அடங்கியது.

துள்ளிக்குதித்த இந்த ஜல்லிக்கட்டு காளை
கடிவாளம் பெற்று
இன்று
உன் கைப்பிடியில்.
சொல்லி அடித்த இந்த வரிப்புலி
வீரம் மறந்து
இன்று
உன் காலடியில்.

பால்மடி தேடும்
கன்றுக்குட்டியாகி
நாளும் பொழுதும்
உன்னைத் தேடுகிறேன்!
அந்தத் தேடல்
ஒவ்வொன்றிலும்
உன்னைப் பார்க்கிறேன்!
உன்னிலும்
ஒவ்வொன்றையும் பார்க்கிறேன்!

கருவண்டைப் பார்த்தால்
கண்களின் ஞாபகம்!
மழைமேகம் பார்த்தால்
கருங்கூந்தல் ஞாபகம்!

இன்னும்
பூவை
பூங்காற்றை
நிலவை
இவைகளைக் காணும் போதெல்லாம்
உன் ஞாபகம்.

அந்த ஞாபகம்
அடி மனதில் அம்மி மிதித்து
போர்க்களம் வென்ற மன்னன்
அந்தப்புரம் சென்றால்
கிடைக்கும் இன்பம் போல் இனிக்கும்!

என்
நெஞ்சில் வசிக்க நீ வந்ததால்
வேறு வஞ்சிக்கு இனி இடமில்லை!
நான்
புசிக்க நீ இருப்பதால்
வேறு பசி எனக்கு தெரிவதில்லை!

எத்தனை எத்தனை செய்கிறது
உன் மந்திரம்!
அதன் முன்
மற்றதெல்லாம் எம்மாத்திரம்!

நீ
என் மனம் விரும்பும்
மாலை நேரத்து மதுக்கிண்ணம்!
உன்
நடை பார்த்து
நடை பழகும் அன்னம்!

நீ
என் சிந்தையில்
அமர்ந்த சிற்பி
என் எழுத்தால் உன்னைச் செதுக்க
இன்னும் எனக்கு கற்பி!

நீ
என் மூளைச் செல்கள் அனைத்திலும்
முளை விடும்
ஒரே விதை!
அதுதான்
இந்த பாமரனை
பா மகனாக்கிய
நீ எனும் நான் விரும்பும் தமிழ்கவிதை!

 

படத்துக்கு நன்றி: https://www.vallamai.com/wp-content/uploads/2012/04/8307785-valentine-s-day-concept-lovebirds-flying-around-love-hearts.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “எனக்குள் வந்த இன்னுமொரு உயிர்!

  1. கவிஞர் தனுசுவின் கவிதை வரிகளில் சிருங்காரம் பொங்குகிறது!!. கண்கள் பார்க்கும் இடந்தோறும், சிந்தை செல்லும் வழி தோறும் காதலியின் நினைவே கைவரப் பெறும் காதலனின் தவிப்பு மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. என் மனம் நிறைந்த பாராட்டுதல்கள். திரு. தனுசு அவர்களே!!

  2. நன்றாக ஏமாற்றிவிட்டீர்கள் தனுசு, யார் அந்தப் பெண் எனத் தெரிந்து கொள்ள ஆவலாக  இருந்தேன். இறுதியில் தமிழ்க் கவிதை என்று சொல்லி முடித்துவிட்டீர்கள் 😀   (ஒருவேளை அவளைக் கவிதையுடன் ஒப்பிட்டீர்களோ??!!??)

    ….. தேமொழி 

  3. //நீ என் சிந்தையில்அமர்ந்த சிற்பி என் எழுத்தால் உன்னைச் செதுக்க இன்னும் எனக்கு கற்பி!//
    இந்த வரிகளை மிகவும் இரசித்தேன். அதுமட்டுமல்ல ”மந்திரம், மாத்திரம், பாமரன், பாமகன்” என்ற சொல்லாடல்களும் அருமை. பாராட்டுக்கள் தனுசு. (தனுசு என்பது புனைபெயர் என்றே எண்ணுகின்றேன். பெயர்க்காரணம் அறிய ஆவல்!)

    –மேகலா

  4. மனம் நிறைந்து பாராட்டிய பார்வதி அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

  5. ரசித்து பாராட்டிய மேகலா அவர்களுக்கு நன்றிகள்,

    தனுசு என்பது புனைப்பெயர் தான். வில்லை குறிக்கும் வகையில் வைத்தது. வில்லின் வேலை, அம்பை குறிவைத்த இடத்தில் பதிய வைப்பது. என்னுடைய என்னமும் நான் சொல்ல வருவதை மிக சரியாக பதிய வைக்க வேண்டும் என்பதே.

    இந்திர தனுசு எனும் சிவதனுசுவைத்தான் ராமன் வளைத்து சீதையை கரம் பற்றினான். அந்த வில்லே இன்றளவிலும் மிகப்பெரிய மற்றும் பலமான வில்லாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தெரிவு செய்த பெயர் தனுசு.

    நன்றிகள் மேகலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *