Advertisements
இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(1)

          செண்பக ஜெகதீசன்

 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு…!

              -திருக்குறள்(ஊக்கமுடைமை)

 

புதுக்கவிதையில் (என் பாணி)…

 

தண்ணீருக்குத் தகுந்தபடி

தாமரை உயரும், தாழும்..

 

மனிதா உன்

எண்ணம்போல தான்

ஏற்றம் வரும் வாழ்வில்…!

 

குறும்பாவாய்…

 

தாமரை வளர்ச்சி தண்ணீரளவில்,

மனிதனுக்கு அவன்

மனம்போல்தான்…!

 

புதுப்பாவில்…

 

கதிரவனின் வெம்மைக்கரத்

தீண்டுதலில் பதறித் தாழ்ந்து

கண்விழிக்கிறது

தண்ணீர்க்காதலனின் முயக்கத்தில் உயர்ந்து

தன்னை மறந்திருந்த தாமரை..

 

உயர்வு வானில் பறக்க

ஏற்றதாய் இருக்கவேண்டும் மனிதனின்

எண்ணச் சிறகுகள்…!

 படத்துக்கு நன்றி   

http://centurystudios.blogspot.in/2011/08/30-lotus-blossom-chandelier.html

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (11)

 1. Avatar

  அசத்தல், மிகவும் வித்தியாசமான  கருத்தைக் கவரும் படைப்பு.  
  அன்புடன் 
  ….. தேமொழி 

 2. Avatar

  தேமொழி அவர்களின் கருத்துரைக்கு நன்றி…!
  இப்பதிவை எனது முகநூலில் சேர்த்தேன்..
  பலர் பாராட்டினார்கள், இலங்கை நண்பர் ஒருவர்
  மரபுக் கவிதையிலும் எழுதக்கேட்டார்..
  அதன்படி,

  மரபுக் கவிதையில்.. 

  நீரது உயர்ந்தால் உயர்ந்தே
  நின்றிடும், வற்றினால் தாழும்,
  வேரது சேற்றுறை தாமரை
  வாவியில் காணலாம் என்றுமே,
  பாரதில் காணும் மனிதரும்
  பண்பிலே, நிலையிலே உயரவும்,
  கோரமாய்த் தாழ்ந்து வீழவும்
  காணவர் உள்ளத் தனைத்தே…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. Avatar

  குறளின் கதிர்களாய்ப் பட்டொளி வீசும் தங்களின் ‘புதுக்கவிதை, மரபுக் கவிதை, குறும்பா, புதுப்பா’ அப்பப்பா….! அனைத்துமே அற்புதம். தங்களின் கவித் திறமைக்குக் கட்டியம் கூறுகின்றன இப்பாக்கள்.
  கவி வித்தகர் திரு. செண்பக ஜெகதீசன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!!

 4. Avatar

  அருமையிலும் அருமை. இது தான் புதுக்கவிதை. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். திருக்குறளின் அத்தனை அதிகாரத்துக்கும் இதைப்போல் எழுதி வல்லமையில் வெளியிடவும்.

  கலைஞரின் குறளோவியம் போல் இது முற்றிலும் வித்தியாசமாகவும் மிக்க வரவேற்பும் பெறும்.

  அத்துடன் அந்த மரபுக் கவிதையும் அசத்தலோ அசத்தல். திரு. செண்பக ஜெகதீசன் அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும்.

 5. Avatar

  மேகலா சொன்னது உண்மையே …நீங்கள் ஒரு “பலகவி வித்தகர்” ஐயா.
  உங்கள் மரபுக் கவிதையும் அருமை.
  ஒருவரால் எப்படி இது போல பல கோணங்களில் எழுத முடிகிறது அதுவும் ஒரே கருத்தை என்பது என்னை மிகவும் வியக்க வைக்கிறது.

  ஓவியம் வரைபவர் ஒருபாணியில் திறமைசாலியாக இருப்பார், ஒருவரே மாடர்ன் ஆர்ட், பாரம்பரிய வகை ஓவியம் தீட்டுவது போன்றவற்றை செய்து நான் அறிந்ததில்லை.
  பலபாணி கவிதையும்  உங்களுக்குக்  கை வருகிறது …வாழ்த்துக்கள். 
  நன்றி.

  ….. தேமொழி 

 6. Avatar

  திருவாளர்கள், மேகலா இராமமூர்த்தி,
  தனுசு, தேமொழி ஆகியோரின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும்,
  ஆழ்ந்த ரசனைக்கும் ஆயிரமாய் நன்றி…!
                 -செண்பக ஜெகதீசன்…

 7. Avatar

  தேமொழி, மேகலா இருவரது கருத்துகளையும் நான் ஆமோதிக்கிறேன். எத்தனை பரிமாணங்கள் கவிதையில் உண்டோ அத்தனையும் கண்முன் காட்டுகிறீர்கள். திரு. தனுசு அவர்கள் சொன்னது போல், திருக்குறளின் அத்தனை அதிகாரத்தையும்  இது போல் எழுதக் கேட்டுக்கொள்கிறேன்.

 8. Avatar

  புதுமையான முயற்சி. வாழ்த்துகள் திரு.செண்பக ஜெகதீசன்.

 9. Avatar

  ‘வண்ணத்தூரிகை’ படைப்பிலக்கியவாதி தேமொழி, அறிவியல் கவிஞர் மேகலா இராமமூர்த்தி, திரைகடலோடும் தீந்தமிழ்க் கவிஞர் தனுசு, பக்திப் பநுவல் பார்வதி இராமச்சந்திரன், அறுமுகநூறு கவிஞர் சச்சிதானந்தம்.. அனைவரும் ஒருமித்துப் பாராட்டியதும் மெய்மறந்துபோனேன். மிக்க நன்றி…!
  இதோ உங்களுக்காக இன்னொரு பாணி,
  கிராமத்துப் பாணி…

  தாமரக் கெழங்கெடுத்து
  தணிச்சித்தான் பெதச்சிவெச்சேன்- ரெம்பத்
  தணிச்சித்தான் பெதச்சிவெச்சேன்..

  தண்ணி வந்ததுந்தான்
  தானா மொளச்சிருச்சி- அழகாத்
  தண்டும் வளந்திருச்சி..

  தண்ணி ஒசரத்துக்கே எலபூவும்
  தளுத்து வந்திரிச்சி- கொளத்துத்
  தண்ணிய மறச்சிரிச்சி..

  மனுச ஒசத்தியெல்லாம் அவனவன்
  மனசு போலவேதான்- நல்ல
  மனசு போலவேதான்…!

  -செண்பக ஜெகதீசன்…

 10. Avatar

  நன்று.  செண்பகமாய் இருந்து தாமரை குணத்தை பல்வேறு கவி பரிமாணங்களில்
  பாடிய திரு செகதீசரே, 
  /*மனுச ஒசத்தியெல்லாம் அவனவன்
  மனசு போலவேதான்- நல்ல
  மனசு போலத்தான்…!*/
  (படிப்பவர்) இதயத்தாமரை காணும் படைப்புகளின் திறனைக் கண்டவுடன் 
                       அவரவர் அறிவு முதிர்ச்சி  கேற்ப தான் 
                       பாராட்டு எனும்  நீரளவு பெருகும். 
  அதிலே படைப்பாளியின் திறன் என்ற தண்டு வளரும்.
  கிராமியப் பாடல்கள் படிக்காதவர்க்கும் அறிவு கொடுக்கும். ஆற்றல் கொடுக்கும்.
  திரைப்பட பாடல்களுக்கும் (அன்றைய) இந்த மகத்துவம் உண்டு.
  பொருளறிந்தும் புகழுரையார் பொருளிழந்த வறியார் தான்.
  நல்ல முயற்சி.  அலை போல் தொடரட்டும்.
  கிராமிய சுருதியேற்ற ….இப்படி இருந்தால் எப்படி ?
  மனுசேன் ஒசத்தியெலா
  அவஅவேன் மனம்போல 
  பெத்த மவராசி மனம்போல
   ( தமிழும் தாயும் நிலமும் பாலும் இங்கே அடங்கும் )

 11. Avatar

  தலைநகரிலிருந்து தமிழ்வளர்க்கும்
  தமிழ் விஞ்ஞானி சத்தியமணி அவர்கள்
  பாராட்டி
  திருமய கிராமிய சுருதியுடன் வந்து 
  நாஞ்சில் சுருதிக்குத் தந்த
  நல்வாழ்த்திற்கு நன்றி…!

  -செண்பக ஜெகதீசன்…

Comment here