இலக்கியம்கவிதைகள்

ஊடலும், சமாதானமும்…

 

-சு.ரவி

வணக்கம், வாழியநலம்

இப்போது போலவே அது ஒரு வேனிற்காலம்!

நந்திதேவருக்கு தாகம் நாவை வரட்டுகிறது.

நந்திதேவரின் நிலைகண்டு அவரின் தாகம் தீர்க்க அன்னை வேண்ட, ஐயன் கங்காதரன் தன்

திருமுடியிலிருந்து கங்கை நீர்த்தாரையை வெளிப்படுத்துகிறான்.

தமக்குத் தெரியாமல் மற்றோர் பெண்ணைத் தலைமேல் மறைத்தார் என்று அன்னை ஊடல் செய்ய,

அன்னையின் முகவாய் பற்றி சிவன் சமாதானம் செய்யும் திருக்கோலம்…

சிதம்பரம் கோயிலின் கீழ்க்கோபுர வாயிலுக்கருகில் அமைந்துள்ள இக்காட்சியின் கோடோவியமும்,

பஞ்சகமும்…

 

ஊடலும், சமாதானமும்…

 

விடைஉறும் வெம்மை கண்டு

விடாயினைத் தீர்க்க வேண்டி

சடையிலே கரந்த கங்கை

சற்றுநீ வார்க்கப் போந்தாய்!

உடனுறை உமையாள் ஆங்கே

ஊடலால் பிணங்கிச் செல்ல,

தடநெடுங் கையால் கன்னம்

தாங்கிநீ தணிக்கப் பார்த்தாய்!

 

ஆடலுக் கரசே! உந்தன்

அழகிய சடை முடிக்குள்

மூடியோர் பெண்ணை வைக்கும்

முன்புநீ யோசித் தாயா?

ஊடலால் பிணங்கும் அன்னை

உமையவள் முகவாய் பற்றி

நாடிநீ கெஞ்சும் கோலம்

நாதனே தேவை தானா?

 

என்னதான் உடலில் பாதி

ஈந்தனை எனினும் மற்றோர்

பெண்ணை நீ ஏற்றுக் கொண்டால்

பெண்மனம் பொறுக்குமோ,சொல்!

என்னதான் துணிவோ, வாழ்வில்

இன்னொரு பெண்ணை ஏற்க!

அன்னையின் ஊடல் பற்றி

ஐயநீ அறிகி லாயோ?

 

சுர நதிப் பெண்ணாள் கங்கை

சுந்தரா நின்னைத் தேடி

சரசரத் திறங்கிப் பாய்ந்த

சரசத்தில் மயங்கினாயோ!

வருவது வரட்டும் என்று

வார்சடை ஏற்றாய்! வெள்ளிப்

பருவதன் மகளின் ஊடல்

பரமனே, பார்த்தாய் அன்றோ?

 

ஆடகப் பொன்னால் வேய்ந்த

அம்பலம் ஆடும் தேவா!

ஊடலும், ஊடலின் பின்

ஒன்றி நீர் கூடலும் உம்

நாடகக் காட்சி அஃதை

நயம்படச் சித்திரத்தில்

பாடலில் வடித்து வைத்தேன்

பார்ப்பவர் ரசிக்கத்தானே!

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    கங்கை கொண்டவன் ஊடல் கொண்ட தேவியின் மேல் காதல் கொண்டு அவள் கன்னம் ஏந்தும் ஓவியமும், கவிதயும் மிக மிக அருமை. படிக்கப் படிக்க ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்துகிறது. திரு.ரவி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  2. Avatar

    சொல்லோவியமும் கோட்டோவியமும் ஒரு சேரத் தந்திருக்கும் திரு.சு.ரவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அம்பிகை பிணக்கம் தீர்க்க ஐயன் முயலும் திருக்கோலம், கிடைத்தற்கரியது. கவிதை வரிகளும், நிறைவாக, ‘எல்லாம் உன் நாடகமே’ என முடித்ததும் அருமை. மிக்க நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க