“அங்கயற்கண்ணி ஆனந்தம் கொண்டாளே”

 

–கவிநயா

ஒரு அனுபவம்

திருமதி. காயத்ரி பாலகுருநாதன். பரத நாட்டிய உலகில் இவரை அறியாதவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள். கலாக்ஷேத்ராவின் தலைவியாக இருந்த, காலம் சென்ற திருமதி.கிருஷ்ணவேணி லக்ஷ்மணன் அவர்களின் புதல்வி. தாயையே குருவாகக் கொண்டு பரதக் கலையைக் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய அன்புக் கணவர் திரு.பாலகுருநாதனும் சிறந்த பரதக் கலைஞராக அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலவித நடன நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள், நடனப் பயிற்சி முகாம்கள் என்று நடத்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். திருமதி.காயத்ரி, சென்னையில் ‘கிருஷ்ணாஞ்சலி’ என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். உலகெங்கும் இவருக்கு மாணவியர் இருக்கிறார்கள்.

“பாலசரஸ்வதி”, “யுவ கலா பாரதி”, “நிருத்ய சிந்தாமணி”, போன்ற பல விருதுகளைப் பெற்ற திருமதி.காயத்ரி, அண்மையில் அமெரிக்காவிற்கு வந்த போது, எங்கள் ஊருக்கும் (ரிச்மண்ட், விர்ஜீனியா) வந்திருந்தார். திருமதி.உமா செட்டி நடத்தி வரும் அப்ஸராஸ் நடனப் பள்ளி மாணவியருக்காக ஒரு நடனப் பயிற்சி முகாம் நடத்தினார். அவரவர் திறனுக்கேற்ப மூன்று வகுப்புகளாகப் பிரிந்து, வகுப்பிற்கு ஒரு நடனம் என, 4 நாட்களில் கற்றுக் கொண்டோம். ஐந்தாவது நாள் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில், பயிற்சி முகாமில் கற்றுக் கொண்ட நடனங்களை மாணவ மாணவியர் ஆடினர்.

முதல் வகுப்பினர் “கிருஷ்ண கவுத்துவம்” என்ற நாட்டியத்தையும், இரண்டாம் வகுப்பினர், “ஸ்வாகதம் கிருஷ்ணா” என்ற நாட்டியத்தையும், மூன்றாவது வகுப்பினர் (இதில் அப்ஸராஸ் நடனக் குழுவின் ஆசிரியைகளும் அடக்கம்), “அங்கயற் கண்ணி ஆனந்தம் கொண்டாளே” என்று தொடங்கும் வர்ணமும் கற்றுக் கொண்டார்கள்.

திருமதி.காயத்ரி பல விருதுகளைப் பெற்றவராக இருந்த போதிலும், மிகச் சிறந்த, பிரபலமான கலைஞராக இருந்த போதிலும், அனைவருடனும் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பழகுகிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் உற்சாகம் பொங்கித் ததும்புகிறது. நடனத்தின் மீது அவருக்கு உள்ள காதல் அவர் ஆடலில் தெரிகிறது. பாதங்கள் மிகச் சொந்தமுடன் பூமியின் மேல் பாவ, உடலசைவுகள் மிக இலாவகமாகவும், நளினமாகவும் இருக்க, விழிகள் நவரசங்களையும் இலகுவாகப் படம் பிடித்துக் காட்ட, இவர் நாட்டியமாடும் போதே அப்படியே யோக நிலைக்குச்சென்று விடுவதைப் போல் தோன்றுகிறது.

இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருத்தி. ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருக்குமே இப்படிப்பட்ட அனுபவம் புதிது. எனக்கும்.

எங்கள் குருவான திருமதி.உமாவும், திருமதி.காயத்ரியும் சேர்ந்து எங்களுக்காகத் தேர்ந்தெடுத்திருந்த “அங்கயற்கண்ணி ஆனந்தம் கொண்டாளே” என்று தொடங்கும் பாடல் உயர்திரு டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் அமைத்ததாம். மிக அற்புதமான வர்ணம். அன்னை மீதான வர்ணம் என்றவுடனேயே மனம் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டது… அதுவும், பல புராணக் கதைச் செய்திகளை வைத்து, நவரசங்களையும் காட்டுவதாக அமைந்த பாடல் என்றதும் மகிழ்ச்சி பல மடங்காகி விட்டது. நடனம் அமைத்தவர் திருமதி.கிருஷ்ணவேணி லக்ஷ்மணன் அவர்கள். அவரே ஜதிகளெல்லாம் சொல்லியிருக்கிறார்.

திருமதி.காயத்ரி முதலிலேயே சொல்லி விட்டார், “நாம் எதையும் யாருக்கும் நிரூபிக்க இங்கு வரவில்லை. நாட்டியத்தின் ஆனந்தத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு நோக்கமில்லை”, என்று. அதுவும் எங்களுக்கு 27 நிமிட வர்ணம் 4 நாட்களில் முடிக்க வேண்டும் என்றவுடன் அசந்தே விட்டோம். மலைப்பாக இருந்தது. கலந்து கொண்ட அனைவருமே அலுவலகத்துக்கோ பள்ளிக்கோ செல்பவர்களாக இருந்ததால், ஒவ்வொரு நாளும் மாலையில் மட்டும் ஒன்றரை மணி நேர வகுப்பு இருந்தது. 4-ம் நாள் மட்டும் இரண்டு மணி நேரம்.

நடன அமைப்பு அருமையாக இருந்தது. சில அடவுகளை மாற்றி ஜதிக்கேற்ப அமைத்திருந்த விதம் புதுமையாக இருந்தது. மேடை முழுவதையும் பயன்படுத்துகிறாற் போல அமைக்கப்பட்ட நடனமும், நவரச அபிநயங்களும் அற்புதமாக இருந்தன.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, முதல் நாள் த்ரிகால ஜதியிலேயே திணறல் ஆரம்பித்து விட்டது. கிரகித்துக் கொள்வது ஓரளவு பரவாயில்லை, ஆனால் அடுத்தடுத்து என்ன என்று நினைவு வைத்துச் செய்வதுதான் பெரிய சவாலாக இருந்தது. அடுத்து என்ன என்று மூளைக்குத் தெரிந்தாலும், உடம்பு உடனடியாக ஒத்துழைக்காது. “இரு, வர்றேன்…, என்ன அவசரம்” என்று சொல்லும்… நிதானமாகத்தான் வேலை செய்யும்… அவ்வளவு வேகமாக இதுவரை கற்றுக் கொண்டதில்லை. முதல் நாள் கற்றுக் கொண்டது ஓரளவு நினைவில் நின்று விட்டது, எதிர்பார்த்ததை விட. ஆனால் இரண்டாம் நாளே மூளை overload ஆகி விட்டது. கை கால்கள் எல்லாம் கெஞ்சத் தொடங்கி விட்டன. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றனவே… எப்படி 27 நிமிட நடனத்தையும் முடிக்கப் போகிறோம், முடித்தாலும், 5-ம் நாள் நிகழ்ச்சியில் இத்தனையும் நினைவு வைத்து எப்படி ஆடப் போகிறோம் என்பதே பெரிய கவலையாக ஆகி விட்டது.

திருமதி.உமா,திருமதி.காயத்ரியுடன்…

எதிர்பாராத விதமாக மூன்றாம் நாள் உடல் நலம் வேறு சரியில்லை, தோள்பட்டையில் சுளுக்கு, ஜலதோஷம், தலைவலி, சுரம், என்று வகுப்புக்கே போகவில்லை! மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கு தூங்கு என்று தூங்கிய பின் அடுத்த நாள் கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும், அடுத்த நாள் போவதற்கே யோசனையாக இருந்தது, ஆனால் ஆசை யாரை விட்டது? அந்த ஒரு நாள் பாடத்தைத் தவிர மற்றதை எப்படியோ சமாளித்தேன்.

நல்ல வேளையாக, முழு நடனமும் எல்லோரும் ஆடத் தேவையில்லை என்று திருமதி.காயத்ரி சொல்லி விட்டது பெரிய நிம்மதியைத் தந்தது. சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்துக் கொண்டோம். திருமதி.காயத்ரி எங்களுடன் ஆடுவது என்றும், நாங்கள் அந்ததந்தப் பகுதியின் போது வந்து சேர்ந்து கொள்வதென்றும் தீர்மானமாகியது. (ப்ளீஸ், எங்களைத் தனியா விட்டுடாதீங்க என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்). ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சிக்குக் சனிக்கிழமை அன்று கிட்டத்தட்ட தூங்கவே இல்லை. அப்படி ஒரு டென்ஷன். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த சிறிய பகுதிகளை நினைவு வைத்து பாவத்துடன் ஆட வேண்டும் என்பதே மலையைப் புரட்டும் காரியம் போலத் தெரிந்தது.

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்

ஞாயிறு அன்று நிகழ்ச்சியின் போது திருமதி.காயத்ரி முதலில் ஒரு புஷ்பாஞ்சலி ஆடினார். பிறகு பிள்ளைகள் ஸ்வாகதம் கிருஷ்ணா ஆடினார்கள். பிறகு மறுபடி திருமதி.காயத்ரி, ராமர் பஜன் ஒன்று ஆடினார். ஆகா, அவர் பாவங்களை என்னவென்று சொல்வது. குட்டி ராமரோடு விளையாடுவதையும், கொஞ்சுவதையும், பின்னலை அவன் பின்னிருந்து இழுப்பதையும், சோறு ஊட்டுவதையும், முதுகில் உப்பு மூட்டை சுமந்து கொண்டு சுற்றி வருவதையும், உறங்க வைப்பதையும், தத்ரூபமாகக் கண் முன் கொண்டு வந்தார். அதன் பின் மறுபடியும் பிள்ளைகள், “கிருஷ்ண கவுத்துவம்” ஆடினார்கள். “ஆங்கிகம் புவனம்” என்று தொடங்கும் நடராஜர் மீதான ஸ்லோகத்திற்கு நடனம் அமைத்திருந்தார், பிள்ளைகள் அனைவருக்கும் அந்த ஸ்லோகம் தெரியும் என்பதால், அந்த நடனைத்தையும் ஆடினார். அதன் பிறகுதான் வர்ணம்.

இந்த வர்ணத்தில் மீனாக்ஷியும், பார்வதியும், காளியும், ராஜராஜேஸ்வரியும், இப்படி எல்லாத் தேவியருமே வந்து விடுகிறார்கள். சாந்தஸ்வரூபிணியாக அன்னையை விவரித்து, உலக க்ஷேமத்திற்காக வேண்டிக் கொள்ளுகின்ற மிக அற்புதமான ஸ்லோகம் ஒன்றுடன் வர்ணம் முடிகிறது. வர்ணத்தை மிகவும் உணர்வு பூர்வமாக ஆடிய திருமதி.காயத்ரியின் விழிகள், வர்ணத்தின் முடிவில் நிறைந்து வழிந்தன. அந்த அளவிற்கு அவர் அதில் ஒன்றி விட்டிருந்தார். இறுதியில் எங்கள் 9 பேருடன் நடுவில் அவர் ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த கோலத்துடன் நடனமும், நிகழ்ச்சியும் நிறைவு பெற்றன.

கட்டுரையும் இங்கே நிறைவு பெறுகிறது!

இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை, அனுபவத்தை, எங்களுக்கு அளித்த திருமதி.காயத்ரிக்கும், ஏற்பாடு செய்த திருமதி.உமா செட்டிக்கும் அப்ஸராஸ் நடனப் பள்ளி மாணவ மணிகள் மிகவும் நன்றி பாராட்டுகிறார்கள்.

 

அன்புடன்
கவிநயா

 

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on ““அங்கயற்கண்ணி ஆனந்தம் கொண்டாளே”

 1. சிறந்த நாட்டியக் கலைஞரான திருமதி. காயத்ரி பாலகுருநாதன் பற்றிய செய்திகளை எங்களுக்கு அறியத் தந்ததற்கு நன்றி கவிநயா. அவர் உங்கள் குழுவினர்க்குப் பரதப் பயிற்சி கொடுத்தது பற்றிச் சுவைபட விவரித்திருக்கின்றீர்கள். கட்டுரையைப் படித்து அங்கயற்கண்ணியைப் போலவே நாங்களும் ஆனந்தம் கொண்டோம். 🙂 நன்றியும், பாராட்டுக்களும்!!

 2. தங்களின் கட்டுரையைப் படிப்பதே ஒரு அலாதியான அனுபவம். படிப்பது போலவே தோன்றவில்லை. நீங்கள் கற்றுக்கொள்ளும் போது கூட இருந்து பார்ப்பது போலவே தோன்றியது. மிகச் சிறந்த நடனக் கலைஞரான திருமதி காயத்ரி பாலகுருநாதனின் அர்ப்பணிப்பு உணர்வைப் பற்றி தாங்கள் விவரித்திருப்பது அற்புதம். கலைகளுக்கு அதிபதியான ஸ்ரீமாதங்கி தேவியே மதுரையில் கோயில் கொண்டு அண்டமெல்லாம் அரசாளும் அங்கயற்கண்ணி. அன்னையின் ஆனந்தம், எங்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது. மனமுவந்த நல்வாழ்த்துகள்.

 3. திருமதி காயத்திரி குருநாதன் நடனத்தை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ணரை யசோதா கொஞ்சுவதை அப்படியே கண்முன் கொண்டுவருவார்.
  உங்கள் யாவருக்கும் என் பாராட்டுகள்.

 4. புதுமையான அனுபவத்தின் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்ட மேகலா, பார்வதி, விசாலம் அம்மா, மற்றும் செல்வநாயகி, அனைவரின் அன்புக்கும் நன்றிகள் பல!

 5. அற்புத அனுபவம்
     அழகிய தமிழ்ச்சொற்கள்.
     ஆனந்த நடனம்.
     இனிய வர்ணனை. 
     ஈசன் அளித்தது 
     எல்லாமே 
     ஏங்கித் தவிக்கும் காலம் இனி இல்லை.
     ஒன்றே நினைத்திடும் நீ
     ஓங்கு புகழ் பெறுவாய்

     சுப்பு தாத்தா.

 6. Yes…whatever is there in the article abt Gayathri Balagurunathan are no hype but facts. I had the pleasant opp of having both Mr. Bala n Gayathri at Singapore during the Arangetram of our grand daughter Mrithika last March. We had the pleasure of hosting them at our house. Both of them are very kind people without any showoff or pride though they are exponents in Bharathanatyam..With their fine tuning of the exquisite parts of dance and final practice for 3 to 4 days given to our g.d. the function was a roaring success and everybody praised Mrithika for her excellent performance. It is true only the Guru’s tuiting kids make all the difference to excel in the final output of the disciples.  Thanks Kavinaya mam and Congrats Gayathri & Bala!

 7. Thank you Sundaram Sir.. Thank you Kavinaya Mam.. I am very happy the performance went off very well.. We need you Rasikas appreciations and blessings for ever.. Congrats Gayatri..-
   Bala

 8. அன்பினிய சுப்பு தாத்தா, உங்கள் ஆசிகள் கண்டு மனம் நெகிழ்ந்தேன். மிகவும் நன்றி.

 9. வாசித்தமைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும், மிகவும் நன்றி, திரு.சுந்தரம். உங்கள் மகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 10. திரு.பாலகுருநாதன், உங்களை இங்கே பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙂 வாசித்தமைக்கு மிக்க நன்றி. பரதக்கலையின் நுணுக்கங்களை உலகெங்கும் உள்ள மாணவ மாணவியருக்கு பயிற்றுவிப்பதோடு, பலப்பல புதுமையான நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தி வரும் உங்களுக்கும், திருமதி.காயத்ரிக்கும், நன்றிகளும் பாராட்டுகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *