சச்சிதானந்தம்

 

நெடுவெண் நிலவின் ஒளியின் சுடரே,

சுடுவெங் கதிரோன் சுடரும் நீயே,

இடுகண் ணொடுங்க அருளும் கடலே,

கடுகின் அளவும் உமையாம் அறியோம்!                                                                        91

 

விண்மீன்கள் பலகோடி விளையாடும் நேரத்திலும்,

ஒருமீனது சுடர்வீசிச் சிரிக்கின்ற வேளையிலும்,

அறுமீன்கள் தோள்களிலே தவழ்ந்த தமிழுள்,

நதிநீரில் மீன்போல நீங்காமல் மூழ்கிடுவோம்!                                                              92

 

காமுகனாய் வாழ்ந்திருந்த காலங்கள் போதும்,

அறுமுகனின் அரவணைப்பில் இனிவாழ வேண்டும்,

ஆகமங்கள் அறியாத பாமரன் என்றாலும்,

அன்புநெறி தவறாமல் உயிர்வாழ வேண்டும்!                                                               93

 

 

பாலையாய்த் திரிந்த வாழ்க்கைப் பாதையை

குறிஞ்சியென் றமைத்துத் திருத்திடும் தலைவன்,

ஏழையாய்ப் பிறந்த எளியவர்க் கெல்லாம்,

பார்வையால் அருளினை வழங்கிடும் முருகன்!                                                          94

 

மெய்யென என்னை நினைக்கவு மில்லை,

பொய்யென நெஞ்சம் வருந்தவு மில்லை,

எய்தவன் உந்தன் எண்ணப் படியே,

வையகக் கடைமை செய்கின் றேனே!                                                                              95

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அறுமுகநூறு (19)

  1. /////மெய்யென என்னை நினைக்கவு மில்லை,
    பொய்யென நெஞ்சம் வருந்தவு மில்லை,
    எய்தவன் உந்தன் எண்ணப் படியே,
    வையகக் கடைமை செய்கின் றேனே!////

    ஆழ்ந்த பொருளினை உடைய அருமையான வரிகள். பாக்களின் எண்ணிக்கை, அதற்குள் தொண்ணூற்றைந்தை எட்டி விட்டதா?. வியப்பாக இருக்கிறது. ஆவலுடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *