கீழை நாகரிகங்களில் தமிழர் சுவடுகள்

0

சேசாத்திரி

(கட்டுரையாசிரியர், ‘சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்’, ‘எத்தியோப்பிய நாகரிகர் முன்னோர் தமிழர்’ ஆகிய கட்டுரைகளை இயற்றியவர். அவற்றை அடுத்து, சீன – கொரிய மன்னர் பெயர்களைப் ஒப்பாய்வு செய்து, இந்தக் கட்டுரையைப் படைத்துள்ளார். தமிழ்த் தொன்மை, உலகின் தொன்மை குறித்த ஆய்வுகளுக்கு இந்தக் கட்டுரை உதவும். – ஆசிரியர்)

உலக நாகரிகங்கள் பலவும் சற்றொப்ப 9,000 ஆண்டுகள் அளவில் தோன்றியவை. எத்தியோப்பியா, எகிப்து, சுமேரியா ஆகிய மேற்றிசை நாகரிகங்களைப் போல சீனம், சப்பான், கொரியா ஆகிய கீழ்த் திசை நாகரிகங்களும் அதே காலத்தினவாக அறியப்படுகின்றன. ஒரு புதுக் கருத்து ஒரோவொருவரிடம் தோன்றி, பின் யாங்ஙனம் பிறருக்குப் பரவலுறுகிறதோ அதே போல தொழில், இயல், இசை, நாடகம், கட்டுமானம், ஒழுக்க வழக்கு ஆகியனவும் தொடக்கத்தில் ஒரு மூல நாகரிக மக்கள் மூலம் அவர்கள் பிற இடங்களுக்குப் பெயர்ந்து அங்கு நாகரிகங்களை ஏற்படுத்தியதாலேயே உலக நாகரிகங்களில் சில பொதுத்தன்மைகள் இன்று நாம் காண்பது. அந்த மூலத் தாய் நாகரிகம், தமிழர் நாகரிகமே என்பதை விளம்ப எழுந்ததே இக்கட்டுரை.

இந்த தாய் நாகரிகத்தார், உலகின் விளிம்புதொறும் சென்று தம் நாகரிகத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாகரிகங்களைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக, இவர்களுடைய வாழிடத்திற்கு ஏற்பட்ட கேட்டின் காரணமாக இவர்கள் கடற்கரைகளை அண்மித்த நிலப் பகுதிகளின் ஆற்றங்கரைகளில் இந்நாகரிகங்களை ஏற்படுத்தினர்.

இத்தாய் நாகரிகத்தார் இந்தியப் பெருங்கடலில் அமைந்து இருந்த பல ஆயிரம் தீ£வுகளைக் கொண்ட தென்புலத்தைத் தாயகமாக கொண்டிருந்தனர் என்றும் இந்நிலம் கடல்மட்டம் உயர்ந்ததால் கடலில் மூழ்கியது என்று தமிழறிஞர்கள் இலக்கியச் சான்றுகளின் வாயிலாக அறிவித்துள்ளனர். சில அறிஞர்கள் தங்கம், வெள்ளி முதலாய உலோகங்களின் தேவை கருதியே தாய் நாகரிகத்தார் வடக்கு நோக்கிப் பல திசைகளிலும் புலம் பெயர்ந்ததாகச் சொல்கின்றனர்.

இவ்வாறு தென்கடலில் அமைந்திருந்த நிலங்களிலிருந்து புறப்பட்ட இம்மூல நாகரிகத்தார் வடமேற்கே எத்தியோப்பியா, எகிப்து, சுமேரியா ஆகிய நாகரிகங்களையும், வடக்கே சிந்து ஆற்றுக் கரையிலும், வடகிழக்கே நெடுந்தொலைவு பெயர்ந்து சீனா, சப்பான், கொரியா ஆகிய நாகரிகங்களையும் அங்கு அக்கால் ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடி மக்களுடன் இணைந்து உருவாக்கி இருந்தனர் என்பது அறிஞர்களின் முடிபு.

இந்நாகரிகங்களின் மன்னர் பெயர்களை ஆய்கின்ற போது ஒரு நாகரிக மன்னன் பெயர் இன்னொரு நாகரிக மன்னன் பெயரிலும், சிறப்பாகக் கீழை நாகரிக மன்னன் பெயர் மேற்கு நாகரிக மன்னன் பெயரிலும் காணப்படுவதால். இவர்கள் ஒரு பொதுவான மூல நாகரிகத்தின் வழிவந்தோர் என்பது புலன் ஆகின்றது. இப்பெயர்கள் தமிழாய் இருப்பது, அந்த மூல நாகரிகம் தென் கடலின் தமிழர் நாகரிகம்தான் என முடிபு கட்டலாம்.

இம்முடிபை மெய்ப்பிக்கும் வகையில் கீழை நாகரிகங்களின் மன்னர்கள் சிலருடைய பெயர்களைச் சிந்து முத்திரை, சங்க இலக்கியம், பானை ஓடுகள் ஆகியவற்றில் இடம் பெற்ற தமிழ்ப் பெயர்களுடனும், பிற நாகரிக மன்னர் பெயர்களுடனும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை.

இந்த நாகரிகங்களை அமைப்பதில் உலகின் முதல் சுற்றுக் கடலோடிகளான தமிழ மீனவர்கள் அளப்பறிய பங்காற்றி உள்ளனர் என்பது இந்நாகரிகங்களில் காணப்படும் யாமை > ஆமை, யாமன் > ஆமன், அங்கு > சங்கு > சங்கன், பரவன், வங்கன், கடலன், உப்பன், சிப்பன், நந்து > நந்தன் > நத்தன் ஆகிய பெயர்கள் தெளிவுபடுத்துகின்றன.

பேரா. இரா. மதிவாணா¢ன் Indus script Dravidian (IsD), 1995, என்ற நூல் இதற்குப் பொ¢தும் உதவுகிறது.

தமிழர் தம் மூல இடத்திலிருந்து பிற பகுதிகளுக்குப் பரவி, நாகரிகங்களை ஏற்படுத்திய காலத்தில் தமிழில் ஆண் பால் ஒருமையைச் சுட்டும் பெயர் ஈறு `அன்’ இல்லாமையால், சிந்து வெளி உட்பட இந்நாகரிக மன்னர் பெயர்கள் பல `அன்’ ஈறு பெறாமலேயே உள்ளன. தவிர சில போது ககரம் ஹகரமாயும், வகரம் பகரமாயும், அகரம் ஒகரமாயும் திரிந்து உள்ளன. னகர மெய் ஈறு (ன்) சீனத்தில் ஙகர மெய் ஈறாக ( ங்) திரிந்துள்ளது.

சீன நாகரிக வேந்தர்கள் பெயர்

Shang ஆள்குடி 1600 – 1300 BC மன்னர் Tai Wu > தமிழில் தாய் ஊ > தாயன் ஊ எனச் செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்பது ஓரு பிராமணன் பெயர். இங்கு அன் ஈறு பெறாமல் உள்ளது. சிந்து வெளி முத்திரையில் மட்டும் இடம் பெறும் பெயர் ஊ. IsD, 1995, பக். 105, 86.

Qin ஆள்குடியில் ஒரு மன்னனுடைய ஈமப் பெயர் Er shi Huangdi 246 -210 B.C. தமிழில் எர் ஷி குய்யன் தி எனச் செப்பமாகப் படிக்கலாம். தமிழில் எல் > எர் > எரி எனத் திரியும். இதற்குச் சிவப்பு, ஒளி எனப் பொருள் உண்டு. எரிபத்தர் 63 நாயன்மாருள் ஒருவர். எரி கல் முத்தரசு 575 A.D. ஒரு களப்பிர மன்னன். போனீசிய திரை நாகரிக மன்னன் பெயர் Eri Aku 1400 B.C. தமிழில் எரி அக் > எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். அக்கன் சிந்து முத்திரைப் பெயர் IsD,1995, பக். 97. Tangun வழிவந்த கொரிய மன்னன் பெயர் Maereuk 704 – 646 B.C. தமிழில் மா எரி அக் > மா எரி அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். தமிழில் மா என்பது பெருமை, முதுமையை சுட்டும்.

மேலை Han ஆள்குடியில் ஒரு மன்னனது ஈமப் பெயர் Ai Di 6-1 B.C. தமிழில் ஆய் தி என்பது செப்ப வடிவம். கடை எழு வள்ளல்களுள் ஒருவன் ஆய் அண்டிரன் என்பான். குமா¢ மாவட்டம் ஆய் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாகவும் வேணாட்டு அரசர்கள் ஆய் மரபினர் என்றும் குமா¢ வரலாறு கூறுகின்றது. கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த ஒரு மன்னன் பெயர் Ae of Gojoseon 220 – 195 B.C. தமிழில் ஆய் என்பது செப்ப வடிவம்.

மேலை Qin அரசில் ஓரு மன்னன் பெயர் Qifu Chipan 412 – 428 A.D. கிஃபு சிப்பன் என்பது செப்ப வடிவம். கிஃபு அவன் குடும்பப் பெயர். சிப்பன் தமிழ மீனவர் பெயர். மேலை நாகரிகத்தில் Zippan, சிப் என்றெல்லாம் வரும்.

முதல் நிலை Chouchi அரசில் ஒரு மன்னன் பெயர் Yang Nandi 317 – 334 A.D. தமிழில் யாண் நந்தி என படிக்கலாம். யாண் குடிப் பெயர். நந்து > நந்தி > நந்தன் என்று விரியும். நந்து என்பது சங்கையும் நத்தையையும் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல். அக-246:1,புற-266:4, தொல்- 584:1 , 618:1 நந்திக் கடல் ஈழத்தின் ஒரு கடற்கரை. அன் ஈறு பெறாமல் இகர ஈறு பெற்றுள்ளது.

இரண்டாம் நிலை Chouchi அரசில் ஒரு மன்னன் பெயர் Yang Nandang 429 – 441 A.D. தமிழில் யாண் நந்தன் எனச் செப்பமாகப் படிக்கலாம். இங்கு ன் > ங் என திரிந்துள்ளது. பக்த நந்தனார் 63 நாயன்மாருள் ஒருவர். சிந்து முத்திரைகளிலும், பானை ஓட்டுச் சிந்து எழுத்துகளிலும் உள்ள பெயர் நந்தன். IsD,1995, பக். 111

Yang wende 443 – 454 A.D. தமிழில் யாண் வென்றி எனச் செப்பமாக படிக்கலாம். வென்றி > வெற்றி என பொருள்படும். வெற்றிவேல் செழியன் 117-160 கி.பி. ஒரு பாண்டிய மன்னன். பண்டு றகரம், டகர ஒலிப்புப் பெற்றிருந்தது.

கொரிய நாகரிக வேந்தர்கள்

தங்கன் வழிமரபில் முதல் மன்னன் Dangun Wanggeom 2333 – 2240 B.C. தமிழில் தங்கன் வங் இயம் > தங்கன் வங்கன் இயன் எனச் செப்பமாகப் படிக்கலாம். தமிழில் பொன்னைக் குறிக்க தங்கம் என்ற சொல் பிற்காலத்தில் எழுந்தது. சிந்து முத்திரைகளில் மட்டுமே தங்க. மாதங்க ஆகிய பெயர்கள் உள்ளன. கொரியர் தங்கன் என்பதற்கு வேந்தன் எனப் பொருள் கொள்கின்றனர். IsD, 1995, பக் . 151, இயன், இயனன் என்பதும் சிந்து முத்திரைப் பெயரே. IsD,1995, பக். 120. இங்கு அன் ஈறு, அம் ஈறாகி உள்ளது. வங்கன் தமிழக சிந்து எழுத்துப் பொறித்த பானை ஓடுகளிலும், சிந்து முத்திரைகளிலும் இடம் பெறும் பெயர்.

Gueul 2099 – 2083 B.C. தமிழில் குய்யல் > குய்யன் எனச் செப்பமாகப் படிக்கலாம். அன் ஈறு அல் ஈறாகி வந்துள்ளது. குய், குய்ய சிந்நு முத்திரையில் வழங்குகிறது. IsD,1995, பக். 203. அன் ஈறு போலவே அல் ஈறும் பண்டு வழங்கியது. தென் அமொ¢க்க இன்கா நாகரிக அண்ணன் தம்பி மன்னர்கள் Ninan Cuyochi 1527 A.D. தமிழில் நின்னன் குய்யக்கி & Huascar 1527 – 1532 A.D. தமிழில் குய் அழகர்.

Seohan 1993 – 1985 B.C. தமிழில் சீயகன் என்பது செப்ப வடிவம். சீய என்ற வேரைக் கொண்டு பல பெயர்கள் உள்ளன. சீயாத்தம்மன் ஒரு பெண் தெய்வம். நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதா¢த்த கங்க மன்னன் சீயகங்கன். தமிழின் சிறப்பெழுத்தான அன் ஈறு கொரியத்தில் வந்துள்ளது.

Ahan 1834 – 1782 B.C. தமிழில் அகன் > அக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். அல் ஈறு பெற்றும் வரும். சிந்து முத்திரைப் பெயர். IsD,1995, பக் 272.

Gobul 1721 – 1661 B.C. தமிழில் காப்பல் > காப்பன் எனச் செப்பமாகப் படிக்கலாம். கொரியத்தில் அல் ஈறு வந்துள்ளது. சிந்து முத்திரைப் பெயர் IsD, 1995, பக். 225.

Sotae 1337 – 1285 B.C.தமிழில் சாத்தை > சாத்தன் எனச் செப்பமாகப் படிக்கலாம். தமிழகத்தில் இன்றும் சாத்தப்பன்,

சாத்தைய்யன் என இன்றும் வழங்குகிறது. பாண்டியன் கீரன் சாத்தன் கி.மு. 150 -140. சிந்து முத்திரைப் பெயர். IsD,1995, பக்.98-99. கொரியம் இங்கு ஐ கார ஈறு பெற்றுள்ளது.

Amul 1237 – 1161 B.C. தமிழில் ஆமல் > ஆமன் எனச் செப்பமாகப் படிக்கலாம். யாமன் > ஆமன் என திரியும். முடத்து + ஆமக் + கன்னியார் > முடத்தாமக்கண்ணியார் ஒரு பெண் புலவர். கொரியம் அல் ஈறு பெற்றுள்ளது. ஐகார ஈறு வருவதும் உண்டு. எதியோபிய மன்னன் பெயர் Amen 2455 – 2434 B.C. தமிழில் ஆமன். ஒரு யுதேய அரசன் பெயர் Amon 642 – 640 B.C. தமிழில் ஆமன்.

Duhol 545 – 509 B.C. தமிழில் துக்கல் > துக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். இது ஒரு பழந்தமிழ்ப் பெயர். தென் மராட்டியர் தமிழ் மரபினரே அவர்களிடையே இப்பெயர் உள்ளது. காட்டாக, துக்காராம். இங்கு அல் ஈறு பெற்றுள்ளது.

Mulli 461 – 425 B.C. தமிழில் முள்ளி > முள்ளன் எனச் செப்பமாகப் படிக்கலாம். இங்கு இகர ஈறு வந்துள்ளது. ஒரு கேரள ஊர்ப்பெயர் முள்ளியூர்.

Goye Olga 295 – 237 B.C. தமிழில் கா இ அழக > காயி அழகன் எனச் செப்பமாகப் படிக்கலாம். காஇ சிந்து முத்திரையில் மட்டுமே இடம் பெறும் பெயர். kenoyer அணியால் கண்டு எடுக்கப்பட்ட இருபுற அச்சு முத்திரையில் சாமன் காஇ என ஒருபுறத்தே உள்ளது. காயன் எனபது இகர ஈறு பெற்று காயி என்றும் ஆகும்.

Dohoe 778 – 776 B.C. தமிழில் தோகை என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே உரிய சிறப்புப் பெயர். மயில் இறகின் தொகுப்பு தோகை எனப்படும். தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப் பொருள்.

Nak Seong 722 – 703 B.C. தமிழில் நக் சேயன் > நக்கன் சேயன் எனச் செப்பமாகப் படிக்கலாம். ஆந்திர கர்னூல் மாவட்டத்தில் கிட்டிய சிந்து எழுத்தில் கலிங்கு நக்க நந்தி என உள்ளது. சேயன் சிந்து முத்திரைப் பெயர். IsD, 1995, பக். 195.

சீன தாக்கத்தால் இஙகு னகர மெய்- ன் ஙகர- ங் மெய்யாகியது

Munyeol 776 – 761 B.C. தமிழில் முனியல் > முனியன் எனச் செப்பமாகப் படிக்கலாம். முனியன், முனியப்பன் என பெயர்கள்

இன்றும் தமிழகத்தில் வழங்குகின்றன. கொரியப் பெயர் அல் ஈறு பெற்றுள்ளது.

Hwara 413 – 385 B.C. தமிழில் கூவர > கூவிரன் என செப்ப மாக படிக்கலாம். இங்கு ககரம் ஹகரமாகியது. கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம் என்ற குறு நூலுள்,1994, க. இராசன்,

அங்கு கிட்டிய ஒரு பிராமி எழுத்து பொறித்த தாழியில் கூவிரன் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக பக். 33 இல் குறிப்பிட்டுள்ளார்.

Bukbuyeo வழியில் ஒரு மன்னன் பெயர் Godumak 108 – 60 B.C.E. தமிழில் கடு மாக் > கடு மாக்கன் எனச் செப்பமாகப் படிக்கலாம். மாக்கன் தமிழக ஊர்ப்புறங்களில் இன்றும் வழங்கும் பெயர். கொரியத்தில் அன் ஈறு பெறாமல் இப்பெயர் உள்ளது.கடு பெருமைக் கருத்தைச் சுட்டும் பெயர். கேரள எடக்கல் குன்றின் பாறையில் கடுமான் பூதன் சேர கோ என்று ஒரு கல்வெட்டு பொறிப்பு உள்ளது. இன்னும் சில, செல்வக் கடுங்கோன் வாழி ஆதன் 87-62 B.C. பாண்டியன் கடுங்கோன் 475-490 AD.

Silla வழிவந்த மன்னன் Namhae Cha Chaung 4BC -24AD

தமிழில் நங்கை சா சாண் > நங்கன் சா சாணன் என செப்பமாய் படிக்கலாம். இப் பெயர் சிந்து முத்தரையில் மட்டும் காணப்படுகிறது. IsD,1995, பக். 138,262. நங்கன் நல்லூர் சென்னையின் புற நகர். பக்ரா நங்கல் போல அல் ஈறு பெற்றும் வரும். ய > ச திரிபில் யாணன் > சாணன் என்றாகும். ன் > ங் என இப்பெயரில் திரிந்து உள்ளது.

Silla வழிவந்த அரசன் Minae 839 – 838 A.D. தமிழில் இதை மின்னை > மின்னன் எனச் செப்பமாகப் படிக்கலாம். கொரியப் பெயர் ஐகார ஈறு பெற்று உள்ளது. மின்னன் தமிழக ஊர்ப்புறப் பெயர். இன்றும் இணையத் தள வாக்காளர் பட்டியலில் இதைக் காண இயல்கின்றது.

Goryeo வழிவந்த அரசனுக்கு ஓரெழுத்துப் பெயர் U 1374 – 1388 AD தமிழில் ஊ என்பது முது பண்டையப் பெயர். சிந்து முத்திரைகளில் மட்டுமே காணப்படுகிறது. IsD,1995, பக் 217. ஆதலால் சிந்து முத்திரைகளைப் படிப்பது மிக இன்றியமையாதது. பேர. இரா. மதிவணன் சரியாகவே சிந்து எழுத்துகளைப் படித்து உள்ளார் என்பதற்கு இது ஒன்றே சான்றாய்க் கொள்ளத் தக்கது.

Joseon வழிவந்த அரசன் பெயர் Yeon Sangun 1494-1506 AD தமிழில் இயன் சங்கன் என்பது செப்பமான வடிவம். இயன் முதல் கொரியப் பெயரில் விளக்கப்பட்டது. சங்கன் இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர். வாக்காளர் பட்டியலில் உள்ளது. சங்கனூர் கோயம்புத்தூரில் உள்ள ஓர் ஊர்ப் பெயர்.

இங்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதனம் என்ற அடிப்படையில் தமிழ், தமிழர் நாகரிகப் பழமையை எடுத்து உரைக்கச் சில பெயர்கள் மட்டுமே ஒப்பாய்வு செய்யப்பட்டு உள்ளன. இப்பெயர் ஆய்வில், ஒலி ஒப்புமை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது; பொருள் ஒப்புமை பார்க்கப்படவில்லை. இந்நாகரிகங்களுடன் 13 – 14ஆம் நூற்றாண்டு வரை தமிழகம் தொடர்பு கொண்டிருந்ததால் பிற்பட்ட கால தமிழர் பண்பாடும் அங்கு பரவி இருக்கும், அப்பண்பாட்டுப் பரவலின் காலம் குறித்து சர்ச்சை எழும் ஆதலால் பண்பாட்டுக் கூறுகளும் இங்கு ஆயப்படவில்லை. இந்தப் பெயர் ஒப்பாய்வைத் தொடக்க கட்ட (prima facie) ஆய்வாக மட்டுமே கொள்ள வேண்டும் .

உண்மையில் இப்பெயர் ஒப்பாய்வு, தமிழர் நாகரிகத்திற்கும் பிற நாகரிகத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை ஆய்வார்க்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

அறிஞர் சிலர் தமிழர் சுமேரிய நாகரிகத்தினின்று சிந்துவெளி வழியாக தென்னிந்தியாவில் குடியேறியதாகக் கருத்து உரைத்து உள்ளனர். தமிழர் ஏற்படுத்திய கீழை நாகரிகங்களின் மட்கலப் பண்பாடு 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையன, அதோடு 9,500 ஆண்டுகளுக்கு முன்னேயே நெற்பயிர் வேளாண்மை சீனாவில் தொடங்கிவிட்டது எனும் போது காலத்தால் சற்று பிற்பட்ட சுமேரிய நாகரிகத் தமிழர்க்கு பாலை நிலங்கள், பனி மலைகள், பள்ளத்தாக்குகள் யாவையும் கடந்து இக்கீழை நாகரிகங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற நெருக்கடம் எழுந்ததாகத் தெரியவில்லை. எனவே இக்கூற்று தள்ளத்தக்கது. தவிர சிந்து வெளித் தளங்களான மெஹர்கர், இலக்கியன் ஜோ தரோ ஆகியன 9000 ஆண்டுகள், அதாவது, சுமேரியாவை விடப் பழமையானவை என்பது ஈண்டு நோக்கத்தக்கது. கீழை நாகரிகத்தில் ஒன்றான சப்பான் குறித்து ஏற்கெனவே `சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்’ என்ற தலைப்பில் ஒப்பாய்வு செய்யப்பட்டுவிட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.