நார்வே தலைநகரில் ஜி. கே. வாசன்
கடல் வாணிபம் குறித்து நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் 2011 மே 24 அன்று நடைபெற்ற உச்சி மாநாட்டில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் கலந்துகொண்டார்.
இந்த உச்சி மாநாட்டில் மேலும் 10 நாடுகளின் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். கடல் வாணிபத்தின்போது நடைபெறும் கடற் கொள்ளைகளைத் தடுப்பது குறித்து வாசன் அப்போது குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சவால்களைச் சமாளிக்க வேண்டும் என்று அப்போது அவர் கூறினார். கப்பல் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைச் சமாளிப்பது குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக இந்திய – நார்வே கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில் வாசன் கலந்துகொண்டார். இரு நாடுகளின் கப்பல் துறை அமைச்சர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. கப்பல் துறையில் உள்ள பிரச்சினைகள், கடலோரக் கப்பல் போக்குவரத்து, மாற்று எரிபொருளைக் கப்பல் துறையில் பயன்படுத்துவது போன்றவையும் அப்போது விவாதிக்கப்பட்டன.
2012ஆவது ஆண்டில் மீண்டும் இந்திய நார்வே கூட்டுக் குழு நடைபெற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. நார்வே நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் டிரான்ட் கிஸ்கியின் அழைப்பையடுத்து ஜி கே வாசன், நார்வேயில் தனது பயனத்தை மேற்கொண்டார். இந்திய – நார்வே நாடுகளுக்கிடையே வர்த்தகம் தற்போது 800 மில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் துறை வளர்ச்சிக்காகச் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து நார்வே வர்த்தக அமைச்சரிடம் ஜி கே வாசன் விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்தினார். ஜப்பான் நாட்டின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சைச்சி ஒக்குச்சியுடனும் ஜி கே வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – ஜப்பான் நாடுகளுக்கிடையேயான வர்த்தகக் கூட்டுறவு பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது.
=================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை