ஆராயப்படாமல் காத்துக் கிடக்கும் சித்தர்களின் அறிவியல் உண்மைகள்!

12

அண்ணாமலை சுகுமாரன்

Annamalai_SUGUMARANசித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச் சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான் இருக்கிறது.   தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால் அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும் வித்தைகள் படைத்தோர். அரிய பல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை அறிந்த விற்பன்னர்கள்.

சித்தர்கள் என்போர் வெறும் மருத்த்வர்கள் மட்டுமல்லர். வெற்று வேதாந்தம் பேசும் வறட்டுப் புலவர்களும் அல்லர். வெந்ததைத் தின்று விதி வந்ததும் போகச் சொல்லும் கர்மவினையைப் போதிக்கும் வைதீக சமயக் கும்பலைச் சேர்ந்தவரும் அல்லர்.

அவர்கள் வாழும் போதே வாழ்வின் பயனை,  மண்ணிலேயே விண்ணைக் காணச் சொன்னவர்கள். தற்போது கிடைத்த உடலைக் கொண்டே, அதைக் கற்பங்கள் பல உண்டு, பல காலம் வாழும் வழி அறிந்து, மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வித்தை அறிந்தவர்கள். கர்ம வினையை வாழும் போதே கழிக்கும் வித்தை அறிந்தவர்கள். பிறத்தலின் பயன் முடியும் வரை இங்கேயே வாழக் கற்றவர்கள். பிறத்தலின் பயனே பரிணாமத்தின் அடுத்தபடி போவதுதானே! விரும்பும் வரை இறப்பைத் தள்ளிவைக்கும் வித்தை கற்றவர்கள்.

இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையையும் இயக்குகின்ற சக்தியை உணர்ந்தவர்கள். அவர்கள் காண்கின்ற எல்லையற்ற பரம்பொருள் இங்கும் எங்கும் விரவி இருப்பதை உணர்ந்தவர்கள். சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எந்த மதத்தில் இருந்தாலும் பரம் பொருளை உணர்ந்தவர்கள்.

சொல்லப் போனால் மனித குலத்தில் யார் ஒட்டுமொத்தமாக ஆனந்தமாக இருக்கிறார்கள்?
இறப்பு இல்லாத மனிதர்கள் யார்?
மூப்பு இல்லாத மனிதர்கள் யார்?
நோய் இல்லாத மனிதர்கள் யார்?

thirumoolarபுத்தர் இறப்பு, மூப்பு, நோய் முதலிய மனிதனின் துக்கங்களைப் பார்த்துத்தானே அதற்கு வழி காணத் துறவு பூண்டார் என்று கதைகள் கூறுகின்றன. ஆனால் இதுவரை மனித குலத்தின் மாறாத இந்தத் துயரங்களுக்கு விடிவு வந்ததா? யாராவது, எந்த மதமாவது, இது செய்தால் இறப்பு, மூப்பு, நோய் வராது என்று அறுதி இட்டுக் கூறி, வழியைக் கூறி  இருக்கிறார்களா?

ஆனால் சித்தர்கள் அனைவரும் மானுடத்தின் இத்தகைய ஒட்டுமொத்த துயரங்களுக்கு வழி முறை கூறி இருக்கிறார்கள். அதுவும் ஒரே மாதிரி கூறியிருக்கிறார்கள். மரணமில்லாப் பெருவாழ்வே, அவர்கள் லட்சியம். வாழும் இதே உடலில் இருந்தே முக்தி பெறும், விடுதலை பெறும் ஆர்வம் கொண்டவர்கள்.

வாழ்வின் அத்தனை புதிர்களுக்கும் விடையைக் கண்டவர்கள். அவர்கள் தொடாத வாழ்வின் நெறிகளோ, உண்மைகளோ எதுவும் இல்லை எனலாம்.  ஆனாலும் சித்தர்கள் எனப்படுவோர், மிகவும் நடைமுறை வாதம் கொண்டோர். அவர்களின் அறிவுப் பாதையில் வெறும் வேதாந்த, சித்தாந்தப் பேச்சுகள் மட்டும் இல்லை. கூடவே அத்தனைக்கும் நடைமுறைப்படுத்தும் விதிமுறை அறிந்தவர்கள். வாழ்வின் அத்தனை விதி முறைகளும் அறிந்து வாழ்வின் விதியை வாழும் போதே மாற்றும் வல்லமை படைத்தவர்கள். வினையைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பதை மறுத்தவர்கள்.

தானே இறையென தெரிந்தவர்கள் மட்டுமல்லர்.
தானே இறையென முற்றும் உணர்ந்தவர்கள் .

இனி அவர்கள் சிந்தையில் மலர்ந்த அறிவியல் உண்மைகள் சிலவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

உயிரே! உயிரே!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்கிறார் பெண் சித்தர் அவ்வை. அரிதாய் தோன்றிய மனித உடல் அழியக் காரணம் என்ன எனச் சிந்திக்கிறோம். உயிர் போய்விட்டது என்கிறோம். அந்த உயிர் இத்தனை நாள் எங்கிருந்தது என்ற கேள்வி வருகிறது. உயிர் எங்கே இருக்கிறது என நவீன விஞ்ஞானம் இதுவரை அறுதியிட்டுக் கூறவில்லை. அதைப் பற்றி அதிகம் ஆராயவும் இல்லை. நம் சித்தர்கள் உயிரின் இருப்பிடம் குறித்து ஏதாவது கூறியிருக்கிறார்களா? எனப் பார்ப்போம். அது உண்மையா என ஆராயவும் யாராவது இனியாவது வருகிறார்களா எனப் பார்ப்போம்.

“இந்த உடலுக்கு உயிர் வந்தது எப்படி சிங்கி?- அது
தொந்தி நடுக்குழி தொப்புழ் வழியடா சிங்கா!
இந்த உடலுக்கு உயிர் எங்கே நின்றது சிங்கி? -அது
அந்தரமாயண்ட மாக்கொடி யல்லவோ சிங்கா!”
– பீர்முகமது (ஞானக் குறவஞ்சி)

BOGARதாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது அதன் தொப்புழ்க் கொடியில் உயிர் அந்தரந்தமாக இருக்கிறது என்கிறது இந்தப் பாடல். எனவேதான் பிறக்கும் குழந்தை தொப்புழ்க் கொடியுடன் சேர்ந்தே பிறக்கிறது போலும்.

குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர். அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம். குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது. உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே செல்கிறது.

உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
– திருமந்திரம் – 309

“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
– திருமந்திரம் 197

இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள். மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது என யாருக்காவது தெரியுமா என்றால் அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.

“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று”
– திருமந்திரம்  1777

“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”
– மாணிக்கவாசகர்

“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்”
– திருமந்திரம் 1797

“உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே! “

– சிவவாக்கியர்

இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின் நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு எனக் கூறப்படுகிறது. இத்தகைய தீபச் சுடரின் வடிவத்தையே நாம் சிவலிங்கம் என்று வழிபடுகிறோம் போலும்.

இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம் எனத் தெளிவாகக் கூறுகிறார்.

“தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
– திருமந்திரம் 1823-

வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின் அளவைப் பற்றி மட்டும் கூறாமலா விட்டிருப்பார்கள்.

agathiarஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால் ,அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின் அளவாகுமாம். இதைக் கூறியது நம் திருமூலர்தான்.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறது நூராயிர்த்தொன்றே!”
– திருமந்திரம் 2011

இவ்வாறு உயிரைப் பற்றி நம் சித்தர்கள் பலர் நீண்ட பல விளக்கங்கள் கொடுத்திருந்த போதிலும், இதுவரை சித்தர்களின் இத்தகைய கருத்துகள் இன்னும் நவீன ஆய்வுக்கு உட்படுத்தமலேயே காத்துக் கிடக்கிறது.

மனமே!  ஒ! மனமே!

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .
– அகத்தியர் ஞானம் 23

மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாயங்கள் எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால்,

“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”

மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம்.

இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள்.

இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர்,

உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை
அம்மை ஆணை உண்மையே

வயது முதிர்ந்த கிழவரும் மனத்தின் சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என ஆணை இடுகிறார் சிவவாக்கியர். இவ்வாறு மனத்தின் மாட்சியைப் பற்றி நம் சித்தர்கள் கண்ட பல உண்மைகள் இன்னும் ஆராயப்படாமல் காத்துக் கிடக்கின்றன.

மூச்சிலே இருக்குது சூட்சமம்!

sivavaakkiyarஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே!

பதினாறு மாத்திரை ஓடி வீணாகக் கழிந்துகொண்டிருக்கும் மூச்சை முறையாக விதிப்படி அடக்கியாளும் ஆற்றல் பெற்ற யோகியர், ஆயிரம் ஆண்டுகள் நீரில் முழுகி இருந்தாலும், மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் புதையுண்டுக் கிடந்தாலும் உடல் அழியாது என்கிறார்.

ஆக மூச்சை நெறிப்படுத்தினால் உடம்பிற்கு அழிவில்லை என்கிறார்கள். ஆனால் அதை ஏன் முறையாக ஆராய்ந்து மூச்சை நெறிப்படுத்தும் முறைகளை மக்களுக்கு அறியப்படுத்தவில்லை? தவறு என்றால் இந்தக் கூற்று தவறு என நிருபிக்கட்டுமே! பிறகு இதை ஏன் நாம் பேசிக்கொன்டிருக்கப்போகிறோம் ?

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே

இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார்கள், நம் சித்தர்கள். இதை ஏன் நாம் முக்கியமாக எடுத்து ஆராயவில்லை?

குழந்தை பிறந்ததும் எதை எதையோ சொல்லித் தரும் நாம், குழந்தைக்கு ஏன் முறையாக சுவாசிக்கச் சொல்லித் தருவதில்லை?
நமக்கே தெரிந்தால் தானே சொல்லித் தர என்கிறீர்களா? அதுவும் சரிதான். காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்கு என்று சித்தர்கள் கூறுகிறார்களே, இத்தனை பலனைத் தரும் கணக்குதான் என்ன என்று பார்க்கலாமா?

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே.

இடது மூக்கு வழியாக 16 மாத்திரை உள்ளே இழுப்பது பூரகமாகும். 64 மாத்திரை அளவு உள்ளே அடக்குதல் கும்பகமாகும். பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை வெளியிடுதல் ரேசகமாகும். இதுவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. ஆனால் இதை முறைப்படுத்தல், அத்தனை சுலபமல்ல. தக்க ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதுவும் கைக்கூடாது. எனவே இதைத் தானே செய்ய முயலவேண்டாம் .

வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்

DHANVANDHRIவிதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் என்றோம். நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே தங்கள் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ள எளிய முறைகளைக் கண்டு கூறியிருக்கிறார்கள் நம் சித்தர்கள். இதற்குச் ‘சரம் பார்த்தல்’ என்று பெயர்.

‘ஞானசர நூல்’ எனச் சரம் பார்த்தல் பற்றியும் நமது வாழ்வில் நாம் விரும்பும் வெற்றியை விரும்பிய விதமே பெறும் ஆற்றலைப்  பெறும் வழிகளையும் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் நாமோ, “தொடத் தொட தங்கமாகும் வித்தையை” கையில் வைத்துக்கொண்டே வறுமையில் நம் வாழ்வை ஒட்டி வருகிறோம்.

கேட்கில் இடம்: தூது ஆடை, அணி பொன்பூணல்
கிளர்மனம், அடிமைகொளல், கீழ்நீர் கிண்டல்
வாழ்க்கை மனை எடுத்தல், குடிபுகுதல், விற்றல்
மன்னவரைக் காணல், உண்மை வறுவல், சாந்தி
வேட்கை, தெய்வப் பதிட்டை, சுரம் வெறுப்புத் தீர்த்தல்,
விந்தைப் பெறுதல், தனம் புதைத்தல் மிகவும் ஈதல்,
நாடகமல மலர் முகத்தாய் நரகம் தீர்த்தல்
நன்றேயாம் இவ்வை எல்லாம் நயந்து பாரே!

சந்திர கலை அதாவது இடது நாசியில் மூச்சு ஓடும் போது செய்யத்தக்க காரியங்களின் பட்டியல் இது. செய்தால் இவற்றில் வெற்றி நிச்சயம் என ஞான சர நூல் 8 கூறுகிறது.

பார்க்கில் வலம்: உபதேசம், வித்தை, சேனை,
படையோட்டல், பயிர்செட்டுக் களவு, சூது,
பேர்க்கவொணா வழக்குக் கரிபரி, தேரூர்தல்
பிறங்கும் எழுந்திடுதல், சங்கீதம், பாடல்
வார்த்தை, பகைப் பக்கம் கோள், பசாசு தீர்த்தல்,
மந்திரஞ் சாதித்தல், மருந்துண்ணல், உறங்கல்,
கோத்த புன்னாடல், கொல்விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணி, தம்மென்பன யோகங் குறிக்கும் தானே
– ஞான சர நூல்   9

இவை சூரிய கலை எனப்படும் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது செய்யத்தக்கவையாகும். இந்தச் சர ஞானமும் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முறைபடுத்தப்படுமானால் தமிழர் சமுதாயம் உலகின் வளமான சமுதாயமாக ஆகிவிடும். நமது பாரம்பரிய அறிவு நமக்கு பயன்படாமல் இன்னும் இருக்கலாமா?

மருத்துவத்தின்  இலக்கணம்

சித்தர்கள் கடைப்பிடித்த மருத்துவ முறை, சித்த வைத்தியம் ஆகும். சித்த வைத்தியம், வருமுன்னர் காக்கும் ஒரு அதிசய வைத்தியம். சித்தர்களின்  ஒரே குறிக்கோள், இறை உணர்ந்து, இறையுடன் கலக்கும் வரை மூப்பைத் தள்ளிவைத்து, நோய் இல்லாமல், இதே உடம்பை மரணமில்லாமல் தான் விரும்பும் வரை வாழும் மார்க்கம் அறிந்து அதை மக்களுக்கு அறிவித்தவர்கள் தான் சித்தர்கள்.

PATANJALIமருத்துவம் என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்று இலக்கணம் வகுத்தவர்கள் சித்தர்கள்.

மறுப்பதுடல் நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பதுள நோய் மருந்தெனல் சாலும்
மருப்பதினி நோய் வாராதிருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்.

மருந்து என்பது உடல் நோயை தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
மருந்து என்பது உள நோயைத் தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
மருந்து என்பது இனி நோய் வாராது இருக்கச் செய்யவேண்டும்.
மருந்து என்பது சாவு வாராமல் செய்ய வேண்டும்.

எத்தனை உயர்வான மருத்துவ முறை, பாருங்கள். உடல் நோய் மட்டுமல்ல, உள நோயையும் தீர்க்க வேண்டுமாம். இன்று நவீன மருத்துவம் கூறும் மனம் சார்ந்த நோய்களைப பற்றியும் எத்தனை காலம் முன்பே கூறியிருக்கிறார்கள் பாருங்கள். நோய் வந்த பின் தீர்ப்பது மட்டுமல்லாது, இனி நோய் வாராது இருக்கச் செய்ய வேண்டுமாம். மருந்துண்டால் சாவே வாராது செய்ய வேண்டுமாம்.

இத்தகைய உயர்வான மருத்துவ முறைகள் அறிந்திருந்த தமிழர் மருத்துவம், இன்று “போலி மருத்துவம்” என்று குறைகூறிச் சந்தேகிக்கப்படுகிறது. நமது சொந்த மருத்துவம், நமது நாட்டிலேயே மாற்று முறை மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

ஒருகோடி சித்தருண்டு அவர்கள் பெயரை
ஓகோகோ எழுதிடவே அடங்காதையா
– சச்சிதானந்த சுழுமுனைச் சூத்திரம் 23

என்று கூறியபடி வாழையடி வாழையாக விளங்கி வரும் சித்தர்கள் வழங்கிய அறிவியல் உண்மைகளில் சிலவற்றையாவது நாம் நவீன ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதே இப்போது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

===============================================

படங்களுக்கு நன்றி: http://guruvesaranam.com, http://tamilcause.blogspot.com, http://saintofkanakkanpatti.blogspot.com

 

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “ஆராயப்படாமல் காத்துக் கிடக்கும் சித்தர்களின் அறிவியல் உண்மைகள்!

 1. இந்தக் கட்டுரை நல்வரவு ஆகுக. நம்மிடம் சித்தர்களைப் பற்றிப் பல தவறான கருத்துகள் இருப்பதற்கு ஒரு காரணம், அநாமதேய போலி சித்தர்கள் சகட்டுமேனிக்கு இடைச்செருகல்களைப் புகுத்தியது தான். இது ஐம்பது வருடங்கள் முன்னால் கூட நடந்தது. மேலும் திருமூலர் போன்ற, மனிதர்களில் மாணிக்கம் போல் திகழ்ந்தவர்களைப் புரிந்துகொள்ளாதவர்களின் வியாக்கியனங்கள். கட்டுரை ஆசிரியர், சித்தர்களைப் பற்றி நன்கு அறிந்தவர். பொருத்தமான மேற்கோள்கள்.

  சித்தர்களின் எண்ணோட்டங்களை, இந்திரா செளந்தரராஜன் மாதிரி, தத்துவரீதியில் ஆய்வு செய்தால், மனித இனத்துக்கு நலம்.

 2. மிகச்சிறந்த சித்தர்கள் பற்றிய கட்டுரையை அய்யா அண்ணாமலை சுகுமாறன் அவர்கள் வழங்கி உள்ளார்கள். சித்தர் நெறி, உலகின் உயர்ந்த நெறி. மனித இனம் மேம்படவும் இறை நிலையை உணரவும். அடையவும் உண்மையான வழிகாட்டிய வள்ளல்கள் சித்தர்கள். அவர்கள் வாதம், வைத்தியம், மந்திரம், யோகம், ஞானம் எனப் படிகளை வைத்திருந்தார்கள். அவரவரின் தகுதிக்கு ஏற்ப (இங்கு தகுதி என்பது விட்ட குறை எனப்படும் ஞானத் தொடர்பு) வாதமோ, வைத்தியமோ, மந்திரமோ, யோகமோ கைகூடும். ஞானத்தை மட்டுமே வேண்டுவோர் மற்றவற்றைச் சீக்கிரத்தில் கடந்து, ஞானமாம் சாகாக் கல்வியைப் பயின்று இறை நிலை அடைவார். சித்தர்கள் பாடல்களில் மறைபொருள் நிறைய உண்டு. காரணம் தேடுதல் உள்ளவர்கள் கண்டடைவதற்காகவே. இதைப் புரியாத பல அறிவுசீவிகள், சித்தர்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுகிறார்கள். இறை நிலையை உணர, உலகியல் கல்வி பயன்படாது. விட்ட குறை, தொட்ட குறை உள்ளவர்க்கே உண்மை விளங்கும். இது போன்ற கட்டுரைகள் வருவதன் வாயிலாக சித்தர்களைப் பற்றிய விழிப்புணர்வு தோன்றினால் மானுட வசந்தம் தோன்றும் என்பதில் ஐயமில்லை. வாழ்க வளர்க.

 3. சித்தர்க​ளைப் பற்றி சுவடிச் சித்த​ரே ​சொல்வது சிறப்பு​டையது,
  படித்​தோர் பயனு​டை​யோ​ரே.
  அன்பன்
  கி.கா​ளைராசன்

 4. மிகச் சிறப்பான கட்டுரை. நம் மக்களிடம் சித்தர்கள் பற்றிய தவறான புரிதல் என்பது மறுக்க முடியாத உண்மையே. சித்தர்கள் அருளிய பொக்கிசங்களைத் தமிழ்ச் சான்றோர்கள் எளிய முறயில் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி விளக்க உரை இயற்றினால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

 5. அய்யா அண்ணாமலை சுகுமாரன் அவர்களே,
  சித்தர்களின் வழி என்று பலர், பல விதமாகப் பிதற்றித் திரிகின்றனர். அதில் அய்யா அவர்களின் விளக்கம் இருட்டறையில் வெளிச்சம். பணி தொடரட்டும். உபதேசம் என்றால் உப =இரண்டு, இரண்டு தேசங்களைப் பற்றியது. இருதயம் என்பது இரு உதயத்தைப் பற்றியது. குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை அகஸ்தியரின் அடுக்கு நிலைப் போதத்தில் விவரித்துள்ளார்.அடுக்கு நிலைப் போதத்தைக் காண இணைப்பைக் காண்க.
  http://machamuni.blogspot.com/2010/12/11.html
  மிக்க நன்றி.
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

 6. அருமையான புரிதல் விளக்கம் சுகுமாரன்.
  வாழ்த்துக்கள் .
  கமலம்

 7. சித்தர்கள் பற்றிப் பல அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி.

  //“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
  வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
  – திருமந்திரம் – 309

  “உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
  – திருமந்திரம் 197 //
  ஆச்சரியம்.ஜீன்ஸ் திரைப்படத்தில் வைரமுத்து ஒரு பாடலில் ‘உடலுக்குள் உயிர் எங்கு உள்ளது அதுவும் அதிசயமே’ என்று சொல்லி இருப்பார். இதற்கான பதில் தெரியாமலே இருக்கிறதே என்று நான் அப்போது யோசித்தது உண்டு. அதற்கான பதில் எப்போதோ சொல்லப்பட்டு இருக்கிறது என்பது ஆச்சரியம்.

 8. திரு அண்ணாமலை சுகுமாரன் அவர்களுக்கு என் முதற்கண் நன்றியையும் வாழ்த்தையும் இந்த சித்தனை கீற்றை வெளியிட்டதற்கு

  சித்தர்கள் மிகப் பெரிய பகுத்தறிவாளர்கள் , விஞ்ஞானிகள், சீர்திருத்தவாதிகள், திரு அண்ணாமலை சுகுமாரன் கூறியது போன்று சித்தர்கள் பல தமிழ் பாடல்களின் மூலம் மருத்துவ அறிவை பறை சாற்றியுள்ளனர்

  சித்தர்கள் நோயை உடல் நோய், உயிர் நோய் என்று இரு பிரிவுகளாக பிரித்து சித்த மருத்துவம் மற்றும் சித்தர் மருத்துவம் என்றும் உருவாக்கினர் அனால் இன்று இந்த சித்த மருத்துவம் ஒரு (alternative medicine) மாற்று மருந்தாக சித்தரிக்கப் பட்டுவிட்டது இதற்கு வியாபார நோக்கமே காரணம். மேலும் சித்தர்களின் பாடல்கள் இருந்தும் நம்மால் அதை பயன் படுத்தி உய்பு அடைய முடியவில்லை இதற்கு காரணம் 1) நமக்கு இந்த பாடல்கள் முழுமையாக கிடைக்கவில்லை, அதாவது எவரால்? எதற்காக ? எப்படி? எதனால்? அழிந்தது என்பதை இன்றைய தமிழ் அறிஞர்கள் , ஆர்வலர்கள் சிந்தித்து ஆராய வேண்டும். 2) உரியவர் இல்லாது மற்றவர் தெரிந்திடாத வண்ணம் மறையாக (மறை என்பது உரியவர் அல்லாதவர்க்கு மறைத்து காப்பது, மறை வேறு வேதம் வேறு) காக்கப்பட்டுள்ளது, சித்தர்கள் உரியவர்களை தன்னுடைய சீடனாக்கி குருகுல கல்வி அளித்து அவரவர் ஆர்வத்திற்கேற்பவே அவர்களுக்கு கற்பிக்கப்படும் (இப்படி ஒருவரும் கிடைக்கவில்லையே என்று தான் வடலூர் கருங்குழி சித்தர் இராமலிங்க அடிகளார் “கடை விரித்தோம் கொள்வாரில்லை” என்று பாடினார் )

  தமிழர்களின் சிந்தனைக்கு 1) ஏன் சித்தர்கள் தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே பிறந்து வாழ்ந்து நிறைந்தனர் 2) சித்தர்கள் தமிழில் மட்டுமே பாடினர் 3) தமிழுக்கும் சித்தர்களுக்கும் தொடர்பு என்ன?

 9. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இன்றும் தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ் பயன்படுத்தப் படுகிறதா? இல்லையே!

  சித்தர்கள் உடம்பை ‘மெய்’ என்றனர். வேதாந்திகள் உடம்பை ‘மாயை’ என்றனர்.
  மாயை வென்றதாக ஒரு மாயத் தோற்றம். அருமையான கட்டுரை. இந்த கட்டுரை ஒரு தொடர் கட்டுரையா? ஆம் எனில் அடுத்த பதிவு எப்போது ஐயா?

 10. வணக்கம், நாம் அனைவரும் தமிழ் வழி தோன்றல்கள். எனவே நிச்சயம் ஒரு நல்ல வழிமுறைகள் மற்றும் நல்ல வழி நடத்துபவர்கள் கைதூக்கிவிடுவார்கள் .
  அன்புடன் – பழ. இராசசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.