வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 11

2

பவளசங்கரி திருநாவுக்கரசு

Pavalasankariஹோவென 10,000 ஆண்டுகளுக்கும் மேலாகக் கர்சித்துக்கொண்டிருக்கும் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி! வெண்பனி நுரையாகப் பொங்கி வழியும் நீர்க்கோலம்.1846ஆம் ஆண்டிலிருந்து உலக மக்களையெல்லாம் கவர்ந்து இழுக்கின்ற கற்பனைக்கெட்டாத அற்புத கலைக் களஞ்சியம்! வாழ்நாளில் ஒரு முறையேனும் அந்த அதிசயத்தைக் கண்டுவிடத் துடிக்கும் மனித மனம். கண்டபோதும் மீண்டு வர மனமின்றி அதற்குள்ளேயே கரைந்து போய்விடத் தோன்றும் மாயத் தோற்றம்! வட அமெரிக்காவின் மிகப் பழமையான, வரலாற்றுப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்விழ்ச்சியின் அழகை வர்ணிக்க, சாமான்ய மனிதரால் ஆகாது.

இயற்கையை அள்ளிப் பருகி, அதை அற்புத முத்துகளாக வெளிக்கொணர்ந்து கோர்த்து அழகிய கவி மாலையாக்கித் தந்திட ஒரு கவியாக இருக்க வேண்டுமன்றி, அவந்திகா போல ஓவியராக இருக்க வேண்டும். படகில் நீர்வீழ்ச்சியின் மிக அருகே செல்லும் போது அந்த நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகள் நம்மைச் சுற்றி பூமாரி பொழிந்து, நனையச் செய்து, இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் இனிய சூழல். கடந்த மாதம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்த போது தன் நண்பர்கள் குழுவுடன் இந்த அற்புதத்தில் நனைந்து திளைக்க வேண்டி, வந்திருந்தாள் அவந்திகா.

படைப்பாளிகள் இது போன்று காணக் கிடைக்காத அரிய காட்சிகளைக் கண்ட பின்பும் வாளாவிருக்க இயலுமோ? அவந்திகாவும் அப்படித்தான். இந்த அழகை அள்ளி எடுத்து வரும் முயற்சியுடன் தயாராகத்தான் சென்றிருந்தாள், வரைபலகை மற்றும் வண்ணங்களுடன். அடக்கவொண்ணாத ஆவலுடன் அவள் வரைந்த அந்த ஓவியம், ஒரு சரித்திரம் படைத்தது. படைப்பாளிகளின் பார்வைகளில் அகப்படுவதே வித்தியாசமான காட்சிகள்தானே.

ஆம், நயாகரா நீர்வீழ்ச்சியின் குளிர்ச் சாரலுடன் ஆனந்தமாகக் குலவிவிட்டு அத்துணைக் காட்சிகளையும் கண்களில் தேக்கிக் கொண்டு, அதை வண்ணங்களுடன் குழைத்து ஓவியமாகத் தீட்டக் கையும் மனமும் துடிக்க, அதற்காக பசும் புல்வெளியினூடே, சீகல் பறவைக் கூட்டங்களினூடே, ஓர் இடத்தைத் தேர்வு செய்தவள், அங்கு ஒரு தென்னிந்தியத் தம்பதியினர் அழகான ஒரு பச்சிளங்குழவியை கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டு அந்த தாய்மையின் அழகிலும், மழலையின் சிரிப்பிலும் உள்ளம் பறிகொடுத்து நின்றிருந்த சமயம், அக்குழந்தையின் தந்தை தாங்கள் உண்டு மீந்து போன உணவுப் பொட்டலத்தை குப்பைத் தொட்டியில் கொண்டு சென்று போட, அதையே கவனித்துக்கொண்டிருந்த, நெடிதுயர்ந்த ஒரு அமெரிக்க, மனிதர், முதுமையின் வாசலில் இருந்த அவர், அந்த உணவுப் பொட்டலத்தை பாய்ந்து சென்று எடுத்து வேகமாக உண்ண ஆரம்பித்ததையும் ஆச்சரியமாகக் கண் கொட்டாமல் கண்டவள், இக்காட்சிகள் அனைத்தையும் அழகான வண்ண ஓவியமாகத் தீட்டினாள். அந்த நிதர்சனமான காட்சியின் ஓவியத்தைக் காண ஒரு சிறு கூட்டமே அங்கு கூடிவிட்டது.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர், இந்த ஓவியத்தின் அழகில் மயங்கியவர் அவந்திகாவைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவளுடைய மற்ற ஓவியங்கள் பற்றியும் அறிந்துகொண்டதன் விளைவாக ஒரு ஓவியக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்து, அதன் மூலம் நல்ல வரவேற்பும் பெற்றிருந்தாள் அவந்திகா! மிக இளகிய மனம் படைத்த அவந்திகாவின் கண்களில் சிக்கிய அத்துணைக்   காட்சிகளும் உயிர் பெற்று எழுவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்றுதான் அவளைப் புகழ்ந்துகொண்டிருப்பர் அவள் நண்பர்கள்.

niagara fallsஅதே கண்காட்சியைத் திரும்பவும் நியூ ஜெர்சியில் நடத்த வேண்டுமென்ற நண்பர்களின் கட்டாயத்தினால் இந்த டெபுடேஷன் சமயத்தையே இதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று முடிவெடுத்தாலும் அதற்கு அவளுக்குப் பல உதவிகள் தேவைப்பட்டன. இதற்குத்தான் முக்கியமாக தினேஷிடம் கேட்டிருந்தாள். அவந்திகா பொதுவாக எவரிடமும் உதவி என்று பெரும்பாலும் வந்து நிற்கக்கூடிய பெண் அல்ல என்பதை அனிதாவும் அறிந்திருந்ததால், அவள் வேறு வழியின்றியே தங்கள் உதவி நாடி வீடு தேடி வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு அவளுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற உறுதியுடன் தான் மாறனைப் பற்றிக் கூறினார்கள்.

அவந்திகாவிற்கு இளமாறன் என்ற அந்த பெயர் எங்கோ கேட்டதுபோல் இருந்தாலும், அவளுக்கு அது பற்றி ஆய்வு செய்யும் எண்ணம் தோன்றவில்லை. மேலும் இளமாறன் என்ற அந்த இளைஞன் குறித்து அவளுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உருவாகியிருந்தது. நாடு விட்டு நாடு வந்து, தனி ஒரு பெண்ணாக ஓவியக் கண்காட்சி நடத்துவது என்பது சாமன்ய காரியம் அல்ல என்பதை அறிந்திருந்தாலும், நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால், துணிச்சலுடன் ஒப்புக்கொண்டாள். அவர்களும் நல்ல படியாக கண்காட்சியை, வாஷிங்டன் வாழ் மக்கள் மெச்சும்படி நடத்தி விட வழிவகுத்தனர். அதே போல் எளிதாக நியூ ஜெர்சியிலும் நடத்த முடிய வேண்டுமே என்ற கவலை இருந்தாலும், தினேஷும் அனிதாவும், இளமாறன் பற்றிக் கூறியதும் அங்கேயும் நல்லபடியாகக் கண்காட்சியை நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்தது அவளுக்கு.

மாறன் பயணக் களைப்புத் தீர சுகமாக வெந்நீரில் ஷவர் குளியல் போட, நேரம் போனதே தெரியாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம், விடாமல் தொலைபேசி அழைப்பு இடையில் நுழைந்து, சுய நினைவிற்குக் கொண்டு வந்தது.

‘ஓ…. எவ்வளவு நேரமாகக் குளித்துக்கொண்டிருக்கிறோனோ தெரியவில்லையே என, அவசரமாகப் பூத்துவாலையை எடுத்துச் சுற்றிக்கொண்டு ஓடி வந்தான்.

‘‘ஹலோ…..”

‘‘ஹலோ, நான் தினேஷ். மாறன்தானே..?’’

‘‘ஆமாம் தினேஷ்.”

“நலம்தானே…?”

“ம்ம்.. நலமாக இருக்கிறேன். நீயும் உன் மனைவியும் நலம்தானே?’’

“ம்ம்…நலம்தான், மாறன். சரி அப்பா இப்போது எப்படி இருக்கிறார். நாலைந்து நாட்களாக உன்னைத் தொடர்புகொள்ள நினைத்து முடியாமல், ரம்யாவைத் தொடர்புகொண்டேன். அவர்தான் நீ ஊருக்குச் சென்றிருக்கும் விவரத்தைக் கூறினார். அப்பா இப்போது நலமாக இருக்கிறார் அல்லவா?’’

‘‘ம்ம்.. நன்றாக இருக்கிறார். ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆண்டவன் அருளால் இப்போது தேறிக்கொண்டிருக்கிறார்.’’

“நல்லது மாறன். எனக்கு ஒரு உதவி ஆக வேண்டும் உன்னால். அதனால்தான் நாலைந்து நாட்களாக உன்னைத் தொடர்புகொள்ள முயன்றேன்.”

“சொல்லுப்பா, என்ன விசயம்?”

“ஒன்றுமில்லை. என் மனைவியின் உறவினர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருக்கிறார். ஒரு பிரபல கம்பெனியில் பணிபுரிகிறார். அவர் கம்பெனியில் வேலை சம்பந்தமாக நியூ ஜெர்சியில் மூன்று மாதம் தங்க வேண்டியுள்ளது. அதனால் அங்கு தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து தர முடியுமா? அவர் மற்றவர்களிடம் எளிதில் பழகத் தயங்குபவர். எனக்கும் அங்கு வேறு ஒருவரையும் பழக்கம் இல்லை.”

“ஓ.. அவ்வளவுதானே, பார்த்தால் போகிறது. அவருக்கு எவ்வளவு நாட்கள் தங்க வேண்டும், எது போன்று தங்குமிடம் வேண்டும், தனியாகவா அல்லது வேறு யாருடனாவது பகிர்ந்துகொள்ள முடியுமா என்று தெரிந்தால் அதற்குத் தகுந்தது போல் பார்க்கலாம்.”

‘‘ஏன் மாறன், உன் குரலில் ஒரு உற்சாகமே இல்லையே, இன்னும் தந்தையின் நினைவாகவே இருக்கிறாயா? நானும் சிரமம் கொடுக்கிறேனா?’’

‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை தினேஷ். நீ சொல்லு. போகப் போகச் சரியாகிவிடும். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். சொல்லு.’’

தினேஷிற்கு மாறன் இருக்கும் மன நிலையில் அவனைத் தொந்தரவு செய்வது தவறாகப் பட்டாலும், வேறு வழி தெரியவில்லை. புதிய இடத்தில் ஒரு பெண் தனியாகப் போய் தங்க வேண்டுமானால் அதில் எத்துணைச் சிரமம் இருக்கும் என்பதும் அறிந்ததுதானே. அதனால் மாறனிடம் அவந்திகா பற்றி அனைத்து விவரங்களும் கூறி, தகுந்த உதவி செய்யச் சொல்வதைத் தவிர, வேறு வழியில்லை.

அவந்திகாவும் வேறு யாராவது பெண் தோழிகள் கிடைத்தால் அவர்களுக்குச் சிரமம் இல்லையென்றால் அறையைப் பகிர்ந்துகொள்வதில் சிரமம் இல்லை என்றே கூறியிருந்தாள். அதனால் தினேசும் அது போன்றே ஏதாவது தங்குமிடம் கிடைத்தால் அவந்திகாவிற்கும் துணையாக இருக்கும் என்று முடிவு செய்து மாறனிடம் அது போன்றே பார்க்கும்படி கூறினான்.

மாறனும் ரம்யாவிடம் கேட்டால் ஏதாவது செய்வாள், அல்லது அவள் அறையிலேயே தங்குவதிலும் சிரமம் இருக்காது என்றும் நினைத்தான். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடாக இருந்தாலும் அதில் இருவர் தங்கியிருக்கிறார்கள். ரம்யாவும் ஊருக்குச் சென்றால் திரும்புவதற்கு எப்படியும் 30 நாட்கள் ஆகும். அதனால் அது வரையிலாவது அவள் அறையில் தங்கிக்கொள்ளலாம் என்றும் நினைத்து, காலையில் ரம்யாவிடம் கேட்டுவிட்டு முடிவு சொல்வதாகச் சொல்லி முடித்தான் தினேசிடம். போனை வைத்தவுடன் தான் அவனுக்கு நினைவு வந்தது அந்தப் பெண் யார், பெயர், வேலை பார்க்கும் கம்பெனி விவரம் ஏதும் கேட்காமல் விட்டுவிட்டோமே என்பது. சரி நாளை ரம்யாவிடம் பேசிவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் படுக்கையறைக்குச் செல்ல முற்பட்டான்.

மனத்தில் எந்தச் சலனமுமில்லாமல் அமைதியான உறக்கமாகவே இருந்தது. காலையில் ரம்யாவிடம் மறக்காமல் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டான். தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி எந்த முடிவும் எடுக்கும் நிலையில் தனது சூழல் இல்லையென்றாலும், பெற்றோரின் நிலையை அனுசரித்தே தன் முடிவும் இருக்க வேண்டியதன் அவசியமும் உணர்ந்திருந்தான்.

ஆனாலும், நாம் எடுக்கும் எந்த முடிவும் விதியின் போக்கைக் கட்டுப்படுத்துவதில்லையே. அதன் விருப்பப்படியேதானே ஒருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தன் மனக்கோவிலில் தெய்வமாக வீற்றிருக்கும் மகராசியை பூரண கும்பம் கொண்டு வரவேற்கப் போகிறானோ அல்லது அஞ்சி ஒடுங்கி தன்னையே ஏமாற்றிக்கொள்ளப் போகிறானோ என்பதை முடிவு செய்யப் போகும் அந்த விதியின் தேவதையும், மாறனைப் போலவே, அமைதியாக சலனமில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கிறதோ……….. காலம் பதில் சொல்லும்!

(தொடரும்………….

=================================

படத்திற்கு நன்றி: http://webecoist.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 11

  1. என் கருத்தை மதித்து ஏற்றுக்கொண்ட ஆசிரியருக்கு நன்றி.

    ‘…இக்காட்சிகள் அனைத்தையும் அழகான வண்ண ஓவியமாகத் தீட்டினாள். அந்த நிதர்சனமான காட்சியின் ஓவியத்தை…’

    =>இதற்கு ஓரளவு இணையான சித்திரமோ அல்லது ஒரு வர்ணனையையோ எதிர்பார்த்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.