மகாபாரத முத்துக்கள் பகுதி 6 – பாண்டியனின் வீரம் II
புவனேஷ்வர்
அன்பர்களே, சென்ற வாரம், பாண்டியனை அஸ்வத்தாமன் அறைகூவி அழைத்ததை பார்த்தோம். இனி என்ன நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.
கௌரவப் படையைக் காப்பாற்ற பாண்டியனைத் தானே இனி தாக்க வேண்டியது அவசியம் எனக் கருதி, அஸ்வத்தாமன் இனிய வார்த்தைகளால் பாண்டியனோடு பேசலுற்றான்.
“நற்குலப் பிறப்பும், ஒப்பற்ற கல்வியும் வீரமும், தாமரை போன்ற கண்களையும் உடைய பாண்டிய அரசே! வாரத்திலும் புகழிலும் உனக்கு இந்திரனே நிகராவான். வலிய நினது கைகளால் வில்லைப் பற்றி நானை இழுத்து அம்புகளை நீ உன் பகைவர்கள் மீது பொழியும் காட்சி, ஊழிக்காலத்தில் காண்போர் அஞ்சும் கருமேகங்கள் மழையை போஹிவது போல உள்ளது! உனக்கு நிகராக நின்று போரிடக் கூடிய வீரனை எங்கள் படையில் என்னைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை. தன்னந்தனியாக ஒரு சிங்கம் காட்டில் மான்களை துரத்தி வேட்டையாடி அழிப்பது போல நீ தனி ஒருவனாக நின்று தேர்களையும் யானைகளையும் குதிரைகளையும் காலாட்படைகளையும் உனது வில்வன்மையால் அழிக்கிறாயே! வயல்களை அழித்து விடும் இடியுடன் கூடிய மழை மேகம் போல, உன் சிம்ம நாதங்களுடன் நீ போர் புரிந்து ஜொலிக்கிறாய். சட்டை உரித்த விஷ நாகங்களை ஒத்த உனது அம்புகளை உன் அம்புறாத்தூணியில் இருந்து எடுத்து விடுத்து, அந்தகாசுரன் முக்கண்ணனுடன் பொருதது போல நீ என் ஒருவனுடன் மட்டும் போர் இயற்ற வல்லாயோ?” என்று அறைகூவல் விடுத்தான்.
“அப்படியே ஆகட்டும்” என்றான் பாண்டியன்.
“தாக்கு” என்று சொல்லி விட்டு, அடுத்தக்ஷணம் பாண்டியன் மேல் சரமாரி பொழிந்தான் அஸ்வத்தாமன். கூரிய ஒரு அம்பினால் அஸ்வத்தாமனை தாக்கினான் பாண்டியன். பாண்டியனின் மர்மஸ்தானங்களைக் குறிவைத்து, நெருப்பை ஒத்த அம்புகளை விடுத்தான் அஸ்வத்தாமன். அது போதாதென்று பத்து நாராசங்களையும் எய்தான். பயமற்ற பாண்டியன் அவற்றை தனது ஒன்பது அம்புகளால் துண்டித்தான். பாண்டியனின் பெயர் பொறித்த நான்கு கணைகள் அஸ்வத்தாமனின் நான்கு குதிரைகளை முடித்தன. அஸ்வத்தாமன் அவ்வேளையில் எய்த மற்ற அம்புகளை தனது அம்புகளால் சுலபமாக தடுத்து விட்டு அச்வத்தாமனுடைய வில்லின் நாணை அறுத்தான் பாண்டியன். அதற்குள் தனது பணியாளர்களால் தனது தேருக்கு புதிய புரவிகள் பூட்டப்பெற்றதை அறிந்தவனாக அஸ்வத்தாமன் தைரியம் கொண்டு மீண்டும் நானேற்றி ஆயிரம் ஆயிரம் அம்புகளை மிக விரைவில் பாண்டியன் மீது எய்தான். இந்த வியத்தகு வில்வன்மையால் வானம் பறவைக் கூட்டத்தால் மூடப்பட்டது போல மூடப்பட்டது. கீழே அம்புகளின் நிழல் வீழ்ந்து வெயிலை மறைத்தது. அஸ்வத்தாமனின் அம்புகள் தீரா என்று நன்கு அறிந்திருந்தும், வீரச் செருக்கு கொண்ட மறத்தமிழன் பாண்டியன் அந்த அம்புகளை தனது அம்புக் கூட்டத்தால் தடுத்துத் தள்ளினான். மிகக் கவனமாக வில்லேந்தி ஒவ்வொரு அம்பையும் தடுத்து வெட்டிய பாண்டியன், இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் சில கூரிய வாளிகளைத் தொடுத்து அஸ்வத்தாமனின் இரு சக்ர-ரக்ஷகர்களை [1] யமாலயம் அனுப்பினான்.
இதுவரை பாண்டியனை புகழ்ந்து கொண்டும், அவன் வில்வன்மையை ரசித்துக் கொண்டும் அவனோடு விளையாட்டாக போரிட்ட அஸ்வத்தாமன் பாண்டியனின் லாகவத்தைக் கண்ட அஸ்வத்தாமன் இப்போது எச்சரிக்கையோடு முன்னிலும் உக்கிரமாக போரில் முனைந்தான்.
அஸ்வத்தாமன் ருத்ராம்சமாகப் பிறந்தவன். அந்தணனுக்குப் பொருந்தாத கோபக் குணம் இயல்பாகவே உடையவன். இப்போது பாண்டியனோடு புரியும் போரில் நிஜமாகவே அவனுக்கு சற்று ஆத்திரம் வந்தது.
துரோணர் தனது மகனுக்கு அளித்த விற்போர்ப் பயிற்சி, வேலையைக் காட்டத் துவங்கியது. அஸ்வத்தாமனது வில் எப்போதும் வட்டமாக வளைந்தது போலவே காட்சிதரத் துவங்கியது. ஆலமரத்தில் தங்கும் பறவைகள் மாலை வேளையில் மரத்தை நோக்கி விரைந்து வருவது போல அஸ்வத்தாமனின் அம்புகள் பாண்டியனின் தேரை நோக்கி வர ஆரம்பித்தன. அடுத்தடுத்த அம்புகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு வருவன போல பாண்டியன் தேரை நோக்கி விரைந்தன. பாண்டியனும் அதற்குச் சளைக்கவில்லை. தனது அம்புமழையால் அஸ்வத்தாமன் விடுத்த அம்புகளை தடுத்துக் கொண்டு போரிட்டான். ஆயினும் அவனால் அச்வத்தமனைக் காயப் படுத்த முடியவில்லை. அச்வத்தாமனாலும் பாண்டியனைத் துளைக்க முடியவில்லை. இப்படியே வெற்றி தோல்வி இல்லாமல் நேரம் போவது தெரியாமல் இருவரும் வெறி கொண்டவர்கள் போல போரிட்டார்கள்.
கொஞ்சம் நேரமல்ல. சில நிமிஷங்கள் அல்ல, மூன்று மணி நேரம் இந்த போர் வெற்றி தோல்வி இன்றி மும்முரமாக நிகழ்ந்தது. இருவருக்குமே, எதிராளி எய்த அம்புமழையை தன் மேல் விழாமல் தற்காத்துக் கொள்வது பெரும்பாடாக இருந்ததால், தற்காப்புப் போரே முக்கிய வேலையாயிற்று. அதில் எங்கிருந்து எதிராளியைத் தாக்குவது? ஒரு க்ஷணம் எதிராளி கவனம் சிதற மாட்டானா, அதைப் பயன்படுத்தி அவனை முடித்து விடலாம் என்று இருவருமே புலி பதுங்குவது போல காத்துக் கொண்டு போரிட்டார்கள்.
மூன்று மணி நேரத்தில் அஸ்வத்தாமன் எவ்வளவு அம்புகளை எய்தான் தெரியுமா? வண்டிக்கு எட்டு காளைகள் பூட்டிய எட்டு மாட்டு வண்டிகள் மீது வைத்து இருந்த அத்தனை அம்புகளையும் மூன்றே மணி நேரத்தில் பாண்டியன் மீது எய்து அவனைக் கொல்லப் பார்த்தான் அஸ்வத்தாமன். அத்தனையையும் தடுப்பதிலேயே பாண்டியனின் கவனம் இருந்தது. யமனைப் போல, அல்ல அல்ல, யமனுக்கே யமனைப் போல (சிவனைப் போல) அஸ்வத்தாமன் படைகளுக்குக் காட்சி அளித்தான். மாரிக்கால மேகம் மழை பொழிவது போல சரவர்ஷம் பொழிந்த துரோணரின் புதல்வனை பாண்டியன் தனி ஒருவனாக, பொங்கும் பருவகாலக்கடலை கரை தடுத்துத் தாங்குவது போலத் தாங்கினான்.
நேரம் ஆனது. ஒரு கட்டத்துக்கு மேல் பாண்டியனுக்கு பொறுமை போய் விட்டது. மூன்று மணி நேரமாக இவன் அம்புகளைத் தடுப்பதிலேயே இருக்கிறோமே என்று சலித்து விட்டது பாண்டியனுக்கு. சலிப்பு ரௌத்ராகாரமான கோபமாக வெளிப்பட்டது.
இது வரை மனுஷ்ய ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள் இருவரும். பாண்டியனுக்கு சலிப்புத் தட்டியது. ஆயிரம் ஆயிரமாக வந்த அம்புகளை ஆயிரம் ஆயிரமாக அம்பு விட்டுத் தடுப்பது வீண் வேலை. இந்தப் பிராம்மணனுக்கு களைப்பு என்பதே கிடையாது, ஆகவே இவன் விடுக்கும் படைகளை ஒரே அம்பில் அழிப்போம் என்று எண்ணினான் தென்னாட்டு வீரன். வாயவ்யாஸ்திரத்தை எடுத்து மந்திரித்து விடுத்தான். கிளம்பிய புயற்காற்றில் அஸ்வத்தாமன் விடுத்த எல்லா அம்புகளும் வந்த வழியே கௌரவர் படைகளை நோக்கியே சிதறி தாறுமாறாகப் பறந்தன. கௌரவர் படை சிதறியது. புகழையும் மானத்தையும் காலத்திலேயே விட்டுவிட்டு ஓடினார்கள். இந்த உலகத்தையும் மேலுலகத்தையும் துறந்து கௌரவர் படை சிதறியது. (தோல்வியால் இவ்வுலக சுகமில்லாமல் போனது. புறம் காட்டி ஒடியதால் மேலுலகமும் – வீரஸ்வர்க்கமும் இல்லாது போனது).
இதைக் கண்ட பாண்டியன் சிம்மநாதம் செய்து தோள்தட்டி ஆர்ப்பரித்தான். அஸ்வத்தாம மேகம் பொழிந்த மழையை பாண்டியப் புயல் சிதறடித்து கர்ஜித்தது.
இதைப் பொறுக்காத அஸ்வத்தாமன் பாண்டியனின் சந்தனம் பூசிய தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். நொடிப் பொழுதில் அவன் குதிரைகளைக் கொன்றான். ஒரே அம்பில் பாண்டியனின் சாரதியை கொன்று, ஒரு அர்த்த சந்திர பாணத்தால் பாண்டியனின் வில்லையறுத்தான் அஸ்வத்தாமன். அதன் பின்னர் ஆத்திரத்தால் பாண்டியனின் தேரினையும் சிறு துண்டுகளாகப் பிளந்தான். பாண்டியன் தேரில் இருந்த எல்லா ஆயுதங்களையும் தனது அம்புகளால் அழித்தான். பாண்டியனைக் கொல்ல அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பாண்டியன் நிராயுதபாணியானதாலும், பாண்டியனோடு இன்னும் கொஞ்சநேரம் போர்புரியும் ஆசையாலும் பாண்டியனை அந்த அந்தணன் கொல்லவில்லை. அந்தநேரம் பார்த்துக் சூதபுத்திரன் கர்ணன் யதேச்சையாக அங்கே வந்தான். பாண்டவர் படைகளை தனது அம்புகளால் சிதறடித்தான். அஸ்வத்தாமன், பாண்டியனைக் கொள்ளாமல் சற்று காத்திருந்தான்.
பாண்டியன் ஆயுதமும் தேரும் எல்லாவற்றையும் இழந்தாலும் வீரம் மட்டும் இழக்கவில்லை. வலிய தனது இரு கரங்களைத் தவிர வேறு ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நின்ற நிலையிலும், புகழும் மானமுமே பெரிதென்று வாழும் தொல்தமிழர் குடிப் பிறந்த அம்மன்னன் புறங்காட்டவில்லை. பயம் என்பதே அறியாத அம்மன்னன், அஸ்வத்தாமன் மீது மிக்க சினம் கொண்டு அம்மன்னன் சுற்று முற்றும் பார்த்தான்.
ஆங்கிலத்தில், Fortune favours the brave என்றொரு முதுமொழி உண்டு. ஆங்கில இலக்கிய உலகத்தில் அழியாப் புகழ் பெற்ற Macbethஇல் Bellona’s bridegroom (வெற்றித்தேவதையின் காதலன்) என்று அந்த வீரனை (Macbethஐ) ஷேக்ஸ்பியர் வர்ணிப்பார். அது போல பாண்டியன் நின்றான் என்றால் மிகையன்று.
அந்நேரம் பார்த்து அங்கே பாண்டவர் படையைச் சேர்ந்த ஒரு பெரிய யானை வந்தது. அந்த யானை மேல் எல்லா விதமான ஆயுதங்களும் இருந்தன. மதம் பிடித்த அந்த யானை, அடக்குவார் யாருமின்றி பாகனில்லாமல் அந்தப் பக்கம் தன்னிச்சையாக ஓடி வந்தது. பாண்டியன் பார்த்தான். வெண்ணை இருக்க நெய்க்கு அழுவானேன் என்று எண்ணிய பாண்டியன் அடுத்து செய்ய வேண்டியதை மனதில் நிச்சயித்துக் கொண்டான்.
என்ன செய்தான் பாண்டியன்?
அது அடுத்தவாரம், அன்பர்களே!
பிரியங்களுடன்,
புவனேஷ்
உபரித்தகவல்கள்:
[1] சக்ர ரக்ஷகர்கள்:
ஒவ்வொரு மகாரதனுக்கும், அதிரதனுக்கும் அவனது வலப்புறமும் இடப்புறமும் இரண்டு புகழ் பெற்ற மாவீரர்கள் துணையாகச் செல்வார்கள். இவனுக்கு அவர்கள் சளைத்தவர்கள் அல்ல. யார் நடுவில் போவது, யார் பாதுகாப்பது என்பதை அவர்கள் பேசித் தீர்மானித்துக் கொண்டு போவார்கள். பல சமயங்கள் நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ இப்படி கூட்டாகப் போவது வழக்கம். அவனைத் தாக்கும் படையைத் தாங்களும் தாக்கி வழி உண்டாக்குவார்கள், பாதுகாப்பார்கள். இவன் தேர் உடைந்தால் அவர்கள் தேரில் ஏற்றுக் கொள்வார்கள். இவர்களும் அவன் தேரில் தேவைப் பட்டால் ஏறுவார்கள். அவன் மீது எய்யப்பட்ட ஆயுதங்களை இவர்கள் தடுப்பார்கள். இவர்களை அவன் பாதுகாப்பான். இன்றைக்கு விமானப்படையில் WING MAN என்று கூடப் போகிறார்களே, அதே தான். நினைவிருக்கட்டும், இவர்கள் சம வீரர்கள். பணியாட்கள் இல்லை. team work ஆக செயல்படுவது.
அர்ஜுனனுக்கு என்றுமே துருபதன் மக்களாகிய உத்தமொஜசும் யுதாமன்யுவும் கூடப் போவார்கள். அவர்கள் இவனுக்கு மைத்துனர்கள், அவர்களும் மகாரதர்கள். தருமனுக்கு நகுலனும் சகாதேவனும் எப்போதும் கூடப் போவார்கள்.
சில சமயம், தன்னிலும் உயர்ந்த வீரர்களை இப்படி துணையாக அழைத்துப் போவதுண்டு. மிகவும் பணிவாக வேண்டிக் கொள்வார்கள்! முதல் போருக்கு செல்லும் மகனாகவோ, அனுபவம் அற்ற சிஷ்யனாகவோ, மிகவும் பிரியமானவனாகவோ இருப்பின் பெரியோரே வலிய துணை செல்வதும் உண்டு.
பீஷ்மரைக் கொல்ல சிகண்டிக்கு அருச்சுனனும் பீமனும் இப்படி துணையாக போனார்கள்,
காலாள் வீரர்களுக்கு துணையாக போகிறவர்கள் “பாத ரக்ஷகர்கள்”. புகழ் பெற்ற சாரதி ஆனால் (அதாவது அவன் கொல்லப்பட்டால் அவனைப் போல இன்னொருத்தன் இல்லை என்ற நிலை இருப்பின்) அவனுக்கு பாதுகாப்பானவர்கள் பார்ஷ்ணி ரக்ஷகர்கள்.
போர்கள காட்சியை கண்முன் காட்டி தாங்களின் எழுத்து நடை அசத்துகிறது. பாராட்டுக்கள்.
வரிக்கு வரி உவமைகள். போர்க்காட்சிகளை உவமைகளுடன் விளக்கும் பொழுது அவை வேலும் மெருகேறுகின்றனே. வாழ்த்துக்கள்.