குரு பிரசாத்

இன்றைய தினசரிகளில் தவறாது இடம் பிடிக்கும் செய்திகள் சிறுமி பாலியல் பலாத்காரம்… மற்றொன்று பள்ளி பேருந்தில் விபத்து – சிறுவர்கள் பலி!

இளைய தலைமுறை, நாளைய இந்தியா, இவர்கள் வருங்காலத் தூண்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் குழந்தைகள் படும் பாட்டை யாரேனும் உணர்கிறோமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

பெற்றோர்களின் கட்டாயத்தாலும் வற்புறுத்துதலாலும் தனது ஆசைகளை துறந்து விருப்பங்களை விடுத்து சர்க்கஸ்/மிருகக்காட்சிசாலை விலங்குகளை போல வாழும் இவர்கள் எவ்வளவு பரிதாபத்துக்கு உரியவர்கள்?

school-busதினசரி காலை நடைப்பயிற்சியின்போது 6.30 மணிக்கு வரிசையாக செல்லும் பள்ளி வாகனங்களை பார்க்க பகீர் என்றிருக்கிறது. கடைசி குழந்தையை எட்டு மணிக்கு ஏற்ற வேண்டிய பேருந்து ஆறரை மணி முதல் குழந்தைக​ளை ஏற்றவேண்டி இருக்கிறது.

பெரிய பள்ளி/சிறந்த பள்ளி/ தரமான கல்வி என்று ஒரு அளவுகோலை கொண்டு நாம் சேர்க்கும் பள்ளி  இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் கொடுமையே… மாநகரங்களில் அனைத்து வசதியும் கொண்ட தனியார் பள்ளி அமைய பல ஏக்கர் நிலம் தேவை; அது நிச்சயம் புற நகர்களில் தான் வாங்க முடியும். ஒரு சின்னஞ்சிறு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் ஐம்பது கிலோ மீட்டர்கள் பயணிப்பது எந்த விதத்தில் நியாயமோ தெரியவில்லை. இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட சாஃப்டுவேர் ஊழியனே இந்தப் பயணத்தில் களைத்துபோகும்போது பாவம் இந்தக் குழந்தை எப்படி தாங்கும் என்பதை எந்த பெற்றோராவது யோசிக்கிறார்களா?

ஆறரை மணி பஸ்ஸை பிடிக்க ஒவ்வொரு குழந்தையும் காலை நாலரை மணிக்கு எழுந்து டாய்லெட் போயி, குளித்து ஏதோ ஒன்றை வயிற்றில் அந்த விடியற்காலையில் அடைத்து, யூனிபார்ம், ஷூ, சாக்ஸ் என்று அடித்து பிடித்து பஸ்ஸை பிடிக்கிறது. ஒவ்வொரு குழந்தையாக ஏற்றி அந்த பஸ் எட்டரை மணிக்கு பள்ளி சேர்கிறது. ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் பணி மூன்றரை நாலு மணிக்கு முடிகிறது. அதன்பின் மீண்டும் ஒரு மணிநேர பேருந்து  பயணம். ஆறு மணிக்கு அந்த குழந்தை மீண்டு ஹோம்-ஒர்க், ப்ராஜெக்ட் ஒர்க், அசைன்மென்ட் ஒர்க் என்று எல்லா வேலைகளையும் முடிக்கும்போதே மணி நிச்சயம் பத்தை நெருங்கும். தூக்கம் சொக்கும். எப்போது படிக்கும்? இதில் சனிக்கிழமை வேறு பாதி நாள் பள்ளிக்கூடம் சிலர் முழு நாள் வேறு!

ஸ்ட்ரெஸ், ஹைபர்டென்ஷன், ப்ரெஷர் எல்லாம் ஏதோ ஐ.டி. ஃபீல்ட் சமாச்சாரம் என்று நினைத்திருப்பவர்களே. அதெல்லாம் இப்போ​தே எத்தனை மடங்கு அனுபவிக்கிறார்கள் இந்த குழந்தைகள் என்று தெரியுமா?

எவ்வளவுக்கு எவ்வளவு இத்தனை அதிக சுமை/துக்கம்/டார்ச்சர் எல்லாம் இருக்கிற​தோ அந்த அளவு சிறப்பான பள்ளி/உயர்ந்த பள்ளி என பெற்றோர்கள் நினைப்பது தான் இந்த குழந்தைகளை மேலும் வதைக்க உதவுகிறது.

நாமக்கல் புகழ் ப்ராய்லர் கோழி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் வளர்கின்ற மாணவர்கள் வெறும் மதிப்பெண் சார்ந்த கல்வியை பெற்று மனப்பாடம் செய்து வாங்கும் மார்க் மூலம் கவுன்ஸ்லிங்கிலோ அல்லது தந்தை தரும் காசிலோ பொறியியல் (பி.ஈ) சேர்ந்த பின் தான்,  தான் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதையே உணர்கிறான். ஆனால் அப்போதும் இதை அவன் தந்தை உணர்வதில்லை. மீண்டும் அதே பாணி படிப்பில் (வேறு வழி…பாதி புரியாதபோது!…) எப்படியோ டிகிரி முடித்து கரூர் வைசியா பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் என வங்கி குமாஸ்தாவாகிறான்.

கணக்குப் பிள்ளையாகவா தன் இளமையை தொலைத்து கனவை விற்று இத்தனை சித்ரவதை, வசை எல்லாம் அனுபவிக்கணும்?

ஒரு காலத்தில் “ப்ரஃபஷனல்” கோர்ஸில் சேர்வது பெருமை. ஏனென்றால் அவர்கள் வேலைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனியாக ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கும் விதம் சம்பாதிக்கலாம். டாக்டர், வக்கீல், ஆடிட்டர் மற்றும் எஞ்சினியர்.

இப்போது எஞ்சினியர் பெரும்பாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போவதால் பி.ஈ படிப்பு “ப்ரஃபஷனல் கோர்ஸ்” என்னும் தகுதியை இழந்துவிட்டது.

சயின்டிஸ்ட் சிதம்பரம், சிவதாணுப்பிள்ளை, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லாம் கிராம பள்ளிகளில் தரையில் அமர்ந்து படித்த சாதாரணக் கல்வியில் அதுவும் தமிழ் மீடியத்தில் படித்து அணுவிஞ்ஞானி ஆனார்கள். ஆனால் இன்றைய இந்த போந்தாகோழி படிப்பில் எத்தனை சயின்டிஸ்ட் உருவாகி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள்,  துள்ளித் திரியும் பள்ளி பருவங்கள் எல்லாம் ஏட்டில் படிக்கும் வரிகள் ஆகிவிட்டன. சிறு வயதில் நானெல்லாம் காலை 9.30 மணி பிரேயருக்கு தான் செல்வேன். நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன். ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்.நன்றாகத்தான் படித்தோம். நன்றாகத்தான் வாழ்கிறோம்.

வாழ்க்கை என்றால் அது விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள், சந்தோஷம் என்றால் விலை உயர்ந்த கைப்பேசி, செக்யூரிட்டி என்றால் கடனோ உடனோ வாங்கி கட்டும் அபார்ட்மென்ட் வீடு என்று எப்போது ஆக்கிக்கொண்டோமோ அப்போதே நம் குழந்தையின் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அடமானம் வைத்துவிட்டோம்!

வாழும் கலாச்சாரம் என்பது ஈ.எம்.ஐ. கலாச்சாரம் ஆகி விட்டது. நம் குழந்தைகளுக்கு மெத்தையை வாங்கிக் கொடுத்துவிட்டோம்! அவை தமது தூக்கத்தை தொலைத்து விட்டன!

படத்திற்கு நன்றி: http://hairstyle-pictures.feedio.net/32-school-bus-clip-art-school-bus-clip-art-2-best-clip-art-blog/ofsd.k12.mo.us*esites*agoessling*Clip%20Art*school%20bus.png/

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பாப்பா படும் பாடு!

 1. விளக்கைத் தூண்டுவது சுடர் சீராக நின்று ஒளிரவே!
  அது விளக்கையே எரித்து விட்டால் பிறகு வெளிச்சத்திற்கு எங்கேப் போவது…

  அளவோடு கூடிய தூண்டுதல் அதற்கு முன்பு தமது குழந்தையின் கொள்ளளவையும் கணக்கிட்டுக் கொண்டால் தான் நல்லதும்.

  அறிவு சூரியனைப் போல; அதனை எதைக் கொண்டும் மறைக்க முடியாது… இருந்தும் வாய்ப்பு என்று ஓன்று இருக்கிறது அது அமையாமல் எத்தனை கலாம்களும், ம.சா.அண்ணாத்துரை களும் இருகிறார்கள் என்பதும் சிந்திக்க வேண்டியதே…

  அருமையானப் பதிவு!
  நல்லச் சிந்தனையைத் தூண்டும் உண்மைகளைக் கொண்டப் பகிர்வு.
  நன்றி!

 2. //நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன். ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்.//
  இந்த அருமையான அனுபவத்தை குழந்தைகள் இழந்து பல்லாண்டுகள் ஆகின்றன , இதில் கிடைக்கும் உடற்பயிற்சி , தோழமை , எல்லாம் இக்கால சிறுவர் சிறுமிகளுக்கு மறுக்கப்பட்ட விஷயம் .விளையாட்டு என்றாலும் அது தன மகனை ஒரு டெண்டுல்கர் ஆகவோ , மகளை ஒரு சானியா மிர்சா ஆகவோ கற்பனை செய்து பெற்றோர் அனுப்பும் பயிற்சி வகுப்பில் தான் . கோடை விடுமுறை வந்தால் இஷ்டம் போல இருக்க விடாமல் நகரங்களில் இருக்கும் க்கு செல்லவேண்டும் . எனது குழந்தை பருவம் இந்த நாட்களில் இல்லாமல் இருந்ததை எண்ணி நிம்மதி அடைகிறேன்

 3. குழந்தைகளை குழந்தைகளாகவே நாம் நினைப்பதில்லை. கல்லூரி படிப்புக்கு பட்டணம் தேடிய நாம், நம் பிள்ளைகளின் பள்ளிப்படிப்புக்கே பட்டணம் தேடுகிறோம். பெரிய பள்ளி பெரிய செலவு, டியுஷனுக்கு காலையில் ஒரு டீச்சர், மாலையில் ஒரு டீச்சர், இவ்வளவு செய்தும் பள்ளி நிர்வாகத்திடமோ, டியுஷன் டீச்சரிடமோ பிள்ளைகளின் மதிப்பென் பற்றி கேட்டால் கூலாக “பாசாகிவிடுவார் ஆனால் மார்க் தான் கொஞ்சம் குறையும்” என்பார்.

  அன்று பாப்பா பாடியது பாட்டு, இன்று பாப்பா படுவது பாடு!

 4. இளம் பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

  உறவினர்கள் முன் தம் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்துவதற்காக, குழந்தைகளை அவர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே, கொடுமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *