இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (75)

0

சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

அன்பினிய உங்களோடு அடுத்தொரு மடலில் இ​ணைவதில் மகிழ்கிறேன்.

பசி, பஞ்சம், பட்டினி என்பன எமது பின்புல நாடுகளிலே அன்றாடம் ஒலிக்கும் அவலக்குரல்கள்.

வறுமையின் நிமித்தம் அன்றாடம் உண்ண வழியின்றி உயிர் துறப்போர் எமது தாய்நாடுகளில் ஏராளம்.

ஆனால் இன்று நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மேலைநாடுகளில் இப்பசி, பஞ்சம், பட்டினி எனும் வார்த்தைகளைக் கேட்பது மிகவும் அருமை.

வாழ வழியின்றித் தவிப்போரை வாழ வைக்க அரசாங்கம் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிப்பணத்தை வழங்கி வருவது ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது.

ஆனால் இத்தகைய ஒரு சமூகத்திலே அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்க அரசாங்கம் இருக்கிறது எனும் காரணம் அவர்களின் தாய் தந்தையரின் கடமைகளிலிருந்து அவர்களுக்கு விதி விலக்களிக்கிறதா?

எம்முடைய தாய் மண்ணிலே ஒரு குழந்தை இம்மண்ணில் விழுந்த நாள் முதல் அக்குழந்தை மண்ணோடு மண்ணாகிப் போகும் காலம் வரை அக்குழந்​தையின் பாதுகாப்பு ஒன்றே அக்குழந்தையின் பெற்​றோரின் கடமைகளில் முன்நிற்கிறது..

ஆனால் அதற்காக மேலைநாடுகளில் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளைப் பராமரிக்கும் தமது கடமைகளில் இருந்து வழுவி நிற்கிறார்கள் என்று பொருளல்ல. தமது குழந்தைகளுக்காக தமது உயிரைக்கூட தியாகம் செய்யக்கூடிய உணர்வு படைத்த பெற்றோர்களே பெரும்பான்மையாக காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் சமூகத்தில் சமயங்களில் நடைபெறும் மனிதாபிமானமற்ற நிகழ்வுகளினால் எம் சமுதாய மக்களின் நடவடிக்கைகள் மனிதர்களின் குணாபாவங்களைப் பற்றிய அச்சத்தை உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகிறது என்பதும் உண்மையே.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு வழக்கொன்றின் சாரம் எம்மை இத்தகைய மனக்குழப்பத்தினுள் ஆழ்த்தி விட்டது.

இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள கவென்ரி (Coventry) எனும் இடத்தில் வசிக்கும் மக்டெலினா லூசாக் ( Magdelena Luczak ) என்பவருக்கும் எரிக் பெல்க்கா (Eryk Pelka) என்பவருக்கும் பிறந்த குழந்தை டானியெல் எனும் மூன்று வயதுக் குழந்தையாகும்.

_69049801_pelka

இவரது தந்தையான எரிக் பெல்க்கா இவர்களை விட்டுப் பிரிந்து தனது நாடான போலந்துக்குப் போய் விட்டார்.

தாயாரான மக்டெலினா லூசாக் என்பவர் மரியூஸ் கிரிஸ்லொக் (Mariusz Krezolek ) என்பவரோடு வாழ்ந்து வந்தார்.

இவ்வருடம் மார்ச் மாதம் மூன்றாம் ​தேதி இக்குழந்தை வைத்தியசாலையில் மரணமடைந்தது.

மரண விசாரணையின் போது இக்குழந்தையின் உடலில் பல காயங்கள் காணப்பட்டது. அத்துடன் இக்குழந்தை சரியான முறையில் உணவு ஊட்டப்படாமலும் பராமரிக்கப்படாமலும் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

பெற்றோரினால் பலவகையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இக்குழந்தையின் தாயோடு வசித்திருந்த அம்மனிதன் மிகவும் வன்மு​றைகளுக்குட்படுத்தக்கூடிய மனோநிலை படைத்திருந்தான் என்பதும் தெரிய வந்தது.

_69871485_dpelkaபல தடவைகள் அயலவர்களின் முறையீட்டைத் தொடர்ந்து ​போலீசாரும், குழந்தை நலன்களைக் கவனிக்கும் அரசாங்க இலாகாவைச் சேர்ந்தவர்களும் விசாரணைகள் மேற்கொண்டதும் தெரிய வந்தது.

இதைத்தவிர இக்குழந்தை சென்று வந்த குழந்தைகளுக்கான பாடசாலை அதிபர் பல தடவைகள் இக்குழந்தை வளர்ச்சி குறைந்த நிலையில் காணப்படுவதை அவதானித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இத்தகைய பொருளாதார வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் இத்தனை அறிகுறிகள் தென்பட்ட போதும் இக்குழந்தையை அரசாங்கத் திணைக்களங்களினால் ஏன் காப்பாற்ற முடியாமல் போனது எனும் ​கேள்வி ஒரு பக்கம் மிகவும் பலமாக எழுந்துள்ளது.

அதே சமயம் அரசாங்கத் திணைக்களங்கள் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்தெடுப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்கள் எனும் பரவலான கருத்து விளங்கிய காரணத்தினால் இத்திணைக்களங்கள் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டின எனும் விளக்கம் மறுபுறத்திலிருந்து வருகிறது.

பசி, பஞ்சம், பட்டினி என்பனவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பது மட்டும் ஒரு அரசாங்கத்தின் கடமையல்ல. அக்குழந்தைகளை முறையற்ற வகையில் நடத்தும் உறவினர்கள் அவர்கள் பெற்றோர்களாயிருந்தாலும் அவர்களிடமிருந்து காப்பதும் அவர்களது கடமை என்பதை மறக்காமல் செயற்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *