தொலைத்ததும்…….கிடைத்ததும்..! – 5

ஜெயஸ்ரீ ஷங்கர்

ஏய்…மலரு…..இப்படியா…. அந்தல சிந்தலையா விளுந்து கெடப்பே…..சரி சரி எந்திரி, மேனேஜர் உன்னைய அழைச்சிட்டு வரச் சொன்னாரு….எந்திரிச்சி வா….அடி கிடி பட்டிடிச்சா…?

இல்லண்ணே…..லேசா காலு மடங்கிடிச்சி….இரு எந்திரிக்கிறேன்.

கூடப் பிறந்த பிறப்புகளைப் பற்றி எதுவுமே அறியாத பாண்டிக்கு அண்ணே….என்று அவள் அழைத்ததும், மனசுக்குள் எதுவோ என்னவோ செய்தது அவனுக்கு. இருந்தாலும் மலரை முறைத்துத் திட்டினான்.

என்னா ….புதுசா அண்ணே….நொண்ணேன்னு உறவு கொண்டாடுற….ஒங்கூடப் பொறந்தவனா நானு….ஓய்யாரத்தப் பாரு…அதட்டினான்.

ஓட்டிக்கிட்டுப் பொறந்தாத் தான் அண்ணனா….ஆபத்துல வந்து உதவினாக் கூட அண்ணேன் தான். பின்ன எதுக்கு இப்ப  ஓடியாந்தியாம்.?  பாத்துப்போட்டு கண்டும் காணாத மாதிரி போயிருக்க வேண்டியது தான…இவளும் அவனை  விடவில்லை. பேச்சில் மடக்கி விட்டதாக நினைத்தாள் .

போயிருப்பேன்…ஆனா எனக்கு உன் மேல ஒரு இது..?

எது….?

அதான்…சொல்லத் தெரியல புள்ள.

உனக்குச் சொல்லத் தெரியல…நான் சொல்லிப்புட்டேன்….அண்ணேன்னு…! அவள் தனது முத்து மாலையை கைவிரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றிக் கொண்டே சொன்னாள் . ஷீலா கூட என்கிட்டே அப்படித் தான் சொல்லிச்சு….பாண்டி உனக்கு அண்ணன் முறையினிட்டு.. மலர் அவன் முகத்தை ஆராய்ந்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் .

சரி…ஒண்ணும் பேசாமே வா….அந்த ரூம்பு வந்திருச்சு.

ரோஸ் வுட்டில் வழ வழப்பாக பாலிஷ் போட்ட கதவின்  வெண்கலக் கைபிடியில் கை வைத்ததும் அது திறந்து கொண்டது. உள்ளே, யாரோ ஒருவன் கம்பீரமாக சாய்ந்து கொண்டு சுழல் நாற்காலியில் உட்காந்தபடி முன்னும் பின்னும் ஆடியபடி தலையையும் ஆட்டிக் கொண்டிருந்தார்.

மலருக்கு, அவன் ஏதோ ஒரு படத்தின் வில்லனாக நடிக்கிறவர் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டாள் .

அருகில் மேனஜர் தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி இவர்களைப் பார்த்து, மெதுவா..மெதுவா..என்று கண்களால் சமிக்சை செய்து கொண்டிருந்தான்.

அட மானேஜரே நடுங்குறாரு…..ஆச்சரியமானாள் மலர்.

லேசாக நொண்டி நொண்டி உள்ளே வந்தவள்….புரியாத ஒரு மொழியில் அந்த வில்லன் பேசியது கண்டு திகைத்து சிலை போல நின்றாள் .

ஏ சோக்கிரி கோ இதர் க்யா காம் ஹை …? கிதர் ஸெ ஆரே …? க்யா நாம் ? ஓ ஆத்மி கௌன் ஹை ..?

(இந்தப் பெண்ணுக்கு இங்கு என்ன வேலை? எங்கேர்ந்து வருகிறாள்? பெயர் என்ன? அவன் யார்?)

அது மலர்விழி….அமீர்பெட் ஆஞ்சநேயுலு சொல்லலியா..?என்று மேனேஜர் கேட்டதும்,

இந்த வில்லனோட பெயர் என்னவாயிருக்கும்..? மலர் யோசிக்கலானாள்.

சொல்லிச்சு…சொல்லிச்சு..பஹுத் அச்சா ஹை …பஹுத் சுந்தர் திக்ரா….! என்று கனைத்தது வில்லன்.

(ரொம்ப நல்லா இருக்கு….ரொம்ப அழகா இருக்கா பார்க்க…!)

மேனேஜருக்கு வாயெல்லாம் பல்லாக இளித்தார்.

அபி தூ ஜா…! என்ற வில்லன், தனது கைபேசியை எடுத்து புத்தகத்தைத் திறப்பது போலத் திறந்து கைகளால் மெதுவாகத் தட்டிக் கொண்டே, லேகே ஜாவ் , தோனோங் கோ…!
(இப்ப இந்த இரண்டு பேரையும் அழைத்துச் செல்..)

பாண்டி நினைத்துக் கொள்கிறான்…..ஹிந்தி நாயா…? தலையில டர்பன் கட்டிருவான்…! இவங்கிட்ட நம்ம டீலிங்கு செல்லாது. இதுங்க முதலைங்க..! பெரிய திமிங்கிலங்க கிட்ட அயிர  மீனுக்கு என்ன வேலை…? களண்டுக்கடா பாண்டி…! உள்ளுக்குள்ளிருந்து அபாயமணி ஓங்கி அடித்தது. அப்ப பாவம் மலரு..அவன் இதயம் எதற்கோ அவளுக்காகத் துடித்தது.

எலே பாண்டி…நாம வந்த எடம், அம்புட்டும் படம் புடிக்கும்….பேசுறதெல்லாம் கூட கேட்கும்.அம்புட்டையும் நமக்கு முன்னாடியே அவரு அதான் பாஸ்…பார்த்துருவாரு.  நீ இருவதாயிரம் வாங்கி இருக்கே….தைரியமா இரு…என்று கூடவே எச்சரித்தபடி…..

ஏய் மலரு இங்க என்ன நடக்குதுண்டு மூச்சு விடக் கூடாது யாருக்கும். ஏதாச்சும் போன் மூலமாச் சொன்னே…அம்புட்டு தான். ஊரு போய் சேர மாட்டே..! இங்கனக் குள்ளாரயே தீர்த்துக் கட்டீருவாங்க. இப்பமே சொல்லிப்புட்டேன்.

இவள் உறைந்து போனவள், மனத்துக்குள் “பேச்சியம்மா, முத்து மாரியம்மா, படை வீட்டு பகவதியம்மா, பாடைகட்டி மாரியம்மா….” அம்புட்டு பேரும் ஓடியாந்து என்னியக் காப்பாத்தி, இங்கிட்டு தவிக்கிற என்னிய மாதிரி புள்ளங்களையும் காப்பாத்திரும்மா தாயீ ….நான் வந்து மாவிளக்குப் போட்டுப் படைக்கிறேன் தாயீ ….உசுரோட நான் திரும்பிருவேனா…” தப்பு கிப்புப் பண்ணீட்டேனா ….இங்கிட்டெல்லாம் பணத்துக்கு ஆசைப் பட்டு வந்திருக்கப் படாதோ…அம்மா எம்புட்டு சொல்லிச்சு..பாவி மவ நான் பெரியவுக பேச்சைக் கேக்காமப் பொறப்பட்டு வந்தேனே…!  நல்லா மாட்டிக்கிட்டேன்…..! பயம்ன்னா இப்படித் தான் இருக்குமா..? வவுத்தை பிணைஞ்சு வலிக்குது…முதுகுத் தண்டுக்குள்ளார ஜிவ்வுன்னு ரத்தம் ஏறுது …..தொண்டை உள்ளுக்குள்ளார இழுக்குது…..தொண்டைத் தண்ணி வத்திப் போவுது….நெஞ்சுக்குள்ள கிடு கிடுங்குது….தொடை கூட நடுங்குது…இம்புட்டும் ஒண்ணாச் செஞ்சா பயமா..? அப்ப …..நான் இவனுங்களுக்கு பயப்படுறேனா…? நடுங்கினாள் மலர்விழி.

உள்ளுக்குள் எழுந்த பயத்​தை விரட்டி அடிக்கும் வழி ​தெரியாமல், இங்கன எங்கிட்டு கா​மெரா​வெச்சுருப்பானுங்க… என்று ​நோட்டம் பார்த்துக் ​கொண்​டே பூ​னை ​போல நடந்தான் பாண்டி. நான் ஏதாச்சும் ​பேசப் ​போக அதும் பாட்டுக்கு ஓரமா இருந்துகிட்டு ​போட்டுக் ​கொடுத்துடுச்சின்னா, ​பெறவு இங்கிட்டிருந்து​வெளி​யேற முடியாதா​மே..! மனது எச்சரித்தது.

மலர்விழி மனத்தோடு தைரியம் சொல்லிக் கொண்டாள் .நான் டீச்சராக ஆகப் போறவ…எதுக்கும் .பயப்பட மாட்டேன்…!

 

அச்சமில்லை…அச்சமென்பதில்லையே,,,,

உச்சி மீது ஃபேன் விழுந்து

மண்டை உடைந்த போதிலும்

அச்சமில்லை..அச்சமில்லை….

அச்சமென்பதில்லையே..”

 

சின்ன வயதில் பாரதியார் பாடலைத் தலைகீழாகப் கேலி செய்து பாடிச் சிரித்ததை நினைவு படுத்தியபடி, இப்போதும் பயத்தை மீறி சிரித்துக் கொண்டாள். இவள் தனக்குள் சிரித்துக் கொண்ட போது பயம் விலகி நின்றது.

திடீரென ஒரு கதவு திறக்கப் பட்டு அழகான வாலிபன் இவர்களைப் பார்த்து “வெல்கம்’…என்றவன்….ப்ளீஸ். கமின்..என்றான்.

தயங்கிய பாண்டி உள்ளே நுழைந்ததும் , அவனைப் பின் தொடர்ந்தாள் மலர்விழி. விழுந்ததனால் ,கால் நரம்பு சுளுக்கி வீங்கிக் கொண்டு நடக்க விடுவேனா பார்…! என்று அவளைப் பிடித்து இழுத்தது.பாண்டிண்ணே, காலு ரொம்ப வலிக்கிது, என்று முனகினாள். அவன் கொஞ்சம் கூட அதைக் கண்டுகொள்ளவில்லை. அவன் பயம் அவனுக்கு.

இவர்கள் உள்ளே நுழைந்த அறை முழுவதுமாக குளிரூட்டப்பட்டு ஜில்லென்று இருந்த போதிலும் மலருக்கு முகமெல்லாம் முத்து முத்தாக வேர்தது. அவள் கண்கள் அதிசயத்தில் மிக மிக நேர்த்தியாக அடுக்கப் பட்டிருந்த பாட்டில்களை ஆவலோடு பார்க்கிறாள்.

அத்தனையும் இறால் ஊறுகாய் பாட்டில்கள், விற்பனைக்குத் தயாரான நிலையில் அடுக்கி வைக்கபட்டிருந்ததைக் கண்டதும் மனத்துள் நம்பிக்கை கை நீட்டியது.இந்த இடத்தில் பயமில்லை என்ற நம்பிக்கை உணர்வு அவளுக்குள் விழித்துக் கொண்டது. இப்போது அவளை ஆட்கொண்ட பயம் விலகிச் சென்றது.அப்பாடா….இறால் படங்களைப் ஏதோ தன் உயிர் தோழியைப் பார்த்தது போல மகிழ்ந்தாள் அவள்.

இவளைப் போன்ற பல பெண்கள் கைகளில் பிளாஸ்டிக் பைகளை நுழைத்துக் கொண்டு, தலையை பிளாஸ்டிக் தொப்பியை கவிழ்த்தி மூடியவாறு மும்முரமாக வேலைகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு கைகள் பரபரத்தது. இங்கன இதே வேலை கெடைச்சா எம்புட்டு நல்லாருக்கும். இப்படி ஜிலு ஜிலு ரூமுக்குள்ளார இருந்தா நான் “சீர்காழி கோயில கோயிலச் சுத்திப் பார்க்க வர வெள்ளக்காரியாட்டமா ஆயிடுவேன்……பெறவு அம்மாவுக்கு அடையாளமே தெரியாது…மனசு ரெக்கை கட்டிப் பறந்தது.

அப்ப …அந்த மேனேஜர் பாண்டிகிட்ட சொன்ன சமாச்சாரம்…?ஆழ் மனசு உசுப்பியது.

அதற்குத் தகுந்தாற்போல அடுத்தடுத்த அறைகளில் அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

சுவர் முழுதும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு சுவர் போல இவளை உள்ளிருந்து வரவேற்றது.அடுத்த நிமிடம் அந்த அறையின் கதவு வெளிப்புறத்திலிருந்து சார்த்தப் பட்டது. அந்தப் பெரிய அறையில் பல பெண்கள் சோபாவில் சாய்ந்து கொண்டு, சேரில் அமர்ந்தபடி நகத்துக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் முகத்தில் வெள்ளையாய் மாவைப் பூசிக் கொண்டு, கண்களுக்கு பதில் வெள்ளரிக்காய் வில்லைகள் உருட்டி முழித்துக் கொண்டிருந்தது.

சிரிப்புதான் வந்தது அவளுக்கு. இது ..வீடா.? ஆபீசா? சினிமா சூட்டிங் எடுக்குற எடமா? சொர்கமா…நரகமா..? ஒண்ணுமே வெளங்கலையே…இந்தப் பாண்டி எங்கிட்டுப் போனான்…கதவை இழுக்கிறாள்..அது மெளனமாக இவளை அடக்கியது. திரும்பிப் பார்த்து ஒரு பெண்ணிடம் , நான் வெளிய போகணும்…..!

…………..

நான் வெளிய போகணும்…….! இரண்டாவது முறையும் சொல்கிறாள்.

…………

ப்ளீஸ்….நான் பேசறது உங்க காதுல யாருக்குமே கேக்கலையா….? நான்….வெளியே….போகணும்…! தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சத்தமாகவே சொல்கிறாள். அந்த அமைதியில் இவளது குரல் எதிரொலித்தது.

அடுத்த சில நொடிகளில்…..”எங்களுக்கும் தான்….” ஒரு பெண்ணின் முனகல் இவளருகில் கேட்டது.

மலர்விழியின் மூளைக்குள் மின்னல் வேகத்தில் ஏதோ செயல்பட்டது.

 

(தொடரும்)

About ஜெயஸ்ரீ ஷங்கர்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க