மகாபாரத முத்துக்கள்! (பகுதி 7)
புவனேஷ்வர்
மகாபாரத முத்துக்கள் பகுதி 7 – பாண்டியனின் வீரம்
வணக்கம் அன்பர்களே,
சென்ற வாரம், கணினிப் பிரச்சினையால் அடியேன் மகாபாரத முத்துக்கள் பகுதியை தர இயலவில்லை. பின்னூட்டங்களுக்கும் பதில் இட்டு நன்றி தெரிவிக்கவும் இயலவில்லை. வாசகர்கள் மன்னிப்பார்களாக.
சரி.
ஞானியர் எங்ஙனம் மான-அவமானங்களை, இன்ப-துன்பங்களை சமமாகப் பாவிக்கிறார்களோ, அங்ஙனமே போரில் வெற்றியும் தோல்வியும் ஒன்றே என்ற மனநிலையில் சுத்த மனம் உடைய வீரர்கள் போருக்குள் போகிறார்கள். எதிரியால் கொல்லப்படுவது அவமானமல்ல. புறங்காட்டுவதே அவமானம். இது பாரத தர்மம். இதுவும் கர்ம யோகம். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
சென்ற பகுதியில், பாண்டியன், அஸ்வத்தாமனால் நிராயுதபாணியாக்கப்பட்டு இக்கட்டான நிலைமையில் இருந்ததைப் பார்த்தோம். இனி என்ன நிகழ்ந்தது எனப் பார்ப்போம்.
பாண்டியன் ஆயுதங்கள் எல்லாம் இழந்து நின்றானா, அப்போது, என்ன செய்யலாம் என்று பார்த்தான். பயந்து ஓடுவது அவன் இயல்பில் இல்லை. அப்போது பார்த்து பாண்டவர் பக்ஷத்தில் இருந்து ஒரு மதம் பிடித்த, கட்டுக்கடங்காத யானை ஒன்று தறிகெட்டு பாண்டியன் இருந்த பக்கமாக தலைதெறிக்க ஓடி வந்தது. பார்த்தான் பாண்டியன். அதன் மேல் போருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் உபகரணங்களும் இருந்தன. உடனே, வெண்ணை இருக்க நெய்க்கு அழுவானேன் என்று மகிழ்ந்த பாண்டியன், அந்த யானைதன் கழுத்தில் தாவி ஏறினான். யானை ஏற்றமும் யானைப் போர் முறைகளும் பழுதறக் கற்று அறிந்தவன் பாண்டியன். இதை அஸ்வத்தாமன் பார்த்து போருக்கு ஆயத்தமானான்.
மதம் பிடித்த அந்த போர் யானையின் மேல் ஏறிய பாண்டியன், அங்குசத்தால் அதனை விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தான். அதன் பின், முன் நடந்தது எதுவுமே தெரியாது போல மீண்டும் உக்கிரமான போரைத் துவக்க ஆயத்தமானான் பாண்டியன். தன்னைக் கையறு நிலைக்கு ஆளாக்கிய அஸ்வத்தாமனைப் பழி வாங்க எண்ணி அந்த யானையின் மேலிருந்த வேற்படையோன்றைத் தனது கையாற் பற்றி எடுத்தான் பாண்டியன். அஸ்வத்தாமனது தலையைக் குறி வைத்து அந்த வேலினை வீசி, “செத்தாய்” என்று கர்ஜித்தான். ஆனால் அந்த வேலானது கழுகு, கோழிக் குஞ்சைக் கவ்வுவது போல அஸ்வத்தாமன் தலையை கொய்யாமல், மலை முகட்டை, இடி தாக்குவது போல அவனது கிரீடத்தைத் தாக்கியது. முத்துக்களாலும் வைரங்களாலும் பொன்னிழைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கிரீடம், பாண்டியன் வேல் பட்ட மாத்திரத்தில் சுக்கு நூறானது.
இந்த அவமானத்தை அஸ்வத்தாமனால் பொறுத்துக் கொள்ள இயலவில்ல. காலால் மிதிக்கப்பெற்ற கருநாகம் போலச் சீறிச் சினந்து, அஸ்வத்தாமன், பொங்கிய ஆத்திரத்துடன், கண்டோர்க்கு அச்சத்தைத் தரும் யமதண்டங்களை ஒத்த பதினான்கு அம்புகளைக் கைப் பற்றி எடுத்தான். எடுத்தவுடன் ஐந்து அம்புகளால் யானையின் துதிக்கை மற்றும் கால்களைத் துண்டித்தான். அடுத்த மூன்று அம்புகளால் பாண்டியனின் இரு கரங்களையும் தலையையும் துண்டித்தான். மீதமுள்ள ஆறு அம்புகளால், பாண்டியனுக்குக் காப்பாக வந்த ஆறு வீரர்களையும் யமாலயம் அனுப்பினான்.
சந்தனமும் தைலமும்பூசி, வைரமணியாரமும் கொற்கை முத்துவடங்களும் அலங்கரித்த பாண்டியனின் திரட்சி மிக்க கைகள் துண்டிக்கப் பெற்று நிலத்தின் மீது விழுந்து துடித்த காட்சியானது கருடனால் வதம் செய்யப்பட்ட இரு ஐந்து தலை நாகங்கள் தரை மீது புரள்வது போல இருந்ததாம். ஒளிரும் குண்டலங்கள் தரித்து சிவந்த கண்களை உடைய பாண்டியனது தலை, இரு விண்மீன்களுக்கு இடையில் ஜொலிக்கும் நிலவைப் போலத் திகழ்ந்ததாம். பத்து துண்டங்கள் ஆன யானையும் பாண்டியனும், யஞ்யத்தில் வைக்கப்பெற்ற பத்து ஹவிர் பாகங்கள் போல காட்சி அளித்தனவாம்.
இங்ஙனம், பல்வேறு வீரர்களையும் குதிரைகளையும் யானைகளையும் கொன்று ராக்ஷசர்களுக்கும் பேய்களுக்கும் விருந்தளித்த பாண்டிய மன்னன், நீரால் அணைக்கப் பெற்ற மயான நெருப்புப் போல, அஸ்வத்தாமனால் அடக்கப்பெற்றான். பலிச்சக்கரவர்தியை திருமால் அடக்கியதும் அவரை இந்திரன் போற்றித் துதித்ததைப் போல, கௌரவப் படைகளை நாசமாக்கிக் கொண்டிருந்த பாண்டியனை அஸ்வத்தாமன் கொன்றதும் கௌரவர்கள் அவனைப் பூஜித்தனர்.
பி. கு:
பாண்டியனைப் பற்றி நான் எழுத விழைந்ததின் காரணம், நம் தமிழ் அரசன் அந்த நாளில் பாரத யுத்தத்தில் கலந்து கொண்டான், நம் தொல்தமிழர் பண்பாடு அன்றே வேரூன்றி இருந்தது என்று எடுத்துக் காட்டவே. அதோடு மட்டும் அல்ல, mainstream பாரத தர்மத்தோடு இயைந்தே நமது தமிழ் நாட்டவர்களும் இருந்தார்கள் என்பதை விளக்கும் முகமாகவும் இஃது அமைந்தது.
இனி வரும் பகுதிகள் யுத்தத்தை விவரிக்காமல் சற்றே மாறுபட்டவைகலாக இருக்கும். என்ன என்று பார்க்கிறீர்களா? நான் முன்னமேயே சொன்னது போல, பாரதத்தில் தரும உபதேசங்கள் வரும் பகுதிகளை இனி எழுதுவதாக உள்ளேன். போர்க்களக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் ஆனாலும், சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.
திருமதி. மேகலா அவர்கள் புறநானூற்றில் அரசியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் எழுதவும் எனக்கு இது தோன்றியது. ஏராளமான அரசியல் சிந்தனைகள் பாரதத்தில் உண்டு. அவற்றை இனிப் பார்ப்போம்! என்ன, பார்க்கலாமா? 🙂