இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்… (10)

செண்பக ஜெகதீசன்

c3b73c47-3616-4c6f-9b41-5895989713a6_S_secvpf

அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்

சிறுகை யளாவிய கூழ்.

-திருக்குறள்- 64 (புதல்வரைப் பெறுதல்)

 

புதுக் கவிதையில்…

 

அமுதமது

அமர லோகத்திலாம்,

அது தெரியாது நமக்கு..

 

நமக்குத் தெரிந்த அமுதம்,

அது

நம் பிள்ளைகளின்

பிஞ்சுக் கைகள் அளைந்து

மிஞ்சிய கூழ்தான்..

 

அதைவிட

இதுதான் இனிது…!

 

குறும்பாவில் (லிமரைக்கூ)…

 

பிள்ளைச்செல்வமே பெரிதென வாழ்,

வானவர் அமுதைவிட இனிதுநம்

வாண்டுகளின் கையாலளைந்த கூழ்…!

 

மரபுக் கவிதையில்…

 

அமரர் உணவது அமுதமென்பார்

அதனை யாரும் அறிந்ததில்லை,

இமைகள் மூடா வானோரும்

இதனால் என்றும் இளையோராம்,

எமனும் இவரை நெருங்கானம்,

இத்தனைச் சிறப்புடை அமிழ்தினிலும்

நமது பிள்ளைகள் கைகொண்டு

நன்றாய் அளைந்த கூழினிதே…!

 

லிமரிக்…

 

அமுதமே அமரர்தம் ஊண்,

அதனாலவர் உறுதியோ தூண்..

பிள்ளைகள் அளைந்தது,

சுவையினில் விளைந்தது

அமுதினும் இனியகூழ் காண்…!

 

கிராமியப் பாணியில்…

 

தேவாமுருதம் தேவாமுருதம்

தெய்வங்க தின்னொந் தேவாமுருதம்

தின்னாச் சாவுல்லா தேவாமுருதம்

கையில கெடைக்கா தேவாமுருதம்

கடவுளு நாட்டுத் தேவாமுருதம்..

 

கெடைக்காதத உட்டுத்தள்ளு

கெடைக்கிறகூள குடிச்சித்தின்னு

அதுலயொம்

புள்ளய தொட்டா தேவாமுருதம்

அதுவ

பெசஞ்சி அளஞ்சா தேவாமுருதம்..

தேவாமுருதம் தேவாமுருதம்

தேனா இனிக்கொந் தேவாமுருதம்…!

 

படத்திற்கு நன்றி: http://www.maalaimalar.com/2013/01/16092438/ragi-bajra-kool.html

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (4)

 1. Avatar

  குறளின் கருத்தை கிராமியப்பாணியில் தருவதில் உங்களை யாரும் விஞ்ச முடியாது என நினைக்கிறேன் ஐயா, வரிகளின் எளிமை மனதைக் கொள்ளை கொள்கிறது.

  அன்புடன்
  ….. தேமொழி

 2. Avatar

  எதிர்பார்க்க வைத்து வந்த குறளின் கதிர்கள், வழக்கம் போல் பிரகாசாம், அதிலும் கிராமிய பாணி கூடுதல் பிரகாசம், வாழ்த்துக்கள்.

 3. Avatar

  தேனாய் இனிக்கின்றது தங்களின் கதிர்கள். வாழ்த்துக்கள்.

 4. Avatar

  குறளின் கதிர்களுக்கு தொடர்ந்து வரவேற்று வாழ்த்து நல்கிடும்
  திருவாளர்கள் தேமொழி, தனுசு, சச்சிதானந்தம் ஆகியோருக்கு
  மிக்க நன்றி…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க