ஏலாதியில் பெண் சமூகம்
முனைவர் மு. பழனியப்பன்
நீதி நூல்கள் காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப் பெற்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் ஆளுமை மிக்கப் பணிகள் தரப்படாமல் தவிர்க்கப் பெற்றுள்ளன. பெண்களை ஒடுக்கி வைத்த இந்தச் சூழலை ஏலாதி பல நிலைகளில் எடுத்துரைத்துள்ளது. அவை பற்றிய செய்திகளை எடுத்துரைப்பதாக இவ்வியல் அமைகிறது.
பெண் சொல் கேட்டல் தவறு, பெண்ணுடன் வாழ்தல் தீமைகளையே தரும், பெண் வஞ்சகம் உடையவள் போன்ற பல கருத்துகள் ஏலாதியில் தரப்பெற்றுள்ளன. இவற்றைக் கற்கும் பெண்கள் இச்செய்திகளின் காரணமாக மனத்தாழ்விற்கு உள்ளாகும் வண்ணம் இச்செய்திகள் படைக்கப்பெற்றுள்ளன. இது அவசியமற்ற ஒன்று. இவை பற்றிய கருத்துக்கள் சான்றுகளுடன் அடுத்து அடுத்து எடுத்துரைக்கப்படுகின்றன. வெறும் செய்திகளாக மட்டுமே பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
பெண் சொல் கேட்டல் இழிவு
பெண்கள் சொல் கேட்டல் என்பதை ஆண் பண்பினுக்கு அழகாகாது என்று ஏலாதியின் பல பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தனக்காகவும், தன் கிளையாருக்காகவும் பொய் சொல்லாதவன், பொருள் மேல் பற்றில்லாதவன், பெண்களின் சொற்களைக் கேளாதவன், செருக்கு இல்லாமல் இருப்பவன் ஆகியோரிடம் நூல்களால் பெறும் பயன்கள், தன்மைகள் அனைத்தும் வந்தும் ஒன்றாய்ச் சேரும்
தனக்கென்று மோர்பாங்கற் பொய்யான் மெய்யாக்கும்
எனக்கென்று இன்றியமையான் யாதொன்றும் புனைக்கொன்றை
போலும் இழையார் சொல் தேரான் களியானேல்
சாலும் பிறநூலின் சார்பு (4)
என்ற இப்பாடலில் கொன்றைப் பூப் போன்ற தன்மை உடைய பெண்களின் சொல் கேட்கக் கூடாது என்ற கருத்து மிக வலிமையோடு எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
மின்னேரிடையார் சொல்தேறான் விழைவோரான்
கொன்னே வெகுளான் கொலைபுரியான் பொன்னே
உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் தன்னின்
வெறுப்பறுத்தான் விண்ணகத்து மில். (19)
என்ற இப்பாடலிலும் மின்னேர் இடையார் ஆகிய பெண்களின் சொற்களைத் தேர்ந்து கொள்ளாதவன் எவனோ அவனே விண்ணுலகம் செல்லக் கூடியவன் என்ற கருத்து எடுத்துரைக்கப்பெற்றுள்ளது
மாதரார் சொல் தேறான் மகரவாய் மாடத்தான் (42)
என்ற பாடலடியில் மாதர் சொல் கேளாதவன் மாளிகைக்குள் உள்ள செல்வந்தன் ஆவான் எனக் காட்டப் பெற்றுள்ளது.
மற்றொரு பாடலில் கரியார் சொல் தேறான் (46) என்று ஒரு தொடர் வருகின்றது. கரியார் என்பதற்கு வஞ்சர் என்று பொருள் கொள்ளலாம். வஞ்சகர் சொல்லைக் கேட்கக் கூடாது என்ற கருத்து இத்தொடருள் உள்ளது. சொல் தேறான் என்ற ஒரு செய்தியை மேல் காட்டிய செய்திகளுடன் ஒத்துப் பார்த்தால் பெண்களும் வஞ்சகரும் ஒன்று என்பது தெரியவரும். எனவே வஞ்சகத்தன்மை உடையவர்கள் பெண்கள் என ஏலாதி முடிக்கின்றது என்று தெளிய முடிகின்றது.
பெண்போகம் தவிர்க்க வேண்டும்
பெண் அனுபவித்தலுக்கு உரியஒரு போகப் பொருளாகவே அக்காலம் முதல் எண்ணப் பெற்று வந்துள்ளது. இருப்பினும் பெண் தரும் இன்பத்தையும் நீதி நூல்கள் இழிவு படுத்திக் காட்டியுள்ளன.
கண்போல்வார்க் காயாமை கற்றார் இனம் சேர்தல்
பண்போல் கிளவியார்ப் பற்றாமை பண்போலும்
சொல்லார்க் கருமறை சோராமை சிறிதெனினும்
இல்லார்க்கு இடர்தீர்த்தன்று. (14)
என்ற பாடலில் பெண் பற்றாமை நன்று என்ற கருத்து எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இதன்வழி பெண்வழிச் சேறல் என்பது குற்றமுடைத்து என்பது தெரியவருகிறது.
போகம் தவிர்த்தல் அரசனுக்கு உரிய தலையாய பண்பு என்று (18) மற்றொரு பாடல் எடுத்துரைக்கின்றது. இதன் காரணமாக பெண் இன்பம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
பெண் தானம் அளிக்கப்படலாம்
பெண் என்பவள் தனித்த விடுதலை உடையவள். அவளும் ஆண் போல தனித்து இயங்கக் கூடிய ஓர் உயிரினம் என்பது அக்காலத்தில் மறக்கப்பட்டுள்ளது. பெண்ணை உடைமைப் பொருளாகக் கருதியுள்ளனர். அதற்குப் பின்வரும் பாடல் சான்றாகும்.
யானை குதிரைபொன் கன்னியே ஆனிரையோடு
ஏனை ஒழிந்த இவையெல்லாம் ஆனெய்யால்
எண்ணானாய் மாதவர்க்கு கூண் ஈந்தான் வைசிர
வண்ணனாய் வாழ்வான் வகுத்து (49)
என்ற இப்பாடலில் அக்காலத்தில் தானம் அளிக்கப் பட்ட பொருள்களின் பட்டியலில் கன்னிப் பெண்ணும் ஒன்றாய் இருந்தமை தெரியவருகிறது. அந்தணர்க்கு யானை, குதிரை, பொன், பெண்,ஆநிரை இவற்றைத் தானமாக அளிப்பவர்கள் குபேர பதவி அடையலாம் என்ற கருத்து இப்பாடலின் கருத்தாகும். குபேர பதவி என்பது ஆணுக்குரிய பதவியாகும். இதை அடைவதற்கு மற்ற பொருள்களுடன் பெண்ணும் அளிக்கப் பெற்றுள்ளாள் என்ற செய்தியைக் கற்கும் போது சற்றுப் பின்னடைவு இந்தப் பாடலில் இருப்பது தெரியவருகிறது.
இவ்வகையில் பெண் தொடர்பற்ற வாழ்வினை முன்னிறுத்திப் பல வரையறைகளை ஏலாதி காட்டியுள்ளது. இவை தவிர சில தாழ்வு நிலை பெற்ற பெண்களையும் அவர்களின் இயல்பைபப் பற்றியும் இந்நூல் காட்டியுள்ளது. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு:
பொதுமகளிர்
பொதுமகளிர் என்போர் பரத்தையர் ஆவர். இவர்கள் ஆடலும், பாடலும் ஊடலும் கூடலும் ஆண்களுக்குப் பொருள் கருதி அளிக்கக் கூடியவர்கள். இவர்களின் தொடர்பு இழிவானாது என்பதை இந்நூல் எடுத்துரைத்து உள்ளது. பரத்தையிற் பிரிதலில் பரத்தைக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு தேடிச் செல்லும் ஆண்மகனுக்கும் உண்டு. ஆனால் அவனைத் தரந்தாழ்த்திப் பார்க்காமல் சமூகம் விட்டுவிடுகிறது. சூழலால் தள்ளப் பெற்று இந்நிலை எய்திய பெண்ணைச் சமூகம் சாடுகிறது.
பாடகம் சாராமை பாத்திலார் தாம்விழையும்
நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம்
சேர்ந்தார் பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தாற் போல் தீராவரும் (25 )
என்ற பாடலில் பொதுமகளிர் ஆடும் ஆடலைப் பார்க்காதே, அவர்கள் பால் சாராதே, நாடகத்தில் கலந்து கொள்ளாதே இவற்றைச் செய்தால் பகை, பழி, கடுஞ்சொல், சாவு ஆகியன வந்து சேரும் என்று இப்பாடல் எடுத்துரைக்கின்றது.
இவ்வகையில் பொதுமகளிரைச் சாடும் ஏலாதி அவர்களை நாடிச் செல்லும் ஆண்குலத்தை விட்டு விடுவது எவ்வகையில் நடு நிலைமை சார்ந்ததாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கணவனை இழந்த பெண்கள்
கணவனை இழந்த விதவைப் பெண்களும் பரிதாப வாழ்க்கைக்கு உரியவர்கள் ஆவர். இதுவே ஒரு பெண்ணை இழந்த ஆடவன் அது குறித்துக் கவலை கொள்ளாமல் அடுத்த பெண்ணை நாடிச் செல்ல வாய்ப்பளித்த இந்த சமுதாயம் பெண்ணுக்குக் கைம்ம நோன்பினை நோற்கக் கற்றுத் தந்தது.
தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி
…. ஈந்தார் வைத்து வழங்கி வாழ்வார் (77)
என்ற இப்பாடலில் விதவைக்கு உதவியவர்கள் இனிதாய் வாழுவர் என்று காட்டப் பெற்றுள்ளது.
அடுத்து தாயின் நிலை குறித்தும் இந்நூல் பல செய்திகளைத் தருகின்றது. அவை புதுமையானவையாக உள்ளன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.
தாய் பற்றிய செய்திகள்
பெண்களின் உயர்வான நிலை தாய் நிலையாகும். இந்நிலை பற்றியும் ஏலாதி பல செய்திகளை எடுத்துரைக்கின்றது.
தாய்மை நிலை பெண்களுக்கு உரியது என்றபோதிலும் அதன் மேன்மை கருதி ஆண்களும் அந்நிலை பெறலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லுவதாகப் பின்வரும்பாடல் அமைகின்றது.
நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே
பொறையுடைமை பொய்மை புலாற்கண் மறையுடைமை
வேயன்ன தோளா இவையுடையான் பல்லுயிர்க்கு
தாயன்ன என்னத்தகும் (6)
என்ற பாடலில் பெண்மைக்குரிய தாய்மைப் பண்பு, ஆணாலும் பெறமுடியும் என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது. மனத்தை நிறுத்தல், நற்குணம் பெற்றிருத்தல், தன்னை அடக்கல் போன்ற பண்புகளை உடையவன் தாய் போன்ற பெற்றி உடையவன் எனக் காட்டியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
ஆண் விண்ணகம் போகலாம், படிக்கலாம், மேன்மை பெறலாம். ஆனால் பெண் இவையாவும் தவிர்த்தல் வேண்டும் என்று காட்டும் ஏலாதி நூல் தாயாம் தன்மை பெண்மைக்கு உரிய பெருங்குணம் என்றால் அதனைப் பெறுதற்கு ஆணுக்குக் கருத்தளவில் உதவியுள்ளது என்று உணர வேண்டியுள்ளது.ஆண் விண்ணகம் போகலாம், படிக்கலாம், மேன்மை பெறலாம். ஆனால் பெண் இவையாவும் தவிர்த்தல் வேண்டும் என்று காட்டும் ஏலாதி நூல் தாயாம் தன்மை பெண்மைக்கு உரிய பெருங்குணம் என்றால் அதனைப் பெறுதற்கு ஆணுக்குக் கருத்தளவில் உதவியுள்ளது என்று உணர வேண்டியுள்ளது.
தாய்மை என்பதன் புனிதத்தை சற்றுக் கீழிறக்கும் கொடுமை உடைய பாடல் ஒன்றும் ஏலாதியில் உள்ளது.
ஔரதன் கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன் பௌநற்பவன் பேர் (29)
என்ற பல நிலைப் பட்ட தாய் உறவு கொண்ட பிறப்புகளை இனம் பிரித்துக் காணுகிறது ஏலாதி
ஔரதன் – தாய் தன் கணவன் வழி பிள்ளை பெற்றால் அவ்வாறு பெற்ற மகன் ஔரதன் ஆவான்.
கேத்திரசன் – தன்னேவலால் தன் மனைவிக்கும் பிறனுக்கும்
பிறந்தவன்.
காநீனன் – தாய்வீட்டில் மண வினைக்கு முன்பிறந்தவன்.
கூடன் – கணவன் இருக்கையில் அவனறியாமல் மற்றொருவனுக்குப் பிறந்த மகன்.
புநர்ப்பவன் – கணவன் இறக்க மற்றொருவனுடன் கூடிப் பெற்ற மகன்.
என்று பற்பல பெயர்களை ஏலாதி வழங்குகிறது.
இதன் மூலம் தாய் என்ற புனித உறவின் இழுக்கு நிலைகள் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன. இவ்வகையில் பிள்ளைகளைப் பெண்கள் அக்காலத்தில் பெற்றெடுத்துள்ளனர் என்ற பதிவை இங்கு ஏலாதி செய்கின்றது. இதன் வழிப் பெண்கள் மீதான மதிப்பு குறைக்கப் பட்டுள்ளது என்பது தெளிவு.
இவ்வாறு பல வகைப்பட்ட பெண் சமூகம் பற்றிய கருத்துக்களை ஏலாதி தாங்கியுள்ளது. இதன் வழி அக்காலத்தில்இருந்து பெண்களின் சமூக இழிநிலையை ஓரளவிற்கு உணர முடிகின்றது.
ஆழாமான பார்வை. ஆனால், ‘இதன் வழி அக்காலத்தில்இருந்து பெண்களின் சமூக இழிநிலையை ஓரளவிற்கு உணர முடிகின்றது.’ என்று சொல்ல இயலாது. இது ஒரு போக்கு: இலக்கியத்தில் இடம் பெற்றது. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை பெண்களும், காப்பியத்தலைவிகளும் அவ்வாறு இல்லையே. ஆங்கிலத்தில் chattel என்று மனைவியை குறிப்பது, உடைமை பொருள் என்க. ராஜம் கிருஷ்ணன் சொன்ன மாதிரி, ஆண்வர்க்கம், தற்கால இலக்கியத்தில் கூட பெண்ணினத்தை போகப்பொருளாகத்தான் பார்க்கிறது.