மனிதன் மாறி விட்டான்! மனிதம் மலர்ந்து விட்டது!

பவள சங்கரி

இன்று நம் வல்லமையில் ‘ஏலாதி பெண்கள் சமூகம்’, என்று ஒரு கட்டுரை வந்திருக்கிறது.பண்டைய காலங்களில் பெண்களை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறார்கள் என்று அறியும் போது அதிர்ச்சியும் ஆவேசமும் தான் மிஞ்சுகிறது.இது முற்றிலும் அறியாமையின் வெளிப்பாடாவே உணர்த்துகிறது.ஆணாதிக்க சமுதாயத்தின் அறியாமையின் அப்பட்டமான காட்சியாகவே இருக்கிறது. ஆதிகாலத்திலிருந்தே ஒரு சமுதாய வளர்ச்சிக்கு பெண்களின் பங்கீடூ எந்த அளவிற்கு அத்தியாவசியமாக இருந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் பெண்களை போகப் பொருளாகவும், கைப்பாவையாகவும் ஆக்கி வைத்திருந்தது அக்காலத்தின் ஆண்களின் சுயநலப் போக்கையேச் சுட்டிக் காட்டுகிறது.

இன்றைய சூழலில் இப்படி ஒரு கட்டுரையை வாசிக்கும் போதுதான், மங்கையரின் மகத்துவம் மேலும் மேலும் பொன்னென, வைரமென மின்னுகிறது.எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளை சமாளித்து இந்த பெண் சமுதாயம் இன்று இத்தகையதொரு நிலையை எட்டியுள்ளது என்பது தெளிவாகிறது.

’யாதொரு தெய்வம் கண்டீர், அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் ‘ என்பார் திருமூலர்.ஆனானப்பட்ட ஆண்டவரே தன்னில் சரி பாதியாய் இடம் கொடுத்தார் சக்திக்கு. சாதாரண மானிடப் பிறவி எம்மாத்திரம்!

’மங்கையரையாப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்றான், அவர்தம் பெருமையை உணர்ந்த உன்னத மனிதனாம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!

நம் உயிரோடு உறைந்துள்ள  ஆன்மீகத்திலேயே பெண்ணை சக்தியின் வடிவமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் பெண்கள் நுழையாத துறையே இல்லை எனலாம். எங்கெங்கு காணினும் சக்தியடா என்பதற்கு ஈடாக அவர்தம் பங்கு இன்று நாட்டின் பொருளாதாரம், அறிவியல் மற்றும் பாதுகாப்பு என்று பல்வேறு துறைகளிலும் மிகச் சிறந்து விளங்குவது கண்கூடு.

அன்பும், பண்பும், பரிவும், பாசமும், நேசமும், சேவை உணர்வும் இப்படி அனைத்தும் ஒரு பெண்ணிடம் இருக்கும் காரணத்தினாலேயே, தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு தன் கணவனின் குடும்பத்தையும் தன் குடும்பமாகக் கருதி தன்னலமற்ற சேவையை செய்ய முடிகிறது. இப்படி பணி புரியும் இடத்திலாகட்டும், குடும்பத்திலாகட்டும், ஒரு சேர தன் பங்களிப்பைச் செலுத்த ஒரு பெண்ணினால் மட்டுமே ஆகக்கூடிய ஒன்றாகும்!ஒரு மகனாக, ஒரு தந்தையாக, ஒரு சகோதரனாக, ஒரு கணவனாக, ஒரு நண்பனாக கட்டாயம் ஒரு ஆண் மகனுக்கு இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை என்ப்து திண்ணம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மனிதன் மாறி விட்டான்! மனிதம் மலர்ந்து விட்டது!

 1. யானை,குதிரை,பொன்,பசு ஆகியவற்றோடு கன்னியும்
  தானப் பொருளாக ஏலாதியில் சேர்க்கப் பட்டது மடமையே.
  மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் அஹ்ரினைகளுடன்
  கன்னியும் ஒரு ராசியாகச் சேர்க்கப்பட்டதை என்னவென்று
  சொல்ல! தருமனே சூதாட்டத்தில் திரௌபதியை பணயம்
  வைத்த கதை நமக்குத் தெரிந்ததுதானே!திருநெல்வேலி
  மாவட்டத்தில் நாற்று நடுவதற்க்குப் பெண்களையே
  அனுமதிப்பர். பயிர் செழித்து வளரும் என்ற நம்பிக்கை!
  ஆனால், பெண்ணுக்குத் திருமணம் என்றால் முடிவு எடுப்பது
  ஆணே!” மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல்
  வேண்டுமம்மா” என்று பாடியது பாரதியார் அல்ல! அது
  கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் வரிகள்.
  இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

 2. அந்த ஏலாதி கட்டுரைக்கு என் பின்னுட்டம் இவ்வாறு இருந்தது:

  ‘ஆழாமான பார்வை. ஆனால், ‘இதன் வழி அக்காலத்தில்இருந்து பெண்களின் சமூக இழிநிலையை ஓரளவிற்கு உணர முடிகின்றது.’ என்று சொல்ல இயலாது. இது ஒரு போக்கு: இலக்கியத்தில் இடம் பெற்றது. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை பெண்களும், காப்பியத்தலைவிகளும் அவ்வாறு இல்லையே. ஆங்கிலத்தில் chattel என்று மனைவியை குறிப்பது, உடைமை பொருள் என்க. ராஜம் கிருஷ்ணன் சொன்ன மாதிரி, ஆண்வர்க்கம், தற்கால இலக்கியத்தில் கூட பெண்ணினத்தை போகப்பொருளாகத்தான் பார்க்கிறது.’

  இந்த தலையங்கத்தை வரவேற்கும் என் பார்வை:

  ஆணும், பெண்ணும் சரி சமானம் என்றாலும், பெண்ணின் பெருமை நிச்சியமாக ஒரு படி மேல். அதே மாதிரி ஆணின் நடைமுறை ஆளுமையும் ஒரு படி மேல், எங்கெங்கும். கெளஹாத்தி அருகில் இருக்கும் காமாக்யா ஆலயம் எளிதில் புரியாத ஆன்மீகக் கோட்பாடு படை அன்னை-தெய்வ (மதர் காடெஸ்) வழிபாடு தளம். நாச்சியார் கோயிலில் தாயார், ஒரு படி முன்னால். ஏன்? தாயார், அம்மை என்றெல்லாம் பெண் தெய்வத்தை தொழுவது போல், ஆண் தெய்வத்துக்கு பெரும்பாலாக தந்தை உறவு கூறப்படுவதில்லை. சங்கத்தமிழிலும், காப்பியத்தமிழிலும், பெண் மாந்தர்கள் உயர்ந்தவர்கள் தாம். நீதி நூல்களில் பெண் இகழப்படுவதின் பின்னணி, ஆணின் மீது அவநம்பிக்கை. ஏலாதி ஒரு பிரதிபலிப்பு நூல் அன்று.
  ஆசிரியர் கூறிய மாதிரி, இன்றைய சமுதாயத்தில் பெண்ணின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது. ஒன்று மறக்கலாகாது. ஆண்வர்க்கம் பெண்வர்க்க்த்தை பாராட்டுவதில் உண்மையும் உண்டு, போலியும் உண்டு. இரண்டும் கலந்ததும் உண்டு. சுருங்கச்சொல்லின், பெண்ணின் முன்னேற்றம் அவளின் கையில் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published.