டி.விப்ரநாராயணன்

அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு

எங்கள் ஆசீர்வாதம். உன் கடிதம் கிடைத்தது. உன் கையெழுத்து நன்றாக இருக்கிறது. பாட்டி உன் எழுத்திற்கு முத்தம் கொடுத்தாள். நீ பரீட்சையில் 100 மார்க்குகள் எடுத்தது பற்றி எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீ ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறாய் என்று அப்பா நேற்று போனில் சொன்னார். தமிழை மறக்கக் கூடாது. நீ தமிழில் கடிதம் எழுதியிருக்கிறாய். ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. நன்றாகப் படி.

கடவுளைக் கும்பிட வில்லையென்றால் கடவுள் நம் கண்களைக் குத்தி விடுவார் என்று அம்மா பயமுறுத்துகிறாள் என்று உன் கடிதத்தில் எழுதியிருந்தாய். கடவுள் ரொம்ப கொடுமையானவரா? என்று கேட்டிருக்கிறாய்.

நீ பயப்படாதே.கடவுள் மிகவும் நல்லவர்; அன்பானவர்; கருணையுடையவர். தினமும் காலையிலும் மாலயிலும் சாமி படத்தின் முன் நின்று பாட்டு பாடு. அவர் சந்தோஷப் படுவார். இரவு தூங்கப் போகுமுன் கடவுளை வணங்கு. ஒருவேளை மறந்து விட்டால் கவலைப்படாதே.

நீ சென்ற கடிதத்தில் தென்னை மரத்தைப் பற்றி ஒரு பாரா எழுதியிருந்தாய். படித்தேன். பாட்டியும் படித்தாள், நன்றாகவும் பிழையில்லாமலும் இருந்தது. சிறு புத்தகங்களைப் படித்துப் பழகு. நான் ஒரு பாடல் உனக்காக எழுதியிருக்கிறேன். நீ அதைப் பாடிப் பழகலாம்.

 காகமொன்று நீர் குடிக்க

சுற்றி சுற்றி வந்தது.

தாகம் தீர தண்ணீரைத்

தேடித் தேடி அலைந்தது

வேகமாகப் பறந்தது

மெதுவாக நடந்தது

நாகமொன்றைப் பார்த்தது

நடுநடுங்கிப் போயிற்று

சோகமாய்ப் பறந்து சென்று

மரக்கிளையில் அமர்ந்தது

செம்பொன்று கீழே

இருந்ததைக் கண்டது

ஜம்மென்று பறந்துவந்து

செம்பிற்குள் எட்டிப் பார்த்தது

தண்ணீரைக் கண்டதும்

காகா என்று கத்தியது

சுற்றுமுற்றும் பார்த்தது

ஸ்ட்ரா ஒன்றைக் கண்டது

ஸ்ட்ராவை எடுத்து உறிஞ்சிற்று

தாகம் தீர்ந்தது, பறந்தது

இந்தப் பாட்டைப் பாடிப் பழகு. நீயும் இந்த மாதிரி குட்டிப் பாடலை எழுதலாம். உன் தோழிகளுக்குப் பாடிக் காட்டு. நான் உன்னைப் பார்க்க வரும் போது பல பாடல்களும் கதைகளும் கொண்டு வருகிறேன்..

பாடங்களைத் தவறாமல் படி. பயப்படாதே. உன் தம்பியுடன் நன்றாக விளையாடு.

இப்படிக்கு

உன் பிரியமுள்ள தாத்தா

Leave a Reply

Your email address will not be published.