தினேஷ்

அன்புள்ள மணிமொழிக்கு,

அண்ணன் எழுதிக்கொள்வது, அம்மா நலமாக இருக்கிறார்களா?

‘அண்ணன்‘ என்ற வார்த்தையை எழுதும் போது எனக்கு உடல் கூசவே செய்தது. அந்த வார்த்தையால் என்னை அழைத்தற்காக எத்தனை முறை உன் மீது அமிலத்தை வார்த்தைகளாக வீசியிருப்பேன். என் கடந்த கால செயல்களை நியாயப்படுத்துவதற்கா நான் இந்த கடிதத்தை எழுதவில்லை. அப்படி நியாயப்படுத்திக் கொள்ளக்ககூடிய எந்த செயல்களையும் நான் செய்துவிடவும் இல்லை. இருப்பினும் கடந்த காலம் பற்றிய என் எண்ணங்களை உன்னிடம் பகிர்வதன் மூலம் என் வலிகளுக்கு, இந்த வரிகள் வடிகாலாய் இருக்கும் என நம்புகிறேன்.

அப்பொழுது எனக்கு பனிரெண்டு வயது இருக்கும். நாங்கள் அம்மன் கோவில் தெருவில் குடி இருந்தோம். அப்பொழுதெல்லாம் அப்பா வியாபார விசயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவருவார். ஒவ்வொரு முறையும் எனக்கென்று ஏதாவது வாங்கி வருவார். வழக்கமான நடுத்தர குடும்பத்தை போல சிறு, சிறு சண்டைகளோடு சாதாரணமாக சென்று கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை. அப்பொழுதுதான் நீங்கள் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தீர்கள்.

ஒரு நாள் காலை அப்பா கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணை அழைத்து வந்தார். அம்மாவின் கதறல் ஊரையே எழுப்பியது. அம்மா மாரில் அடித்துக் கொண்டு அழுதாள். அவர்கள் மீது மண் வரி இறைத்து சாபம் விட்டாள். பாட்டி தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டிக்கொண்டிருந்தாள். எதுவும் புரியாத அந்த கைக்குழந்தை கதறி அழுதுக்கொண்டிருந்தது. தெருவே எங்கள் வீட்டின் முன் கூடியது. அப்பாவின் நண்பர்கள் சிலர் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர்.

கைக்குழந்தையாக இருந்த உன்னையும், உன் அம்மாவையும் கடம்பரயான் தெருவில் அப்பா வீடெடுத்து வைத்திருந்தார். தினமும் உங்களை திட்டியே பொழுது போனது என் அம்மாவிற்கும், பாட்டியிற்கும். உங்களை, அவர்கள் திட்டிய வார்த்தைகளை பட்டியலிட வேண்டுமெனில் கானகங்கள் அத்தனையையும் காகிதமாய் செய்தாலும் பத்தாது. இப்படி எங்கள் வாழ்க்கையை சீரழிக்க வந்தவர்களாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும் தான் நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டீர்கள்.

அப்பா உங்கள் வீட்டில் இருக்கும் சில சமயங்களில், அம்மா என்னையும், கவிதாவையும் அழைத்துக்கொண்டு உங்கள் வீட்டின் முன்னால் வந்து சத்தம் போட்டு நியாயம் கேட்பாள். என் மாமாக்கள் அவ்வப்போது வந்து உங்களை மிரட்டி விட்டு போவார்கள்.

நம் அப்பா வியாபார விசயமாக வெளியூர் சென்ற இடத்தில் உன் அம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டு, தான் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதை மறைத்து கல்யாணம் செய்துகொண்டார் என்பது எங்களுக்கு பின்னர் தெரிய வந்தாலும், உங்களை பற்றிய எங்கள் எண்ணங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உங்களை வெறுப்பதையும், காயப்படுத்துவதையும் நாங்கள் நிறுத்தவில்லை.

நாம் ஒரே பள்ளியில் படித்தும் பேசிக்கொண்டதில்லை. கவிதா உன்னுடன் பேசியதை அறிந்து அவளை அறைந்ததை நீ அறிந்திருப்பாய். அப்பாவை அழைத்துச்செல்ல சில சமயம் உன் வீட்டிற்கு வரும்போது, நீ தண்ணி கொண்டு வந்து கொடுத்து ‘வாங்கண்ணா’ என அழைப்பாய். நான் உன்னை உதாசீனப்படுத்தி, வார்த்தைகளால் உன்னை குரூரமாக குத்தி காயப்படுத்துவேன். நீ கண் கலங்கிபோவாய். இருப்பினும் ‘அண்ணா’ என்று அன்பாக அழைப்பதை நீ ஒருபோதும் நிறுத்தவில்லை..

தவறான நட்பு, எனக்கு தவறான பழக்கங்களை கற்றுக்கொடுத்தது. அப்பா தட்டி கேட்டால், அவரை குத்திக்காட்டி வாயடைக்கச்செய்வது எனக்கு எளிதாகிப்போனது. ‘படிப்பு தான் வரவில்லை, ஒழுங்காக வியாபாரத்தையாவது பார்’ என அப்பா கடை வைத்து தந்தார். பண புழக்கம், தீய பழக்கத்தை செழிப்பாக வளர்த்தது. அப்பா எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. வியாபாரம் படுத்தது, கடன் பெருகியது. ‘நீ கூத்தியா வச்சிகிட்டதால தான் என்னால படிக்க முடியாம போச்சு, இப்போ வியாபாரமும் விளங்காம போச்சு’ என அப்பாவின் மீது பழி போட்டு என் தவறுகளை மறைத்துக்கொண்டேன்.

கவிதாவின் கல்யாணம் எங்களின் பொருளாதார நிலையை தரை தட்டச்செய்தது. அப்பா உங்கள் வீட்டிற்கு வர தடை செய்யப்பட்டிருந்தார். உங்களுக்கு எதுவும் செய்யமுடியாத தன் கையாலாகாதத் தனத்தை நினைத்து வெட்கப்பட்டு, உங்களை சந்திப்பதையே தவிர்த்தார். உன் அம்மா வீட்டு வேலை செய்து உன்னை படிக்க வைக்கிறாள் என்றும், நீயும் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் வேலைக்கு போகிறாய் என்பதையும் அறிந்து அப்பா மிகவும் வேதனை அடைந்தார். எங்களின் திட்டும், பழியும் அவரை மேலும் பலவீனமாக்கியது. அவரின் ஒரு பாவத்தின் மீது எங்களின் எல்லா பாவங்களையும் அடுக்கி வைக்கவே, அதன் பாரம் தாங்காமல் இப்பூவுலகில் இருந்து அவர் தன்னை விடுவித்துக்கொண்டார்.  அப்பாவை கடைசியாக ஒரு முறை பார்க்க எங்கள் வீட்டின் முன் அழுது கதறிய உன்னையும், உன் அம்மாவையும் நாங்கள் கடைசிவரை அனுமதிக்கவில்லை. அவர் சாவிற்கு நீங்கள் தான் காரணம் என உங்கள் மீதே பழியை சுமத்தி உங்களை விரட்டினோம்.

அதற்குப்பிறகு உனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகவும், நீங்கள் ஊரை விட்டு சென்று விட்டதாகவும் கேள்விப்பட்டேன். நீ பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்துக் கொண்டிருப்பதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன் ஒழுக்கத்தையும், இரவு வேலையில் பணிபுரியும் பெண்களின் ஒழுக்கத்தையும் மட்டும் இல்லாமல், பொத்தாம்பொதுவாக வேலைக்கு செல்லும் எல்லா பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்வியாக்கி, கேலி செய்து எங்கள் ஆற்றாமையை ஆற்றிகொண்டோம்.

வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு யாரும் பெண் தர முன்வராததால், வயது வித்தியாசம் பார்க்காமல் என் மாமா பெண்ணையே எனக்கு மணமுடித்து வைத்தார்கள். வருமானத்திற்கு வழியில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது சாலையோர விவசாய நிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கி, நகரத்து மக்களுக்கு ‘முதலீடு’ என்ற பெயரில் ஏமாற்றி விற்கும் தொழில் நம் ஊரில் விமர்சையாக நடந்தது. இருந்த கொஞ்சம் நிலத்தையும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல் விற்றேன். கடன் போக கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. எப்படியாவது பஞ்சாயத்து தலைவர் ஆகிவிட்டால் இழந்த பணம், பேர், புகழ் அத்தனையும் திரும்ப பெற்றுவிடலாம் என நண்பர்கள் ஆசை காட்டவே, அரசியல் சூதில் பணத்தை இறைத்தேன், அத்தனையையும் இழந்தேன்.

கடன் கணக்கு என் ஞாபக சக்திக்கு மீறி சென்றுவிட்டது. தினமும் கடன் கொடுத்தவர்கள் வீட்டை முற்றுகையிட்டனர். எங்கள் மாப்பிளையும் என்னை போன்ற ‘ஆண்மகன்’, கவிதாவை அடிக்கடி வரதட்சணை வாங்கி வர தாய் வீட்டிற்கு விரட்டி விட்டான். கடைசி சொத்தான வீடும் மூழ்கும் நிலைக்கு போய்விட்டது. இந்த சூழ்நிலையில் ஒரு ஆண், வீட்டில் இருக்கும் பெண்களை பற்றி கவலைப்படாமல் நல்லதொரு முடிவெடுப்பான். ஒன்று ஊரைவிட்டு ஓடிப்போவது அல்லது தற்கொலை செய்துக்கொள்வது. எந்த முடிவை எடுக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்த சமயம் தான் ஒரு கடிதம் வந்தது, அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்தது. கூடவே இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையும் இருந்தது.

“அன்புள்ள அண்ணனுக்கு,

உங்கள் தங்கை மணிமொழி எழுதிக்கொள்வது. வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா?

தயவு செய்து நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ளவேண்டாம். உங்கள் நிலை எனக்கு நன்றாக தெரியும்.

நீங்கள் என்னை தங்கையாக ஏற்காவிட்டாலும், நான் உங்களை எப்போழுதும் என் அண்ணாகவே நினைத்திருக்கிறேன். அந்த  உரிமையில் தான் இத்துடன் காசோலையையும் அனுப்பியுள்ளேன்……..”

என்று தொடங்கும் அந்த கடிதத்தை இன்றுவரை என்னால் கண்ணீர் திரையை மீறி முழுமையாக படிக்க முடியவில்லை.

‘ஞானம்’ என்பது தவறவிட்ட வண்டிக்கு கிடைக்கும் பயணச்சீட்டு போல, எப்போழுதும் தாமதமாய் தான் வரும். பணம் இருந்த போது என்னுடன் இருந்த நட்பும், சுற்றமும். பணமில்லாதபோது என்னை ஒதுக்கிவிட்டார்கள். ஆனால் எப்போழுதும் உனக்கு கெடுதல் மட்டுமே செய்த என் மீது நீ எப்படி இவ்வளவு பாசம் வைத்தாய்..? பெண்களின் அளவு கடந்த பாசத்தின் அர்த்தத்தையும், ஆழத்தையும் அறிய முயற்சிப்பது முட்டாள் தனம் தான். எப்போழுதும் பெண்கள் சூழவே இருந்திருக்கிறேன், ஆனால் அவர்களை புரிந்து கொள்ள ஒருநாளும் முயற்சித்ததில்லை, எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் வரை.

இந்த சமுதாயம் விசித்திரமானது. அது ஆண்களையும், பெண்களையும் எப்போழுதும் வெவ்வேறு தராசிலேயே வைத்திருக்கிறது. ஆண்களின் தவறுகளை எளிதாக கடந்து விடுகிறார்கள். பெண்களின் தவறுகள் மட்டும் பெரும் ஒழுக்கக்கேடாகவே பார்க்கப்படுகிறது.

நம் அப்பா செய்த தவறுக்கு, உன் அம்மா வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவித்தார்கள். அவர்களின் உறவினர்களே ஒதுக்கிவைத்தனர், நாங்கள் கொடுமைப்படுத்தினோம். எந்த பாவமும் அறியாத நீ, எந்த உறவும் இல்லாமல், பாசமும் கிடைக்காமல், பழிக்கும், துன்பத்திற்கும் ஆளானாய். ஆண் துணை இல்லாத பெண்களாய் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருபீர்கள். ஆண்களின் பாவங்களுக்கு எப்பொழுதும் பெண்களே சிலுவை சுமக்கிறார்கள்.

எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், பெண்கள் முன்னேற்றம் அடைந்தாலும், பொருளாதார சுதந்திரம் பெற்றாலும். ஒழுக்கம், கௌரவம் என்ற பெயரில் அவர்கள் கொடிய வன்முறைக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பலாத்காரம், கௌரவக்கொலை, வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் என பல ரூபத்தில் அவர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது இந்த சமூகம். ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக எனக்கு பெரும் அச்சமாக இருக்கிறது. என்னை போன்றவர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் அவளின் எதிர்காலம் எப்படி இருக்கபோகிறதோ..? எத்தனை இன்னல்களையும், பழி, பாவங்களையும் அவள் சுமக்கப்போகிறாளோ…?

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அத்தனை தடைகளையும் தாண்டி அவள் பெரிதாக சாதிப்பாள் என்று. ஏனெனில் அவளுக்கும் அவள் அத்தையின் பெயர் தான். ஆம்… அவள் பெயர்  மணிமொழி…

(சில வருடங்களுக்கு பிறகு…)

அன்புள்ள மணிமொழிக்கு,

உன் அத்தை மணிமொழி எழுதிக்கொள்வது.. 🙂

வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா?

உன் பிறந்தநாள் பரிசாக மடிக்கணினி ஒன்றை அனுப்பியுள்ளேன்………

(மின்னஞ்சலிலும் தொடரும்… ‘அன்புள்ள மணிமொழிக்கு…’)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *