பத்மநாபபுரம் அரவிந்தன் –

 

பாணனொருவன் புலம்பியபடி
வந்து கொண்டிருந்தான்
வழக்கமாய் அவன் கையில் வைத்திருக்கும்
யாழை இழந்த புலம்பலது
தன் மூதாதையர்களின் விரல் வருடிய
இசையுருகிய, உயிர் கலந்த
யாழதென்று புலம்பினான்
” கண்ணயர்ந்த நேரத்தில்
என் கையில் இருந்து பறித்தனர்
எதிர்க்கும் திராணியற்ற என்னைக்
கூட்டமாய்த் தாக்கினர்
பறிப்பதற்கு வேறேதுமற்ற என்னிடம்
யாழைப் பறித்தனர்
இசைக்கத் தெரியாத அவர்களின் விரல்களில்
யாழ் அபசுரம் எழுப்பிய கோபத்தில்
யாழின் நரம்புகளை அறுத்தனர் பதிலாக
அவர்களென் உயிரைப் பறித்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பேன்
யாழற்ற இப்பாணன் இருந்துதான் இனியென்ன?
அறுந்து தொங்கிய யாழின் நரம்புகள்
உயிரிசையிழந்து வெறும் கம்பிகளாயின”,

புலம்பியழுதப் பாணனை சுற்றிலும் கூட்டம் கூடியது
‘மீட்டுக் கொடுங்களென் அறுபட்ட யாழை
நான் மீண்டும் இணைக்கிறேன் புதிய நரம்புகளை
மீண்டும் இசைக்கிறேன் புதிய பாடல்களை’
கெஞ்சும் குரலில் பாணன் கேட்க
கூடிய கூட்டம் தலை திருப்பி
தமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்பதாய்
வெறுமனே பாணனின் புலம்பலை ரசித்தது
இவர்களிடம் முறையிட்டும் கதறியும்
ஆவது ஏதுமில்லையென உணர்ந்த பாணன்
நடக்கத் துவங்கினான் மனதுள் யாழினை சுமந்தபடி
பழக்கப் படாத ஏதொவொரு திசையினை நோக்கி..

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *