Featuredஇசைக்கவியின் இதயம்இலக்கியம்கட்டுரைகள்

மதுரையில் நடந்தது (35 ஆண்டுகளுக்கு முன்பு)

இசைக்கவி ரமணன்

meenadsi-suntharar

( பல வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு சம்பவம். இதைப்பற்றி, என் கருத்துக்களோ, விமர்சனங்களோ எதுவும் இடவில்லை. நேரடிப்பதிவு போதும் என்பது என் நம்பிக்கை!)

மீனாட்சி அம்மன் கோவில். ஆடிவெள்ளிக் கிழமை. அதற்குமேல் வார்த்தைகள் அனாவசியம்!

நெரிசலில் சிக்கி, எட்டிப்பார்த்து, அத்தனைக் கூச்சல், வியர்வை, அவசரத்தின் நடுவிலும், அந்த இடையொசிந்த அழகியையும், அவள் காலடியில் கிடக்கும் மலரையும், அதில் என்னையும் கண்டு, ஒரு துளி விம்மி, விழிகளின் விளிம்புகள் சூடாகி, காக்கித் தொண்டர்களால் கெளரவமாக விரட்டப்பட்டு, குங்குமத்தை வியர்வை கரைக்க, பிராகாரக் காற்றின் அணைப்பில் வெளிவந்தோம் நானும் நண்பர்களும். ஆசுவாசத்தில்தான் ஆயாசம் தெரிகிறது!

பொற்றாமரைக் குளத்தின் கரையில் உட்கார்ந்து தேங்காய் மூடியை உடைத்தோம். எதிர்க்கரையில் ஒரு சின்ன கலாட்டா. அத்தனைக் கூட்டத்திலும் தெளிவாய் கவனத்தை ஈர்க்கின்ற அமளி. உடம்பு முழுக்க இறுகிய கோட்டுடன் ஒரு குட்டையான மொட்டை ஆசாமி. பக்கத்தில் ஒரு கிழவி; பல்லில்லை; பிரார்த்தனை மொட்டை. அருகில், சீக்கிரத்தில் இளைஞனாகிவிடப் போகிற ஒரு பயல்.

கிழவன், தலையிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக் கொள்கிறான். கிழவி ஓவென்று கத்திக்கத்தி ஒய்கிறாள். பயல் வியர்வையில் விறைத்திருந்தான். அவசரமாய்க் கரையைச் சுற்றிவந்தோம். அதற்குள், அந்த மூவரைச் சுற்றி முளைத்திருந்தது ஒரு சிறு கும்பல். அதையடுத்த விபூதிப் பிள்ளியாரின் மேல், வாரிவாரித் திருநீறைப் போட்டபடிச் சுற்றிவந்த மனிதர்களும், கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொண்டு, தடுமாறிச் சுற்றினார்கள்.

அந்த மூவரும் ஆந்திராவோ, வங்காளமோ, அசாமோ? இருக்கலாம். பொதுவான பழுப்பேறிய இந்தியக் கருப்பு. போதுமான விவரங்கள் சேகரிக்க முடியாதபடி பாஷை குறுக்கிட்டது. நாட்டில், பசிதான் தேசிய மொழி. அப்படி இப்படி அரைகுறை துபாஜிகளிடம் துருவினால், கொஞ்சம் விவரம் தெரிந்தது.

images (1)

மூட்டை முடிச்சுடன் வந்தவர்கள், பயலைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் குளத்தில் இறங்கியிருக்கிறார்கள். பயல், பராக்கு மட்டும் பார்த்துக்கொண்டிருந்த போது, மூட்டையிலிருந்த ஆயிரம் ரூபாயையும், ரெயில்வே பாசையும் எந்தக் களவாணியோ தட்டிக்கொண்டு போய் விட்டான். பிரித்த மூட்டையில், பிழிந்து, உலர்த்தாமல் காய்ந்த துணி விறகுகள்; ஊர் ஊராய்ச் சேர்த்த பிரசாத முடிச்சுக்கள்.

பொங்கிப் பொங்கி அழுதான் கிழவன். கிழவி, திருடனைப் பார்த்ததாக எண்ணிக்கொண்டு, அவன் வேட்டி, அடையாளங்களை அபிநயித்துக்காட்டி, ‘இதோ, இங்குதான் அவன் சாய்ந்திருந்தான்,’ என்று சுவற்றைக் காட்டினாள். அதன் மேலே, ‘தனம் தரும் கல்வி தரும்’ என்று பட்டர் பாடிப் பக்தர் பதித்திருந்தார்கள். ‘உடனே கோவில் அலுவலகத்தில் முறையிட்டுப் போலீசுக்குச் சொல்லவில்லையா?’ என்று கேட்டது ஒரு காவிப்பல். ‘போலீஸ்’ என்பது கிழவனுக்குப் புரிந்தது. கோட்டை விட்ட பயலை அடிக்க முயன்று தோற்று அவனைத் தள்ளிவிட்டு, ஒரு மூட்டை போலத் துவண்டு துவண்டு ஓடினான். கிழவியின் அபிநயம் ஓய்ந்தபாடில்லை. அவளைப் பார்த்தால் அவன் அவ்வளவு கிழவன் போலத் தெரியவில்லை. சம்பாதித்தே தீரவேண்டிய அத்தியாவசியத்தின் திடம், அவன் வயதின்மீது போர்வை போர்த்தியிருந்தது. பயல், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். பணம் பறிபோனதைக் காட்டிலும் அது எப்படிப் போனது என்பதை விளக்குவதிலேயே விடாப்பிடியாய் இருந்தாள் கிழவி. மாறி மாறி அதே காட்சிகள்.

போனவேகத்தில் திரும்பி வந்துவிட்டான் கிழவன். அதிகாரிகள் கைவிரித்துவிட்டார்கள். லயம் மாறாமல் அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள, ஸ்ருதி மாறாமல் கிழவி புலம்ப, எதுவும் செய்யாமல் சிலையாயிருந்தான் பயல். ஆயிற்று, கும்பலில் ஆளுக்காள் ஏதேதோ சொல்லத் துவங்கினர். யாரும், பாதிக்கப் பட்டவர்களோடு பேசவில்லை.

“பாவம் விதி!,” என்றார் ஒரு பெரியவர். அவரிடம் ஒரு தற்காலச் சாமியார்ப் பார்வை இருந்தது.

“இல்லை ஐயா, இது தெய்வத்தின் சதி!.” என்று குறுக்கிட்டது இன்னொரு குரல். ஓர் அற்பனைப் பார்ப்பதுபோல் திரும்பினார் பெரியவர். அங்கே கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு, மடித்த வேட்டியில், ஒருவர். உள்ளே, துவண்ட கருப்பு மேனி; கத்திக் கண்கள்.

“தம்பி! கொடுப்பதும் எடுப்பதும் தெய்வத்தின் வேலை!,” என்றார் பெரியவர்.

“ஆமாம்யா! கூரெயப் பிச்சிகிட்டுத் தெய்வம் கொடுத்ததெப் பாத்தவன் இல்லெ. கோவில்லியே புடுங்கிக்கற தெய்வத்தத்தான் பாக்கோம்,” என்றான் தம்பி.

இடையே ஒரு பாம்படப் பாட்டி, “ஐயோ! மீனாச்சி! ஒன்னயப் பாக்க வந்தவளுக்கு இந்தக்கதி வேணுமா?” என்று துக்கத்தைப் பங்கிட்டுப் புலம்பினாள். பறிகொடுத்த கிழவி, இவளை அதிசயத்துடன் பார்த்தாள். மொழி புரியாவிட்டாலும், எண்ணம் புரிந்து விட்டது.

“கர்ம வெனெயப் பத்திப் புரிஞ்சுக்கற அறிவு ஒனக்குக் கெடெயாது தம்பி!,” என்றார் பெரியவர்.

“என்ன சாமி கெடந்து இளுத்துகிட்டே போறீவ? ஓடா ஒழச்சி வாயக்கட்டி வயித்தக்கட்டி ஒருத்தன் சம்பாதிக்கான். அத ஒரு களவாணிப்பய லவட்டிக்கிட்டுப் போராண். இதென்ன கர்மமா வெனயா?” என்றான் ஆத்திரமாக.

“கர்மம்,” என்றார் பெரியவர் கம்பீரமாக. தம்பி, தலையில் அடித்துக் கொண்டான். சிலர் இதை ரசித்தனர்; சிலர் முணுமுணுத்தனர். ஆனால், இதில் அடுத்த கட்டம் என்னவென்று பார்ப்பதில் ஆர்வம் மேலிட்டு, நகராமல் நின்றனர்.

அங்கே கிழவன், “மாயீ! துர்க்கே!” என்று புலம்பியபடி விமானத்தைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடு போட்டான்; குமுறி அழுதான்; பயலைக் கட்டிகொண்டு தூணோரம் சரிந்தான்.

இங்கே, பெரியவருக்கு ரத்த அழுத்தம் அவ்வளவு சீராக இல்லை போலும், “ஒனக்கென்னடா தெரியும் தெய்வக் குத்தத்தப் பத்தி,” என்று சீறினார். பதிலுக்குத் தம்பி சொன்ன வார்த்தைகளை இணையத்தில் இடுவதற்கில்லை! கும்பல் மேலும் வம்புக்காகக் காத்திருந்தபோது, அந்தப் பாம்படப் பாட்டி, குரலைத் தூக்கினாள்:

“என்ன ஆளய்யா நீங்க? ஒடயவன் பறிகொடுத்து நிக்கான்! ஆளுக்காளு ஒங்களுக்குள்ள என்ன அக்கப்போரு? என்ன பஞ்சாயத்து? அஞ்சோ பத்தோ அம்புட்டுப் பேருமாச் சேந்து மனசாரக் கொடுத்தமின்னா அவிக ஊருபோயாச்சம் சேருவாங்க இல்ல? அத விட்டுப்போட்டு இங்கிட்டு என்ன கரச்சல் வேண்டிக் கெடக்கு? இந்தா நான் தாரேன் ரெண்டு ரூவா! ஏதோ அந்தப் பயபுள்ளக்கு மிச்சருக்காவது ஆகும். வெட்டிப் பேச்சுப் பேசாமெ வேட்டியப் பிரிச்சுக் கொடுப்பீயளா..?” என்று பாம்படப் பாட்டி வெற்றிலைச் சுருக்கைப் பிரித்து ரூபாய்த் தாளை எடுத்தாள்.

“ஈஸ்வரா,” என்று நகர்ந்தார் பெரியவர். பாட்டியை முறைத்தபடிப் பெரியவரை முந்தினான் தம்பி. தோசைக் கல்லில் விழுந்த வெண்ணைத் துளி போலக் கும்பல் பரவி மறைந்தது. பாட்டி எல்லோரையும் பார்வையால் எரித்தாள்.

சரிந்த கிழவன் திடீரென்று அலையலையாய் அழ, கிழவிக்கு மூச்சுமுட்ட, பயல்முகம் பயங்கரமாகக் கறுக்க, பாம்படப் பாட்டி தழுதழுக்க எல்லாம் ஏதோ கண்ணாடி அறைக்குள் நிகழும் சத்தமற்ற சலனங்களாகத் தொய்ந்துகொண்டே போக..

ஒரு சின்னக் குழந்தை கை நிறையத் திருநீற்றை வாரி அந்த விபூதிப் பிள்ளையார் மீது போட்டது.

திறந்திருந்த அவர் கண்கள் முழுதும் திருநீறு மறைத்திருந்தது..

ரமணன்

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க