மறக்க முடியாத மதுரை – 1
இசைக்கவி ரமணன்
மறக்க முடியாத மதுரை – 1
மதுரைப் பேருந்து நிலையம். அப்போது மாட்டுத் தாவணிக்கு மாறவில்லை. (ஓ! விளக்கவில்லையென்றால் விபரீதமாகிவிடும். மாட்டுத் தாவணி என்பது மேலூர்ச் சாலையில் உள்ள ஓர் இடம். மற்றபடி, விசித்திரங்கள் நிறைந்த மதுரையில் கூட மாடு, தாவணி எல்லாம் போட்டுக் கொள்ளாது. எங்கேயும் எதைப் போடுமோ அதைத்தான் இங்கேயும் போடும்!) சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால்தான் புரியும். நெரிசலின் தலைநகரம் மதுரை என்றால், அந்த பஸ் ஸ்டாண்டு அதை இயக்கும் இதயம். பாம்பு கூட நுழைய முடியாத அந்த நெருக்கடியில், பஸ்ஸெல்லாம் எப்படித்தான் வருமோ செல்லுமோ மீனாட்சிக்கே வெளிச்சம். அதை விளக்க நமக்கு மதுரை மொழியைத்தான் நாட வேண்டும், ‘ஒரே கரச்சல்!’ அதுதான் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட். வேறு விதமாக அதை விளக்கவே முடியாது.

கண்ணகி எரித்த கந்தக பூமியின் தாக்கமோ, வருடத்திற்குப் பதின்மூன்று மாதங்கள் துரத்தித் துரத்திக் கொளுத்தும் வெய்யிலின் தாக்குதலோ, பாண்டி நாட்டின் பழைய போர்களின் ஞாபக மிச்சமோ தெரியாது சாமி, மதுரையில் கோபத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் கோபப்படுவார்கள். கே.பி.சுந்தராம்பாள் எடுத்த எடுப்பிலேயே எட்டுக்கட்டையை எட்டுவதுபோல், முதலிலேயே உச்சத்திற்குப் போய், அப்புறம் தேவைப்பட்டால், கொஞ்சம் இறங்குவார்கள். அப்படி இறங்குவதற்காய் வருத்தப்பட்டு, கோபத்தைப் பெருமூச்சில் விசிறிப் பாதுகாத்து வைத்துக் கொள்வார்கள்.
ஒரு பேருந்தில் கொத்துக்கொத்தாய் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். புழுக்கத்தில், வியர்வை உறைந்து ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் நிற்கிறார்கள். துளிகூடச் சத்தமே இல்லை. திடீரென்று, ஒருவன் கூச்சலிட்டது கேட்கிறது. அவன் யாரையோ எதற்கோ தாக்கித் திட்டுகிறான். ஒன்றும் புரியவில்லை. ஒருவன், குடும்பத்தோடு இறங்கினான். மூச்சு விட்டுக் கொண்டார்கள். அவன், குடும்பத்தாரைக் கொஞ்சம் தொலைவில் நிற்குமாறு சொல்லி அவர்கள் கூடவும் வந்தான். அந்தக் கருப்பு முகத்தில் கோபத்தின் சிவப்பை நான் காணவில்லை. அமைதியாகத்தான் தெரிந்தான். அந்தக் குடும்பத்தில் யாரோ ஒரு நபர், ‘வேணாம்ப்பு! வந்த சோலியப் பாத்துகிட்டுப் போயிருவமே,’ என்றார். பதிலுக்கு அவன் முறைத்த முறைப்பில், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்தக் குடும்பத்தில் பல பெண்கள் இருந்தார்கள். யாரும் அவனைத் தடுக்கவில்லை! அவன், சுறுசுறுப்பாக வந்து, அந்தப் பேருந்தருகே நின்று, ‘எங்கடா அவன்?’ என்றான். அவன் கையில் உள்ளே நடந்த கலாட்டாவில் அடிபட்டிருந்ததால் எண்ணெய் பூசிக்கொண்டு வந்திருந்தான். யாரும் பதில் சொல்லவில்லை. இவன் உள்ளே ஏறினான். இவன் யாரைத் தேடினானோ அவனை கீழே இருந்து நான் பார்க்க முடிந்தது. முகமெல்லாம் பீதி; உள்ளே நுழைந்து அவன் வர வர, மற்றவர்களோடு கலந்து தப்பிவிடலாம் என்ற இவன் நம்பிக்கை கரையக் கரைய, ‘நான் ஒண்ணும் வேணுமின்னு..’ என்று சொல்லி முடிக்குமுன் அவன் அப்படியே இழுக்கப்பட்டு வண்டியை விட்டு வெளியே எறியப்பட்டு, அப்புறம், கொத்துப் பரோட்டாதான்.. கதறல்கள் சினத்தீக்கு நெய்போலும்! ஏதோ ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள், அது முடியும் வரை அடிக்கிறார்கள். அடிவாங்குபவன் காயத்துக்கும், இவர்கள் நிறுத்துவதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை! மஞ்சவேட்டி அணிந்து, ஜிப்பாவில், விரல்நுனியில் அருவாளைத் தாங்கி வீதிக்கு வந்துவிட்டால், ‘சோலிய முடிக்காம திரும்பக் கூடாது!’ ஆமா!
கோபம் போலவே கொண்டாட்டமும் உச்சம்தான் மதுரையில். ஏதோ சின்னப் பண்டிகை என்றால் ஊர்கொள்ளாத கூட்டம் வந்துவிடும். உலகத் தமிழ் மாநாட்டை (1981) வேறெங்கேனும் நடத்தியிருந்தால் அத்தனைக் கூட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். சித்திரைத் திருவிழா போன்ற ஒரு மக்கள் திருவிழாவைத் தமிழ்நாட்டில் வேறெங்கும் நான் கண்டதில்லை. கள்ளர்கள் தோல் பையிலிருந்து நீர் பாய்ச்சும்போது கூடக் கோபமாகத்தான் சிரிக்கிறார்கள்! எப்போதும் ஒரு வீச்சரிவா விளிம்பில்தான் இருக்கிறார்கள்! கூடவே ஒரு கத்தி போன்ற நியாய உணர்வும் இருக்கிறது. அதுவும் கூடக் கோபமாகவே வெளிப்படுகிறது.
தோழர் கண்ணன், நரசிம்மர், இரணியனை நாராய்க் கிழித்துவிட்டு, ‘தம்பி, ஏதோ நடந்தது நடந்திருச்சு; ஒண்ணும் மனசுல வச்சுக்க வேணாம்,’ என்று சொல்வதைப்போல, ‘அதான் மன்னிச்சக்குன்னு சொன்னேன்ல?’ என்று முகமெல்லாம் கண்கொப்பளிக்க, இடி முழுங்க மன்னிப்புக் கேட்பார்.
இன்னும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்தான் இருக்கிறோம்!
ஒரு சின்னக் கடை. அதிலே ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஏதோ துவாலையோ சோப்போ வாங்க வந்திருக்கிறார். கடைக்காரர் விலையைச் சொன்னதும் கூச்சல் போட ஆரம்பித்து விட்டார். வெளியூர்க்காரர்.
‘நான் கேட்டது ஒரு துண்டு எவ்வளவுன்னு? நீ என்ன மூணுக்கு வெல சொல்றியா?’
– அட, ஒண்ணுதாங்க நான் சொன்னது!
‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா! நான் கேட்ட வெலக்குக் குடு!’
– கட்டுப்படி ஆகாதுங்களே! நீங்க சொல்றது அஞ்சு வருசத்துக்கு முன்ன இருந்த வெல! இப்ப ஏறிப் போச்சுதுங்களே!
‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா’ என்று வாக்கியத்தை முடிப்பதற்குள், கடைக்காரர், கடையை விட்டு வெளியே வந்தார். ஆஹா! ஒரே நாளில் இரண்டு கொத்துப்பரோட்டா தரிசனமா என்று யோசிக்கலானார்கள் சுற்றி இருந்தோர். அவரோ, ஒரு ஸ்டூலைப் போட்டு, வாங்க வந்தவரை,
– வாங்க! இதில உக்காருங்க!’ என்றார்.
வாங்க வந்தவரோ குழப்பமாகி, ஆனால் உட்கார்ந்து கொண்டு,
‘இப்போ எதுக்கு என்ன ஒக்காரச் சொன்னெ?’ என்று கேட்டார்.
கடைக்காரர், கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டு,
– ஒண்ணுமில்லீங்க! எ..ல்..லா..ம்.. தெரிஞ்ச ஒருத்தர நாங்க இப்பத்தான் மொதமொத பாக்குறோம், அதான்!’ என்றார்.
மதுரைச் சொல்லுக்கு நிகராகுமா வீச்சரிவாள்?!


ஆஆங்! இது நல்லாருக்கே! கண்ணகியம்மா சோழநாட்டவங்க, மதுரெயில்ல!
உலகுக்கே மல்லிகை கொடுத்த எங்களிடம் கொவ்வைக் குசும்புகூடக் கிடையாது! நாங்க சிறுமை கண்டு சீறுவோம், அவ்வளவே! அந்தச் சிறுமை என்ன என்று வெளியாருக்குப் புலப்படாம இருக்கலாம்!
மதுரையை ஆளும் அன்னை மீனாளின் அருள்-போல அன்புகொண்டு உறவாடுவோம்!
இப்படிக்கு,
மதுரைக்காரி ராஜம் 😉
http://www.letsgrammar.org
http://mytamil-rasikai.blogspot.com
http://viruntu.blogspot.com