– சு.கோதண்டராமன்

வசு ருத்ரர் ஆதித்யர்

வசு ருத்ரர் ஆதித்யர் என்ற மூன்று தேவக் கூட்டத்தாரையும் சேர்த்துச் சொல்லும் ரிக் மந்திரங்கள் பல உண்டு. இவை தனித் தனிக் குழுக்கள் என்று அறியப்படுகிறது. இவற்றில் ஆதித்யர் என்ற குழுவில் வருபவர் யார் என்பது மட்டும் தெரிகிறது. வசுக்கள் யார் யார், ருத்ரர்கள் யார் யார் என்பதற்கான விளக்கம் ரிக் வேதத்தில் கிடைக்கவில்லை.

ellora shiva

வசு
வசு என்பதற்கு செல்வம் என்றும் வீடு என்றும் பொருள் உண்டு. ரிஷிகள் தேவர்களிடமிருந்து யாசிக்கும் பொருள்களில் வசுவும் ஒன்று. சாயணர் வசு என்ற அடைமொழிக்கு வீடுகள் கொடுப்பவர் என்று பொருள் தருகிறார். பொதுவாகப் பார்க்குமிடத்து, வசு என்ற சொல் செல்வம் என்ற பொருளிலும், செல்வம் தருபவர் என்ற பொருளிலும் வருவதைக் காண முடிகிறது. ரிக் வேதம் இந்திரனையும் அக்னியையும் மட்டும் வசு என்றும் வசுபதி என்றும் குறிப்பிடுகிறது. புராணங்களில் 8 வசுக்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

ருத்ரர்
புராணங்களில் 11 ருத்ரர்கள் கூறப்படுகிறார்கள். ரிக் வேதத்தில் ஒரு ருத்ரன் தான் கூறப்படுகிறார். அவரும் இந்திரன், அக்னி, மித்ரன், வருணன் அளவுக்குச் சிறப்பிடம் பெறவில்லை. ருத்ரன் மருத்துகளின் தந்தையாகக் கூறப்படுகிறார். சில இடங்களில் மருத்துகளே ருத்ரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில இடங்களில் அக்னி தன் சிவந்த நிறத்தின் காரணமாகவும் வலிமையின் காரணமாகவும் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறார். அச்வின்களும் ருத்ரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

யஜுர் வேதம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஆயிரக் கணக்கான ருத்ரர்களைப் பற்றிப் பேசுகிறது. யஜுர் வேதத்திற்குப் பிந்திய காலத்தில் ருத்ரன் சிவனாக உருமாற்றம் பெறுகிறார், முழு முதல் கடவுளாக வளர்ச்சி பெறுகிறார்.

சமீபத்தில் இறந்த மனிதர்கள் வசுவாகவும், முந்திய தலைமுறைப் பிதிரர்கள் ருத்ரராகவும், அதற்கும் முந்திய தலைமுறையினர் ஆதித்யராகவும் கருதப்படும் வழக்கம் தற்போது உள்ளது. ரிக் வேதத்தில் அத்தகைய குறிப்பு எதுவும் இல்லை.

ஆதித்யர்
சில தேவர்களுக்கு ஆதித்யர்கள் என்ற பெயர் உண்டு. அதிதியின் பிள்ளைகள் என்று பொருள். கச்யப முனிவருக்கு திதி, அதிதி என்ற இரண்டு மனைவியர் உண்டு. திதியின் மக்கள் தைத்யர் அல்லது ராட்சசர்கள். அதிதியின் மக்கள் ஆதித்யர்கள் என்ற தேவர்கள் என்பது புராணக் கதை. திதி, தைத்யர் என்ற சொற்களோ கச்யபர் பற்றிய குறிப்போ ரிக் வேதத்தில் இல்லை.

ஆதித்யர்கள் 12 பேர் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் ரிக் வேதத்தில் ஆதித்யர்கள் 5 பேர் தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மித்ரன், வருணன், அர்யமான், பகன், அம்சன் ஆவர். அவர்களின் தாயாக அதிதி என்னும் பெண் தெய்வம் சொல்லப்பட்டிருக்கிறது. அதிதி என்ற சொல் பிரபஞ்சத்தைக் குறிப்பதாக 1.89.10 இல் சாயணர் கூறுகிறார். இந்தப் பொருள் எல்லா இடங்களிலும் பொருந்தக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் சாயணர் பிற இடங்களில் இது பூமியைக் குறிப்பதாகவும் தேவர்களின் தாயைக் குறிப்பதாகவும் பலவாறு கூறுகிறார்.

அதிதி என்பது எல்லையற்ற தன்மை என்று பொருள்படும். இந்த உலகம் பெரியது. இங்கிருந்து நம் கண்ணில் தெரியும் விண்வெளியில் எத்தனையோ சூரியன்கள் நட்சத்திர வடிவில் உள்ளன. நம் கண்ணுக்குத் தென்படாமல் கருவிகளால் மட்டும் அறியப் பட்டவையோ கோடி கோடி. கண்டுபிடிக்கப் படாதவையோ மனதால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. எண்ணில் அடங்காது, எல்லையற்றது. இந்த எல்லையற்ற தன்மையில் தேவர்கள் தோன்றுவதற்கு எல்லையற்ற வழிகளும் உள்ளன, எத்தனையோ தேவர்கள் நமக்கு முன்னே தோன்றியுள்ளனர். இனியும் எத்தனையோ தேவர்கள் தோன்றுவார்கள் என்பதை அறிவுறுத்தவே அவர்களை எல்லையற்ற தன்மையின் மக்களாகக் கூறப்பட்டிருக்கிறது.

 

படம் உதவி: http://www.sacred-texts.com/hin/iml/img/02600.jpg

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.