இலக்கியம்கவிதைகள்

நிலவே சாட்சி!

-சீர்காழி உ செல்வராஜு

அமைதியான அலைகளற்ற                                                 
அந்திநேரப் பொழுதினிலே                                                     moon for kavithai
மெல்ல மெல்லத் தெரிகிறாயே
மென்மையான வெண்ணிலவே!

சூடான நிலைமாறிச்
சுகமான பால்நிலவே
உன்னழகு என்னருமை!
உனக்கு எங்கும் ரசிகர்களே…!

ஓய்வெடுக்க அணியணியாய்
ஓகோவெனத் திரண்டிடுவர்
களிப்புடனே ரசிகர்களோ
கடந்தகாலம் பகிர்ந்திடுவர்!

எட்டாத தூரத்தில்
கிட்டாத காதலியாய்
மட்டிலா அன்புடனே
மயக்கத்திலே மூழ்கடிப்பாய்!

உம்முடனே எம்முன்னோர்
உரைத்ததெல்லாம் சொல் நிலவே!
இறந்தகாலம் நிகழ்காலம்
எதிர்காலம் நீ அறிவாய்!

அத்தனையும் அங்கிருந்தே
அற்புதமாய் நோக்குகிறாய்
நிழல்படம் எடுத்திருப்பாய்
நிறைமதியே! நீ தானே சாட்சி…!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க