தாயும் சேயும்!
-ரா. பார்த்தசாரதி
தாயே விளைநிலமாம், தந்தையே வித்தாம்,
குலம் தழைக்கவந்த ஓர் சொத்தாம்!
பெண் முழுமை அடைவதும் தாய்மையாலே!
தாயாக மாறுவதும் அந்தத் தாய்மையாலே!
கருவறையில் உன்னை வைத்துப் பாதுகாத்தேன்!
எனக்கென்று உண்ணாது உனக்காக உண்டேன்!
பிறந்த மேனியுடன் வெளியுலகில் வந்தாய்!
தாய் தந்தையர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!
உனக்காகக் கண்விழித்துத் தூக்கத்தினை மறந்தேன்!
உனக்காகப் பாசத்தையே பாலாகப் பொழிந்தேன்!
எனது அணைப்பே உனக்கு அடைக்கலம்!
எனது மடியே உனக்குத் தொட்டில்!
உன் பசி, தூக்கத்தை அழுகையால் வெளிப்படுத்துகிறாய்!
உன் கள்ளமில்லாச் சிரிப்பால் கவலைகள் போக்குகின்றாய்!
தோளையே தூளியாக்கி உன்னைச் சுமக்கின்றேன்
உன்னை வயிற்றில் சுமந்ததைவிடப் பாரமா?
அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை இருப்பு!
உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு!
எங்கள் இல்வாழ்க்கையே உன் படைப்பு!
எங்கள் வாழ்கையில் நீ ஒரு துடுப்பு!
உன் வளமே எங்கள் சிறப்பு!
உன் நினைவே பாசத்தின் பிணைப்பு!
குழந்தையின் வளர்ப்பு, தந்தையின் கடமையே!
அன்னையின் வார்த்தைகள் அன்பின் இனிமையே!
அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை!
திசை நான்கும் அன்னையைப் போல் எவருமில்லை!