–விசாலம்.

 

பாண்டுரங்கனின் சேவை

கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தில் மிக அழகாக அமைந்த விட்டலனது கோயிலைப் பார்த்து பரவசமானேன் நான். எனக்கு மஹாராஷ்ட்ராவில் இருக்கும் பண்டரிபுரம் போக வாய்ப்பே வரவில்லை. ஆனால் கும்பகோணம் போகும் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு கட்டப்பட்டிருக்கும் கோவிந்தபுரத்தைப் பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. நம் கஷ்டத்தைப்பார்த்து உடனே ஓடோடி வந்து உதவும் பாண்டுரங்கனை மிகவும் எளிதாக நாமஸ்மரணையினால் நாம் அடைந்துவிடலாம். பண்டரிபுரம் போனால் ஆகாயம் முழுவதும் ‘விட்டல விட்டல’ என்ற நாமமே எதிரொலிக்கும். அதுவும் ஆஷாட ஏகாதசியன்று கேட்கவே வேண்டாம். நாம் அந்த நாமத்திலேயே மூழ்கிவிடுவோம். கோவிந்தபுரத்தில் இருக்கும் பண்டரிநாதனைப்பார்க்கும் போது பண்டரிபுரம் போனதாகவே இருக்கிறது என்று அங்கு வந்த ஒரு பக்தர் என்னிடம் சொன்னார்.

அந்த விட்டலனை நினைக்கும் போது எனக்கு ஜனாபாயி என்ற பக்தையின் ஞாபகம் வருகிறது. பண்டரிபுரத்தில் வசித்து வந்த அவளுக்கு உறவினர் என்று ஒருவருமில்லை, பெற்றோர்களுமில்லை. அவளுக்கு நாமதேவர் தன் வீட்டில் இடம் கொடுதிருந்தார். அவள் அங்கு வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து வந்தாள். சேவை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் விட்டலனைக்குறித்து பல ‘அபங்க்’ பாடி அவனையே மனதுக்குள் நிறுத்திக்கொள்வாள். அவள் உடல், மனம் எல்லா இடத்திலும் பாண்டுரங்கனே வியாபித்திருந்தான்.

ஒருநாள் சாதுக்களின் துணிகளைச் சந்த்ரபாகா நதிக்கரையில் தோய்க்க எடுத்துபோனாள். உடைகள் அதிகமாக இருந்தது. ஜனாபாயி உடலில் அத்தனை சக்தியுமில்லை. பார்த்தான் பாண்டுரங்கன். தன் பக்தை கஷ்டப்படுவதைப்பார்க்க இயலாமல் தானும் ஒரு பெண்போல் தோய்க்குமிடத்தில் வந்து அவளுக்குத்தோய்த்து உதவினான்.

சாதுஜன சேவை பாண்டுரங்கனுக்கு மிகப்பிடித்த ஒன்று. ஜனாபாயி தன் வாழ்க்கை முழுவதும் சேவைக்காகவே அர்ப்பித்துக்கொண்டதால் அந்தப்பரந்தாமன் மனமகிழ்ந்து அவளுக்குச்சேவை செய்கிறான் பாருங்கள். என்ன கருணை !

மற்றொரு சம்பவம்……. பாண்டுரங்கன் பிரசாதத்திற்காக அரிசியை மாவாக்க வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மிக்சி இல்லை. கையினால் அரைக்கும் கல் இயந்திரம் தான் இருந்தது. அதன் கைப்பிடியைப்ப்டித்துக்கொண்டுஅதைச் சுற்ற வேண்டும். ஒவ்வொரு பிடியாக அரிசியையும் உள்ளே போட்டு அரைக்க வேண்டும். பொறுப்பானா பாண்டுரங்கன்! ஓடோடி வந்தான் தானும் அந்த மர கைப்பிடியைப்பிடித்தபடி மாவு ஆட்டினான். ஜனாபாயின் இந்த்சேவையினால் மனம் மகிழ்ந்துப்போனான் அவன். தன் மார்பில் அலங்கரித்த கௌஸ்துபமணி மாலையை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்.

மறுநாள் காலை கோயில் கதவு திறக்கப்பட்டது . அர்ச்சகர் உள்ளே நுழைந்து…
” ஐயோ இது என்ன சோதனை ? பண்டரிநாதனின் கௌஸ்துபமணி மாலை காணவில்லையே! யார் எடுத்து சென்றார்?” என்று பதட்டத்துடன் கத்தினார் .
அங்கிருந்த பலரைச்சோதனையிட்டனர்.
“இதோ இங்கிருக்கிறது. வாருங்கள், ஜனாபாயிடம் இந்த மாலை இருக்கிறது.” என்று ஒருவர் செய்தி சொல்ல எல்லோரும் அவள் அருகில் ஓடினர்.

ஜனாபாயின் கழுத்தை அந்தக்கௌச்துபமாலை அலங்கரித்திருந்தது. கண்ணன் தான் கொடுத்தான் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?

‘ஜனாபாய் தான் திருடிவிட்டாள்’ என்று அவளை மன்னர் முன் அழைத்துபோனார்கள். அவள் குற்றவாளி என்று தீர்ப்பாகி அவளை கழுமரத்தில் ஏற்றும்படி கட்டளைப்பிறந்த்து.
ஜனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டாள். ஆனால் நடந்தது என்ன? கழுமரத்தில் ஏற்றும் சமயத்தில் கழுமரம் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது.

ஜனாபாய் நிரபராதி என நிதரிசனமாகத் தெரிய எல்லோரும் இது அந்த விட்டலனின் லீலை என்று புரிந்துக்கொண்டு எல்லோரும் ஜனாபாயை வணங்கினர்.

ஜனாபாய் பாடிய ‘அப்ங்க்’ பஜனைகளை பாண்டுரங்கன் எழுதிவைத்துக்கொண்டது பாண்டுரங்கன் மேல் அவளின் தீவிர பக்தியை எடுத்துக்காட்டுகிறது .

சரி. நாம் இப்போது கோவிந்தபுரம் திரும்பவும் வருவோம்.

கோவிந்தபுரத்தில் வசந்த மண்டப விதானத்தில் பல ஓவியங்கள் மிக அற்புதமாக வரையப்பட்டு விட்டலின் மகிமைகளையும் விட்டலனின் பக்தர்களைப்பற்றியும் விவரிக்கின்றன. தூண்களே இல்லாமல் வசந்தமண்டபத்தைக் கட்டி இருப்பது மிகவும் ஆச்சரியம் தான். இங்கு சுமார் 2000 பேர் அமர முடியுமாம்.

கோயிலின் முகப்பு மிக பிரம்மாண்டமாக அமைந்து எல்லோரையும் உள்ளே “வா வா ” என்று அழைத்து விடுவதை நான் உணர்ந்தேன். கோயிலின் கோபுரம் சுமார் 132 அடி உயரம். அதன் மேல் ஒரு பெரிய கலசம் அலங்கரிக்கிறது. அது 18 அடி உயரம் என்று தெரிய வந்தது. உள்ளே அக்கம் பக்கத்தில் பச்சை பசேலென வயல்கள். அதன் மண் வாசனை, மலர்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் எல்லாம் மனதுக்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது. கோயிலினுள் கண்ணனின் பலவித லீலைகள் மரப்பலகையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கோயிலில் போனால் முதலில் தியான மண்டபம் சென்று கொஞ்சம் நேரம் தியானம் செய்தப்பின் மனதை ஒருமுகமாக்கியப்பின் விட்டலன் அருகில் வந்து அவனைத்தொட்டு பூஜிக்கலாம். பாண்டுரங்கனுடன் ரகுமாயியும் சேர்ந்து இருந்து அருள் புரிகின்றனர்.
இங்கு வந்து தங்கவும் தனி அறைகள் உண்டு. தவிர குளிக்க ஒரு குளமும் இருக்கிறது. கோயில் மராட்டியபாணியில் தான் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக்கோயில் கட்ட நிதி மக்களின் காணிக்கையினாலேயே சேர்ந்தது. அப்படிச்சேர முக்கியகாரணமாக இருந்தவர் ஸ்ரீ விட்டல்தாஸ் தான். அவரின் உண்மை பெயர் திரு ஜெய கிருஷண தீக்ஷதர். சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ அனந்தராமதீக்ஷதர் வம்சத்தில் வந்தவர். அவருடைய பேரன் எனலாம் இவரது தந்தை பிரும்மஸ்ரீ ராமதீக்ஷதர். 2004ல் ஸ்ரீவிட்டல்தாஸ் தனது குருவான ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அவர்களுடன் இந்த இடத்தில் பூமிபூஜை செய்தார். ஸ்ரீவிட்டல்தாஸ் ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தானத்தை ஏற்று நடத்தி வருகிறார்.

இங்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் இங்கிருக்கும் கோசாலாவில் 400 பசுக்கள் உள்ளன. எல்லாம் ஆஸ்ட்ரேலியா பசுக்களைப்போல் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றன. அங்கே போனால் எங்கே நாம் துவாரகைக்கு வந்து விட்டோமோ என்ற பிரமை ஏற்படுகிறது. கண்ணன் புல்லாங்குழலின் இசைதான் பாக்கி. மாட்டுக்கொட்டில் போல் சாணம் வாடை அங்கு வீசவில்லை. சாதாரணமாக பசு மாடு தன் மேல் அமரும் ஈக்களை தனது வாலால் விரட்டியபடி இருக்கும். ஆனால் இந்த மாட்டுக்கொட்டிலில் ஒரு ஈயைக்கூட காணமுடியாது. அத்தனை சுத்தம். மாட்டு மூத்தரத்தையும் சாணத்தையும் அப்பப்போது அப்புறப்படுத்தி அந்த இடத்தை உடனே குழாய் வழியாக தண்ணீர் பீய்ச்சி அலம்பி விடுகிறார்கள்.

மாடுகளுக்கு ஆகாரமும் சரியான நேரத்தில் அட்டவணைபோட்டு அதன் பிரகாரம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாடுக்கும் நல்ல விஸ்தாரமாக இடம் ஒதுக்கி இருக்கின்றனர். பல வரிசைகளில் மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களது ஆகாரமான புல்லும் இதற்கென்றே வளர்கப்படுகிறது. தவிர வயதான மாடுகளையும் கடைசிவரை வைத்து ரக்ஷிக்கிறார்கள். அடிக்கடி டாக்டரும் வந்து தேவைப்பட்டால் வைத்தியமும் செய்து தருகின்றனர். இந்த இடமே ஒரு கோயிலாக எனக்குப்பட்டது. இதில் வரும் பாலை. அன்னதானத்திற்கும் மற்றும் வெண்ணெய், நெய் போன்று தயாரிக்கவும் உபயோகிப்பார்கள் என நினைக்கிறேன். கோமாதா சேவை மிகவும் உயர்ந்த சேவை ஆயிற்றே.

இந்த கோவிந்தபுரத்தில் தான் காஞ்சி காமகோடி 59 வது பீடாதிபதி பகவான் போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது .

”விட்டல விட்டல , பாண்டுரங்க விட்டல ” என்ற பஜனை என் காதில் ஒலிக்க நான் அங்கிருந்து விடைப்பெற்றேன்.

 

 

 

 

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/ & http://www.veethi.com/ & http://www1.sulekha.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.