-சங்கர் சுப்ரமணியன்

அவள் கிடத்தப்பட்டிருந்தாள் வீட்டு முற்றத்தில்
பதற்றமும் கண்ணீரும் கவலையும்
சோகமும் சொல்லவொண்ணாத் துயரமுமாக
தனித்து நின்றிருந்தேன் நான் தவித்தபடி!

எதுவோ நடந்திருக்கிறது என்பதற்குச் சாட்சியாக
நான் இருப்பதாகவே பொய்யான காரணங்களை
உயிர்ப்பித்துச் சந்தேகப் பார்வையில் என்னை
மேய்ந்தது சுற்றியிருந்த ஊர்ஜனம்!

சமமாகப் பிரித்து கலைத்துவிட்ட விதியின்
இந்த கோர விளையாட்டைக் கண்டு திகைத்து
மீளாத துயரத்தில் தாங்கவே முடியாமல்
கனத்து வலித்தது என் நெஞ்சம்!

எல்லாக் காரணங்களையும் ஒவ்வொன்றாக
மனத்தில் திரையிட்டு உண்மையில்லை
என்பதாக அழித்துக்கொண்டிருக்கும் காரணங்களை
மறுதலிக்கும் என் மனம்!

என்ன காரணமென்று எழுந்துவந்து என்
காதிலாவது  சொல்லிப்போயேன்
சந்தோஷமாய் நாம் வாழ்ந்ததற்கு அதுவாவது
ஒரு சாட்சியாய் இருந்து போகட்டுமே!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க