-கீதா மதிவாணன்

அன்றொருநாள் அவசர நிமித்தம்
கவிதையொன்றைக் கைமாற்றாய்க் கேட்டுக்
கையேந்தி நின்றிருந்தாய் என் வீட்டுவாயிலில்!              pencil-notebook

உன் கையறுநிலையைக் காணச் சகியாது
என் கவிதைத் தாள்களின் கதறல்களை மீறிப்
பிய்த்துக்கொடுத்தேன் என் கவிச்சிதறல்களை!

காயமுற்ற என் கவிதைப் புத்தகம்
நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
சுயமிழந்து தவிக்கிறேன் நான்!

விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
என்விரல் ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
தூசுபடிந்த உன் சத்தியங்கள் காலாவதியாகிக்
கணகாலமாகிவிட்டதை உணராது
விடுபடும் நாளை எதிர்பார்த்திருக்கின்றன
விம்மலும் விசும்பலுமாய்!

உன் கையொப்பத்துக்காக முண்டியடித்த
கூட்டத்தின் நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது!
பைத்தியங்குளியைப் போன்ற தோற்றத்திலும்
என்னைநீ அடையாளங் கண்டுகொண்டாய் என்பதை
விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்!

இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லிக்
கரைந்து கொண்டிருக்கின்றன காக்கைகள்!

கையுதிர்க்கவிருக்கும் சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப்
படபடப்போடு புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று!

 

4 thoughts on “கவிதைக் கைமாற்று!

 1. அருமையான கவிதை கீதா சகோதரி. உங்கள் வசனநடையிலும் கவிதை ஜொலிக்கத்தான் செய்கிறது. அது படிப்பவர் நெஞ்சை ஊடுருவிச் சென்று ஒரு கனமான உணர்வை அங்கே விதைக்கிறது.
  “என்னைநீ அடையாளங் கண்டுகொண்டாய் என்பதை
  விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்து உணர்த்தினாய்!”
  உன்னைநான் அடையாளம் கண்டுகொன்டேன் என்பதை
  மொழிகளைக் குழைத்து மெளனம் கலைந்து நான்சொல்வதோ!

 2. போனால் போகட்டும்..
  புதிதுபுதிதாய் எழுதுங்கள்-
  இதுமாதிரி..
  நன்று…!

 3. பிரிந்து போன கவிதைக்கு நோட்டு புத்தகமும் வரவைக்கூறும் காக்கையும் கை உதிர்க்க வரும் உறுதிமொழியும் நேயமற்ற மனசோடு இருந்த காதலனும் காதலுமா.

 4. கவிதையை ரசித்து ஊக்கம் தரும் பின்னூட்டங்களால் அலங்கரித்த k.ravi அவர்களுக்கும் செண்பக ஜகதீசன் அவர்களுக்கும் அமீர் அவர்களுக்கும் அகமார்ந்த நன்றி. 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க