சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 2

–செம்பூர் நீலு.

10,000 புத்தர் உருவச்சிலைகள் உள்ள நகரம்

நாப்பா வாலியை சுற்றிப்பார்த்துவிட்டு இரவில் ஒரு நல்ல லாட்ஜில்  தங்கிவிட்டு மறு நாள் காலையில் உக்கியா நகரிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள 10,000 உருவச் சிலைகள் கொண்ட புகழ் வாய்ந்த புத்தர் கோவிலுக்குச்  சென்றோம்.

நுழை வாயில் வளைவு மண்டபம்
picture 1நகரின் நுழை வாசலில் உள்ள மண்டபம் அழகாக சைனா ஜென் கோவில் கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. இருமருங்கிலும் பச்சைப்  பசேலென்று அமைந்திருக்கும் செடிகள் பார்ப்பதற்குக்  கண்ணிற்குக்  குளுமையாக இருந்தது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்தக்  கோவில் வளாகம், அதைச்  சுற்றி  புல்வெளிகள், எக்சிபிஷன் அறை, பெரிய தியான மண்டபம், புத்தா பல்கலைக்கழகத்தின் தர்ம பரிபாலனம், கல்விக்கூடங்கள்,  வெஜிடேரியன் உணவகம் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. நுழை வாயிலில் காலெடுத்து வைத்தவுடன் அங்கிருக்கும் அமைதியான சூழ்நிலை நம்மை மௌனமாக்கிவிடுகிறது. வழியில் தென்படும் யாத்திரிகர்கள் / புத்த பிக்குக்கள் கை கூப்பி சிரம் தாழ்த்தி  வணக்கம் தெரிவிக்கின்றனர்.

இந்த கோவில் வளாகம் சர்வ தேச புத்த சமூக ஜென் அமைப்பை, குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் முக்கிய அமைப்பை சேர்ந்த திரு ஹுசுவான் ஹுஆ என்பவரால் 1974 ம் வருடம் நிர்மாணிக்கப்பட்டது. உலகத்திலேயே முதல் சைனா ஜென் கோவிலாகவும் மேற்கத்திய நாடுகளின்  5 புத்த சமூகத்தினரின் கோவிலாகவும் கருதப்படுகிறது. மேற்கத்திய உலகில் வாழும் மக்களுக்கு புத்தரின் போதனைகளை கற்றுத்  தருவதற்காக வேண்டி இந்த வளாகத்தை நிர்மாணம் செய்தார்.

பிரதான அலுவலகத்தின் அதிகாரி கைகூப்பி வணங்கி வரவேற்கிறார். அங்கிருக்கும் பதிவேட்டில் பெயரையும் முகவரியையும் பதிவு செய்தபின் அருகிலிருக்கும் எக்ஸிபிஷன் அறைக்குள்  அடியெடுத்துவைக்கிறோம். அழகான கம்பீரமான சிங்க உருவச்சிலையும் பளிங்கு நிறமுள்ள நிற்கும் நிலையில் புத்தர் சிலையும் நம்மை வரவேற்கிறது.

picture 2   picture 3   picture 6

picture 4    picture 5

அருகில் உள்ள புல் வெளிகளில் மயில்கள் கூவிக்  கூவி யாத்ரிகர்களை வரவேற்கிறது.
ஒரு மரநிழலில் மயில் தோகை விரித்தாடும் காட்சியை காண கண் கோடி வேண்டும். ஒரு மயில் மரத்தின் மேல் நின்றுகொண்டிருந்த்து. இன்னொன்று மரநிழலில் ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்தது.

picture 7   picture 8

அருகில் ஒரு சிறிய வாய்க்கால் ஒடிக்கொண்டிருந்தது. அதில் பல நிறங்களில் மீன்கள் நீந்தி விளயாடிக்கொண்டிருந்தன.
picture 9   picture 10

பின்னர் பிரதான கோவிலும் தியான ஹாலிருக்கும் இடத்திற்குச்  சென்றோம். முன்னால் கொடிமரம் போன்றொரு விளக்கு. இரண்டு சிங்கங்களின் உருவச்சிலைகள் மேல் மாடத்தில் புத்தரின் உட்கார்ந்த நிலையில் அமைந்திருக்கும் உருவச்சிலை. படியேறிச் சென்றவுடன் நம்மை வரவேற்பது ஒரு சிறிய கோவில் போன்ற அமைப்பு.
picture 11   picture 12

புத்த பெருமானை வணங்கிவிட்டு தியான ஹாலில் நுழைகிறோம். ஒரு அமைதியான சூழ்நிலை. திரியிட்டு எரியும் நில விளக்குகள் மாதிரி மின்சார வட்ட வடிவமான உயர்ந்த விளக்குகள்

ஒவ்வொரு விளக்கிலும் புத்தரின் உருவம். எங்கிலும் எதிலும் புத்தர். எல்லாமே புத்தர் மயம்.

பெரிய தியான மண்டபத்திற்குள் நுழைகிறோம். நான்கு சுவர்களிலும் புத்தர் பெருமானின் உருவச்சிலைகள் வரிசையாக ஷெல்ஃபுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஹாலின் இரண்டு பக்கத்திலும் வரிசையாக சிறிய சதுர வடிவ மெத்தைகள்.  பக்தர்கள் சிவப்பு க்ம்பளம் விரிக்கப்பட்ட தறையில்  சிறிய சதுர வடிவ மெத்தைகளின் முன்னால் அமர்ந்துகொண்டு கைகூப்பி சிரம் தாழ்த்தி அமைதியாக வழிபடுகின்றன்ர். முன்னால் மேடையில் புத்தர் பெருமானின் பெரிய உருவச்சிலை.
picture 13   picture 14
அருகில் சென்று பார்த்தால் அந்த பிரும்மாண்டமான உருவம் பரந்தாமன் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு காட்சிகொடுத்து பகவத் கீதையை உபதேசித்த காட்சி நினவுக்கு வருகின்றது. புத்த பகவானும் மஹாவிஷ்ணுவின் அவதாரம்தானே. அமைதியான சூழ்நிலையில் 30 நிமிடம் தியானம் செய்துவிட்டு வெளியில் வருவதற்கு மனது கேட்கவில்லை. அதிகம் வெளிச்சமில்லாத வெளிர் மஞ்சள் நிறமுள்ள விளக்கு ஒளியில் புத்த பெருமானின் தஙக நிறமுள்ள பெரிய உருவச்சிலை. நல்ல இனிமையான மணியோசை. எல்லா பக்தர்களும் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புத்த பிக்குகள் (ஆண்களும் பெண்களும்) தனித் தனியாக இரண்டு பக்கத்திலும் அமர்ந்து தியானம் செய்கின்றனர். வெளியில் வரும்போது அங்கிருக்கும் அதிகாரி பக்தர்களை உணவத்திற்கு செல்லுமாறு விண்ணப்பிக்கின்றார்.

பக்தர்கள் அனைவருக்கும் வெஜிடேரியன் உணவு இலவசமாக உணவகத்தில் பகல் 11 மணி முதல் 3 ம்ணி வரை அளிக்கப்படுகிறது.
picture 15   picture 16

உணவகத்திற்குச்  சென்று சோயா பாலாடைக்கட்டிகளுடன் காய்கறி சாலட், நூடுல்ஸ் மற்றும் சில சைனீஸ் உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். இந்த மாதிரி ஒரு அமைதியான புத்தர் கோவில் வளாகத்தை பார்க்க கிடைத்த வாய்ப்பை அளித்த அந்த புத்த பெருமானுக்கு வணக்கம் கலந்த நன்றியை தெரிவித்துவிட்டு அடுத்த சுற்றுலா மையத்திற்குப்  புறப்பட்டோம்.

செம்பூர் நீலு ( நீலகண்டன் )
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
13-07-2014

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க