கே.ரவி

1980-ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை, தொலைக்காட்சியில் (அப்பொழுதெல்லாம் ஒரே சேனல் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே) ஒரு கவியரங்கம். கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் கவிதை படித்தனர். கவிதை படித்த எல்லாக் கவிஞர்களுமே பாரதியைக் குறிப்பிடத் தவறவில்லை. கவிஞர் கண்ணதாசனும் பாரதி பற்றிய உணர்வை அவருக்கே உரிய பாணியில் பகிர்ந்து கொண்டார்.

பாரதி பற்றி நிறைய கவிதைகள் கேட்டிருக்கிறேன். அதிலும் உணர்ச்சி பூர்வமான அற்புதக் கவிதைகள் நிறையவே கேட்டிருக்கிறேன். அன்று அந்தக் கவியரங்கில் படிக்கப் பட்ட கவிதைகள் மிகச்சிறப்பாக இருந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும், அக்கவியரங்கம் முழுதும் பாரதியின் உணர்ச்சிப் பெருக்கு, நீறு பூத்த நெருப்புப் போல இழையோடியிருந்தது. அன்று படிக்கப்பட்ட கவிதை வரிகளைக் காட்டிலும், அவை நினைவு படுத்திய பாரதியின் வரிகளிலும், அவன் வாழ்க்கையில் சந்தித்த சோதனைக் களங்களிலும் என் மனம் தோய்ந்து விட்டது. என்னை அறியாமல் அந்தக் கவிதைகளின் நடுவிலிருந்து முண்டாசுக் கவிஞன் முளைத்தெழுந்து என் மனத்திரையை ஆக்கிரமித்துக் கொண்டான். ஓர் உத்வேகத்தோடு என் உள்ளத்திலிருந்து சில கவிதை வரிகள் ஊற்றெடுத்து வந்தன. வந்த வரிகளை எழுதி வைத்துவிட்டுப் படித்துக் கூடப் பார்க்காமல் காத்திருந்தேன்.

shobaஷோபனா செய்தி படித்து முடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்ததும், பரபரப்பாக அவளிடம் அந்தக் கவிதையைப் படித்துக் காட்ட முயன்று, படிக்க முடியாமல் குரல் தழுதழுக்க, நான் அழ, ஷோபனாவும் அழச் சற்று நேரம் ஒரே உணர்ச்சி மயமாகக் கழிந்தது. அதை அழுகை என்று சொல்வதா, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டெழுந்து வந்த உணர்ச்சிப் பிரவாகம் என்று சொல்வதா?

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு பாரதி கலைக்கழகத்தில், ஹா.கி.வாலம் அம்மையார் நினைவுக் கவியரங்கத்தில் அந்தக் கவிதையைப் படிக்கத் துணிந்தேன். படித்து முடிக்கும் போது மீண்டும் தொண்டையடைக்கக் கண்ணீர் பெருக்கினேன்.

அந்தக் கவிதை:

அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

புதைமண லில்சில விதைகள் தூவப் புறப்பட்டானே

போகும் வழியில் எல்லாம் நெஞ்சு மிதிபட்டானே

அதையும் மீறிச் சென்றே கனவுப் பயிர் வைத்தானே

அதற்குத் தன்னை ஆகுதி யாக்கி உயிர்விட் டானே

அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

 

கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே

காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே

தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே

தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே

அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

 

கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது

காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது

தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது

தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது

நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா

இந்தக் கவிதையைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் நண்பன் சுகி சிவம் சொன்ன போது, பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களெல்லாம் அதை மிகவும் ரசித்ததாக அவனே சொல்லக் கேட்டு நெகிழ்ந்தேன்.

இந்தக் கவிதையில் அப்படி என்ன இருக்கிறது என்று இதுவரை சிகாமணி செய்த ஆராய்ச்சியில் அவனுக்கு எதுவுமே அகப்படவில்லை. ஆனால், மனோன்மணிக்குத் தெரியும், பின்னணி உணர்ச்சியாக, கனமாக, அதில் பொதிந்திருக்கும் சுமை என்ன என்று. கவிதைச் சுவையா, கவிதைச் சுமையா? பட்டிமன்றம் போல் சிகாமணி கேலியாகக் கேட்ட கேள்விகளை அவள் பொருட்படுத்தவே இல்லை. அது சுவையின் சுமை, சுமையின் சுவை.

sardarஒருநாள் தொலைபேசியில் சர்தார் சிங் என்ற கவிஞர் என்னைக் கேட்டார்: யாரும் அழுவதை பாரதி விரும்ப மாட்டான். அவனை நினைத்தாலே வீரம்தான் பொங்கியெழும், அழுகை வராது. பின் ஏன் நீங்கள் அவனுக்காக அழச்சொல்கிறீர்கள்?”

நான் அவரை மறுத்து எதுவும் பேசவில்லை. அவர் சொன்னது முற்றிலும் சரியென்றே தோன்றியது. அறிவு பூர்வமாக நிறுவவே முடியாத இரண்டு விஷயங்கள், கடவுளும், கவிதையும். அந்த முயற்சியில் ஈடுபடுவது வியர்த்தம்தம்தான்.

சென்ற பகுதியில், பாரதியின் பாடல் ஒன்றை அமரர் தேவநாராயணன் பாடக் கேட்டு, “என் கண்கள் கலுழ்ந்தன” என்று நான் எழுதியிருந்ததைப் படித்து விட்டுக் ‘கலுழ்ந்தன’ என்ற சொல் கடினமான புலமைச் சொல்லாக இருக்கிறதே, அதை எளிய சொல்லாக மாற்றக் கூடாதா என்று ஷோபனா கேட்டாள்.

அவள் கேட்டு நான் எதைச் செய்யாமல் இருந்திருக்கிறேன்? உடனே, ‘கலங்கின’ என்று திருத்தி எழுதினேன். ஆனால், மறுநாளே நண்பன் சு.ரவி ‘வல்லமை’ மின்னிதழில் எழுதிய ஒரு கட்டுரை மீண்டும் அந்தச் சொல்லைக் ‘கலுழ்ந்தன’ என்று பழையபடித் திருத்தம் செய்ய என்னைத் தூண்டியது. சு.ரவியின் கட்டுரை மிகவும் சூடாகவே இருந்தது:

நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை. பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை. கண்ணீர்மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.

அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது. அழுகை ஆன்மாவைப்புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

அழுவது வேறு; கண்கள் கலுழ்வது வேறு. உருகிக் கரைவதைக் கூடப் பெரிய புலவர்கள் ‘அழுகை’ என்றே குறிப்பிட்டிருந்தாலும், அந்தச் சொல், சு.ரவி சொல்வது போல் இயலாமையையும், துயர் மிகுதியையும் குறிக்கக் கூடும் என்பதால், ‘கலுழ்தல்’ என்ற சொல்லே பொருத்தம் என்று முடிவு செய்தேன்.

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகச் செய்யும் சரணாகதி நிலைதானே ஆன்மிகப் பாதையில் அடிப்படை உந்து சக்தி! அதுதானே “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற துணிவோடு, கடவுளாகிய “கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்மலர்ச் சேவடியே” குறுகி நிற்கும் பணிவையும் அப்பரடிகளுக்குத் தந்தது! அதுதானே, “பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்” என்று முழங்கிய பாரதியை, “பரிபூரணர்க்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று நெகிழ்ந்துருகச் செய்தது!

இமைகள் நனைந்தேன் இதய புரீஸ்வரா

என்று நெக்குநெக்குருகி சபரிகிரீசனைப் பாடிய நண்பன் சு.ரவி, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பரமானந்த நிலையை மறுக்கவோ, வெறுக்கவோ முடியுமா?

தொலைக்காட்சியில் கண்ணதாசன் தலைமையில் ஒளிபரப்பாகிய கவியரங்கம் எனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை நான் மறுப்பதற்கோ, மறப்பதற்கோ இல்லை.

கவிதைக்குத் தெரியுமா எது சரி, எது தவறென்று? ஆனால் கவிதையில், அதன் த்வனியில் மூழ்கினால், மூழ்கினால் . . . !

‘மூழ்கினால் மூச்சிழந்து மரணமடைய நேரிடும்’ என்று சிரித்தான் சிகாமணி. மூச்சிழந்தபின் முத்து மண்டபம் காத்திருக்கும் என்று சொன்னால் அவனுக்குப் புரியாது. கவிதையாகவே சொன்னேனே, 1979-ல்:

தடம் புரண்டன சொற்கள்

தவிக்க வைத்தது தாகம் – இருட்டில்

தடவிக் கொண்டே நடந்து செல்லும்

குருட்டு மனத்தின் குமுறல்

நடுங்க வைக்கும் நள்ளிர வைப்போல்

நகர மறுக்கும் தனிமை

ஓவென் றலறி உதவக் கூட

நாவின்றி நின்ற வேளை

உருவற்ற மேகத்தில் ஒருகோடி மின்னல்

உருவான தோகவிதை ஓசைப் பிரவாகம்

உடைகின்ற மெளனத்தை அடைகாத்த நெஞ்சம்

உயிர்க்கின்ற பயிர்க்கென்(று) உதிர்க்கின்ற முத்தெல்லாம்

சரித்திரக் கடலில் சங்கம மாகும்

சான்று தேவை யென்றால்

மூழ்க வேண்டும்

மூச்சிழந்த பின்னே

முத்து மண்டபம் காத்தி ருக்குமே

baba1கவிதை ஒரு வாசல், அனுபவ வாசல். அதைத் திறந்து கொண்டு உள்ளே நுழையத் துணிந்தால், அது உதித்த அதே அனுபவக் களத்துக்கு, அதற்குள் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் அதே அனுபவக் களத்துக்குச் செல்ல முடியும் என்று நான் சொல்வதை விட என்றாவது ஒருநாள் கவிஞர் சர்தார் சிங் சொல்வார் என்று காத்திருக்கிறேன்.

ஷீர்டி சாய்பாபாவை நினைந்துருகி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் பாடிய பாடலொன்றை மெல்லிய குரலில் மனோன்மணி இப்போது பாடுகிறாளே!

அழுதழுது வரண்ட கண்கள் – உன்னைbaba

அழைத்தழைத்து வாடும் நெஞ்சம்

தொழுவதற்கும் வலுவிழந்த கைகள் – நீ

தோன்றிவிடு என்னெதிரில் கொஞ்சம்

நிழல்கொடுக்கும் தூயவொளி நீயே

நேரில்வரும் தெய்வமிங்கு நீயே

உழல்கின்ற மனமாயை தீர – வந்(து)

உதிக்கின்ற தழலேயென் தாயே

ஶ்ரீ சாயிராம் ஜெய் சாயிராம்

சீரடிக் கமல க்ருபா சாயிராம்

. . . . . . .

சிந்தனைக் கோட்டத்தின் “கூட்டுவழி பாடு” என்ற வாராந்திரப் பிரார்த்தனைக் கூட்டங்கள் ஒரு சிறிய நண்பர் குழுவைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பொற்காலம் என் நெஞ்சத் திரையில் நிழலாடுகிறது.

ஓ அந்த இனிய நாட்கள் . . . .!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *