சுங்கூத்தாங்குழல்
ஓம் வெ.சுப்பிரமணியன்
சுங்கூத்தாங்குழல் என்று நச்சுக்குழல் பற்றி கீழ்க்காணும் பாடலில் காணலாம்.
புலவர் ஒருவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவருக்கு பரிசில் ஏதும்
கிடைக்கவில்லையெனில் அவர் மனம் அடையும் கொதிப்பினை சுட்டுமுகத்தான் இப்பாடல் அமைந்துள்ளது.
காடுபோன்று காட்சியளிக்கின்ற கதலிவாழைத்தோட்டங்களில் தளிர்விட்டு நிற்கும் பசுங்குருத்துக்கள் சுழன்றுகுழல்போல் தோற்றமளிப்பதைக் கண்டு, அவை நச்சுக்குழலாகவிருக்குமோ?(சுங்கூத்தாங்குழல்) என்று அச்சம் கொண்டு, அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் தன் கூட்டினை விட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே தங்கியுள்ளன அந்த பூமிக்கு அதிபதியான சோழ சிங்கமே! திடமான மதம்பொழி யானைகள் உகைத்த தேவனே!கேள்!
வடவ முகா அக்கினியை மேலும் பிழிந்தெடுத்து, மற்றுமோர் முறை வடித்தெடுத்து,உலையினில் பாத்திரத்திலிட்டு, ஊது உலையினைத் துருத்தி கொண்டு கனல்பெருகச்செய்து, வற்றக்காய்ச்சி, அடர்ந்த குழம்புபோல் செய்து, கயவர்களைப்புகழ் பாடித் துன்புற்று, பரிசில் கிடைக்கும் என்று எதிர்நோக்கி ஏமாந்து வருகின்ற புலவன் ஒருவனின் மனம் அடையும் வெம்மைக்கு நிகரான அக்குழம்பினை மேனியில் பூசிக்கொள்ளும் புனுகு!’ என்று சொன்னால் அக்கடுகனல் குழம்பினைப் பொறுக்கமுடியுமோ?
பாடல்:-
வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து மற்று மொருகால் வடித்தெடுத்து
வாடைத் துருத்திவைத்தூதி மருகக் காய்ச்சிக் குழம்புசெய்து,
புடவிக் கயவர்தமைப் பாடிப் பரிசில் பெறாமல் திரும்பிவரும்
புலவர் மனம் போல் சுடும் நெருப்பைப் புழுகென்றிறைத்தால் பொறுப்பாரோ?
அடவிக் கதலிப் பசுங்குருத்தை நச்சுக்குழலென்று அஞ்சியஞ்சி
அஞ்சொற்கிளிகள் பஞ்சரம்விட்டு அகலா நிற்கும் அகளங்கா!
திட முக்கட வாரணமுகைத்த தேவே! சோழசிங்கமே!
திக்குவிசயம் செலுத்தி ஒரு செங்கோநடாத்துமெங்கோவே!