வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

1

பவள சங்கரி

 

வனங்கள் …..பறவைகள்………காப்போம்!

 

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.

என்று சிட்டுக்குருவியைக் கொஞ்சிக் குலவினான் மகாகவி பாரதி.நம் கையளவேயுள்ள அந்த சிட்டுக் குருவி நமக்குச் சொல்லும் பாடங்கள் பல.ஆம் அந்த அழகுக் குருவிகளிடம் நாம் கற்க வேண்டியவைகளும் ஏராளம். ஆனால் நம் சந்ததியினருக்கு இந்த அரிய அழகு சீவனை நிழற்படமாக மட்டுமே காட்ட முடியும் போல் உள்ளது.

உலகில் உள்ள குருவிகள் இனம் வெகு வேகமாக அழிந்து கொண்டிருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.உலக அளவில் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவது, அதிக அளவில் ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, தட்பவெட்ப நிலை மாறுவது உள்பட பல்வேறு காரணங்களால் ஏராளமான பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.

உலக அளவில் சுமார் ஆயிரத்து 226 பறவை இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் 88 ரக பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வரும் உலக அளவிலான அமைப்பு கூறுகிறது. உலக அளவில் அதிக அளவு பறவை இனங்கள் அழிந்து வரும் நாடுகளில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 88 பறவை இனங்கள் அழிந்து வருகிறது.

இந்த மையம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. செல்பேசி கோபுரங்கள் மற்றும் வேறு சில சுற்றுச் சூழல் பாதிப்புகள் காரணமாக திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இந்தக் குருவி இனங்கள் அழிந்து கொண்டு வருவதாக ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளார்கள். கடந்த 2008-2009ல் மேற்கொண்ட ஆய்வின்ப்டி கேரள மாநிலத்தில் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியான தகவல்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை அறிந்திருந்தும் நாம் எந்த அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்திந்தித்திருக்கிறோமா? உலகளவில் இயற்கைக் காடுகளின் அழிவு பரவலாக நடந்து கொண்டுதானிருக்கிறது. பிரேசில் அரசு சிறப்பு அதிரடிப்படை ஒன்றை நிறுவி காடுகளைப் பாதுகாக்க திட்டமிடும் அளவிற்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றியமையாததாக விளங்கும் அமேசான் காடுகளை அழிக்கும் நடவடிக்கை பன் மடங்கு அதிகரித்துள்ளதாம்.கடந்த 3 மாதங்களில் மட்டும் சராசரியாக 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சட்டத்திற்கு விரோதமாக பெரும்பானமையான வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு விவசாய நிலமாக மாற்றப்படுகிறது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படும் அபாயம் அதிகமாக இருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

டேவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் குழுவில் உறையாற்றிய ஐ.நா.வின் தலைவர் பான் கீ மூன், உலகின் தற்போதைய பொருளாதார வடிவம் உலக “சுற்றுச்சூழல் தற்கொலை ஒப்பந்தம்” என்று  தெரிவித்துள்ளார். வானிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு பொருளாதார வளர்ச்சி பற்றி யோசிக்கும் காலம் நெருங்கி விட்டது.” என்று கூறினார் அவர். பான் கீ மூனின் இந்த பேச்சிற்கு பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்தன.

“சராசரியாக ஒரு ஐரோப்பியர் செலவழிக்கும் எரிசக்தியைக் காட்டிலும் மற்றவர்கள் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துவதன் மூலம் நாம் நியாயமான உலகை தக்க வைக்க இயலாது” என்று மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் தெரிவித்தார்.

கரியமில வாயு வெளியேற்றத்தையும், உலக நுகர்வையும் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று பில் கேட்ஸ் தனது தீர்வையும் இந்த மாநாட்டில் கூறியுள்ளார்.

ஒவ்வொருவரும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கொள்ள வேண்டிய அவசர காலம் என்பது கண்கூடு.

குருவிகளையும் அழிவிலிருந்து காக்க வேண்டும். அன்றாடம் நாம் உண்ணும் உணவிலிருந்து ஒரு கைப்பிடி தானியமாகவோ, உணவாகவோ பறவைகளுக்கு வைக்க வேண்டும், முடிந்த வரை சின்ன இயற்கை கூண்டோ அல்லது மரத்தின் மீது குச்சு வீடோ முடிந்தவர்கள் செய்யலாமே. எங்கள் வீட்டில் தினமும் காலையில் இதுபோல பறவைகளுக்கு உணவு வைப்பதை வழமையாகவேக் கொண்டிருக்கிறோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

  1. முதலில் அடுக்குமாடிக்குடியிருப்புகள் கட்டறவங்க மரங்களை வெட்டிச் சாய்ப்பதைத் தடுத்தாலே போதும். அதோடு எல்லா அடுக்குமாடிக் குடியிருப்புகளும் குறைந்தது மூன்று கிரவுண்டுக் குறையாத நிலத்திலேயே கட்டப்படவேண்டும் என்று சட்டம் போடவேண்டும். அரை கிரவுண்டு, ஒரு கிரவுண்டு நிலத்தில் இரண்டே குடும்பங்கள் மட்டுமே இருக்குமாறு கட்ட வேண்டும் என்றும் கடுமையாகச் சட்டம் போடவேண்டும். கட்டடத்திற்கும், அடுத்த வீடுகளுக்கும் இடையே குறைந்தது பத்தடி இடம் விடவேண்டும் எனவும் அந்தப் பத்தடிக்குள்ளாக மரங்களையும், செடி, கொடிகளையும் வளர்க்க வேண்டும் என்றும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கான மழைநீர் சேமிப்பு இருக்கவேண்டும் என்றும் கட்டாயமாக்க வேண்டும். இதற்கெல்லாம் நீதிமன்ற உத்தரவு இருந்தாலொழிய நடக்கும் என்று நம்பவும் முடியாது.

    சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்று கூட்டங்கள் போடுவதிலோ, ஊர்வலங்கள் போவதிலோ எந்தப் பயனும் இல்லை. அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்து எதிர்த்தும் போராடத் தயாரானால் ஒழிய இது நடவாத ஒன்று. உணவை வைத்தால் மட்டும் குருவிகளோ, காக்கைகளோ வந்துவிடுமா?? அவைகளுக்கான வாழ்வாதாரம் அழியாமல் காக்கப் படவேண்டுமல்லவா?? அதற்கு முதலில் என்ன செய்யப் போகிறோம்? எங்க வீட்டில் தினமும் காக்கை, குருவிகளுக்கு அன்னமிடும் வழக்கம் உண்டு. இத்தனை வருடங்களாகத் தவறாமல் வந்து கொண்டிருந்தன. இப்போது வீட்டின் அருகேயும், எதிரேயும் அடுக்குமாடிக்குடியிருப்புகள் கட்ட ஆரம்பித்ததுமே வருவது குறைந்து போய்விட்டது. எப்போதோ ஒரு காக்கையோ, அணிலோ வந்து உணவைக் கொத்தினால் அதிகம். அப்படி வந்தாலும் பக்கங்களில் எப்போதும் இடைவிடாமல் கேட்கும் இயந்திரங்களின் சப்தத்தால் அவை ஓடிவிடுகின்றன. :((((((((((((

    தஞ்சைப் பெரிய கோயில் கட்டுகையில் ராஜராஜ சோழன் கூட இவ்வளவு சப்தம் எழுப்பி இருப்பானா என்பது சந்தேகம்.

    பாதிப்பை அதிகம் சந்திக்கும் ஒருத்தியாக இதை எழுதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *