ஜன் லோக் பால் – வரைவு மசோதா – அரசு ஆடும் கண்ணாமூச்சி!

1

கேப்டன் கணேஷ்

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியது, அவரை அமைச்சர்கள் குறைத்து எடை போட்டு எள்ளி நகையாடியது, போராட்டத்தின் வேகத்தையும், மக்களிடத்தில் எழுந்த ஆதரவையும் கண்டு அரசு பணிந்தது, இவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே!

லோக் பால் மசோதா சட்டமாக்கப்பட்டால், ‘லோக் பால்’ என்ற அமைப்பு உருவாக்கப்படும். இது ‘இந்திய தேர்தல் ஆணையம்’ போல தன்னிச்சையாக செயல் படும் அமைப்பாகத் திகழும்.  இதன் முக்கிய பணியாவது, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகள் பற்றிய புகார்களை விசாரித்து, குற்றம் நிரூபணம் ஆனால் தண்டனைகள் வழங்குவதாகும்.  இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை.  ஏற்கனவே பல்வேறு நாடுகளில்( ஏறக்குறைய 60 நாடுகள்) இப்படி தன்னிச்சையாகச் செயல்படும் ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.  இவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே ஏறக்குறைய பதினைந்து மாநிலங்களில் ‘லோக் யுக்தா’ என்னும் பெயரில் மாநில அளவில் செயல்படும் அமைப்புகள் உள்ளன.

இந்தியாவில், இது அன்னா ஹசாரே ஆரம்பித்து வைத்தது அல்ல.  1969ம் ஆண்டில் இருந்து 2011 வரை, பத்து முறை, இந்த மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை சட்டமாக்கப் படாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது.  தவறுகள் செய்வோர் யாராவது தங்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பு உருவாவதை ஆதரிப்பார்களா? ஒவ்வொரு முறையும், வரைவு மசோதாவில் ஏதாவது குறை கண்டு அதில் மாற்றம் கோரி திருப்பி அனுப்பி விடுவார்கள் நமது பாராளுமன்றத் திருவாளர்கள்.

நாற்பத்தியிரண்டு ஆண்டுகளாய், வெவ்வேறு சமயங்களில் செய்த ‘கண்துடைப்பு’ நாடகத்தை, நான்கு மதங்களில் மீண்டும் செய்யத் திட்டமிட்ட அரசு, ‘நாளைக்கு உனக்கு நிலா தருவேன்! இன்றைக்கு நிலா போன்று இருக்கும் இந்த இட்டிலியைச் சாப்பிடு!’ என குழந்தைக்குச் சொல்வதைப் போல், ‘மழைகாலக் கூட்டத் தொடரில் மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல்’ என்ற உறுதிமொழியை அளித்தது.  நான்கு மாதங்கள், நூற்றி இருபது நாட்கள்.  எது வேண்டுமானாலும் நடக்கலாம்.  இது தெனாலி இராமன் பாணி!   ‘லோக் பால்’ ன் வரைவு மசோதாவினை வரையறை செய்ய ஒரு கூட்டுக்குழுவினை நியமனம் செய்தது அரசு.  இக்குழுவில் பத்து உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், ஐந்து உறுப்பினர்கள் அரசுத் தரப்பில் இருந்தும் (அமைச்சர்கள்.  இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாம்!) ஐந்து உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இது ஒரு சட்ட மசோதா.  இதில் அரசுத் தரப்புப் பிரதிநிதிகளாக இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்(Attorney General) அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து இருக்கலாம்.  இந்திய அரசின் நேரடிப் பணியமர்வின் கீழ், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலே கரை கண்ட பலரும் உள்ளனர்.  அவர்களையாவது நியமித்து இருக்கலாம்.  அதை செய்யாமல் அரசியல்வாதிகளை நியமிப்பது, ஆட்டுக் கிடைக்கு, நரி காவல் என்பதற்கு ஒப்பாகும்.

மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரும் கட்சி சார்புள்ளவர்களாக இருக்கக் கூடாது என்ற அரசு, தன் தரப்பில் மட்டும் கட்சி சார்புள்ள அமைச்சர்களை மட்டுமே நியமிக்குமாம்!  அதிகாரம் உள்ளவன் வைத்ததுதான் சட்டம்!  காங்கிரஸ் தலைமையின் ஆணை மட்டுமே செல்ல்லுபடியாவதால், இனி அரசு என்று அழைப்பதை தவிர்த்து ‘காங்கிரஸ்’ என்று மட்டுமே குறிப்பிடலாமே!

அரசுத் தரப்பில் இருந்து :  மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முக்கர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய சட்ட மற்றும் நீதி வழங்கல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், மத்திய நீர்வள ஆதாரங்கள் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் இருந்து : சாந்தி பூஷன் (முன்னாள் மத்திய சட்ட மற்றும் நீதி வழங்கல் துறை அமைச்சர், 1977 – 79 வரை), சமூக சேவகர் அன்னா ஹசாரே, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், கர்நாடக மாநில ‘லோக் யுக்தா’ அமைப்பின் உறுப்பினர் சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் இந்திய வருவாய்த்துறை ஆணையத்தின் அதிகாரி ம்ற்றும் இந்திய வருமான வரித்துறை ஆணையர், ‘பரிவர்த்தன்’ சமூக இயக்கத்தின் தற்போதைய தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இணைந்த பத்துப் பேர் உறுப்பினர்கள் ஆயினர்.

 

இதுவரை நடந்தது:

ஏப்ரல் 9 : சமூக சேவகர் அன்ன ஹசாரே யின் போராட்டத்தையும், அவருக்கு நாடு முழுக்க எழுந்த ஆதரவையும் கண்டு, மசோதா வரைவு கூட்டுக் குழு அமைக்கப் பட்டது.

ஏப்ரல் 16 :  மக்கள் பிரதிநிதிகளும், காங்கிரஸ் அமைச்சர்களும் சுமூக முறையில் தங்களால் உருவாக்கப்பட்ட தனித்தனி வரைவுகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மே 2 :  ‘லோக் பால்’ அமைப்பின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் அறிவித்தனர்.  மிக நல்ல முறையில், எவ்வித கருத்து வேறுபாடுகளும் இன்றி சுமூகமான முறையில் விவாதம் நடைபெற்றதாக கபில் சிபல் கூறினார்.

மே 7 :  தன்னிச்சையாக விசாரணைகளைத் தொடங்கவும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடவும் அதிகாரமுள்ள அமைப்பாக ‘லோக் பால்’ இருக்கவேண்டும் என்று இரு தரப்புமே விருப்பம் தெரிவித்தன.  இதன் செலவீனங்கள் யாவும் எவ்வித கட்டுபாடும் இன்றி இருக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  கபில் சிபல் இந்த விவாதத்தைப் பற்றி திருப்தி தெரிவித்தார்.

மே 23 :  குற்றம் சாட்டப் பட்டவரின் சொத்துக்களை முடக்கும் அதிகாரம் ‘லோக் பால்’ அமைப்புக்கு உண்டு என்ற கருத்தை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இக்கூட்டத்திற்குப் பிறகு தான், பிரச்சினைகள் ஆரம்பமாயின.  இதுவரை இணக்கம் காட்டி வந்த அரசு, தனது காய்களை நகர்த்த ஆரம்பித்தது, கபில் சிபல் மூலமாக!  

மே 30 :  பிரதம அமைச்சர், உச்சநீதி மன்ற மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணைவரும் ‘லோக் பால்’ன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் விரும்பினர்.  ஆனால், கபில் சிபலின் (காங்கிரஸின்) விருப்பம் வேறாக இருந்தது.  “பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அணைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.  இவர்களை விசாரிப்பதற்கும், சிறையிடவும் மக்களால் தேர்ந்தெடுக்கபடாத அமைப்புக்கு எப்படி அதிகாரம் தருவது?” என்றார்.  ஆரம்பித்தது ‘தலைவலி’!

ஜூன் 6 :  யோகா குரு பாபா ராம் தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய மறுநாள்.  காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள், இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.  அரசுத்தரப்பின் உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.  கூட்டம் முடிவுற்ற பின் கபில் சிபல் “மக்கள் பிரதிநி உறுப்பினர்கள் விவாதத்திற்கு வந்தாலும், வராவிடாலும், கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.  பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும்.” என்றார்.  “காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இது ஒரு அடையாளப் புறக்கணிப்பு.  அடுத்த விவாதத்திலிருந்து மக்கள் பிரதிநி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.” என்றார் அன்னா ஹசாரே.

ஜூன் 15 :  இரு குழுக்களுக்கிடையே, பெரிய அளவில் வேறுபாடுகள் வெடித்தன.  பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் செயலற்றதாக்கும் ஒரு அமைப்பை உருவாக்க மக்கள் பிரதிநி உறுப்பினர்கள் முயல்கிறார்கள் என்று அரசுத்தரப்பு கூறியது.  லோக் பால் உருவாகும் முன்னரே அதை அழித்து விட முடிவு செய்த்துவிட்டது அரசு என்று மக்கள் பிரதிநி தரப்பு கூறியது.

ஜூன் 20 :  விவாத்தின் இறுதியில் ‘நல்ல முன்னேற்றம்’ என்று கபில் சிபல் கூறினார்.  அனால் மக்கள் பிரதிநி உறுப்பினர்கள் வேறு மாதிரி கூறினார்கள்.  மேலும் இரண்டு கருத்து வேறுபாடுகள் எழுந்திருப்பதாகவும், முக்கிய வேறுபாடுகளில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

ஜுன் 21 :  இறுதிக் கூட்ட முடிவில், ‘வேறுபாடுகள் களையப்படவில்லை’ என்ற கருத்தை இரு குழுக்களுமே ஒப்புக் கொண்டன.  ஆறு ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக கபில் சிபல் கூறினார்.  பிரஷாந்த் பூஷனின் கருத்து “கூட்டத்தின் முடிவு திருப்தி அளிப்பதாக இல்லை.”

 

வேறுபாடுகள் என்னென்ன?
மக்கள் பிரதிநிகளின் கருத்து : ‘லோக் பால்’ வெளிப்படையான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.  விசாரணை பற்றிய அனைத்து ஆவண ஆதாரங்களையும் இறுதியில் மக்களின் பார்வைக்காக ‘லோக் பால்’ இணையத் தளத்தில் வெளியிடப்படும்.  கீழ் காணும் பதவியில் இருப்போரின் மீது விசாரணை அல்லது கைது நடவடிக்கை எடுக்கும் முன்பாக ஏழு உறுப்பினர் அடங்கிய லோக் பால் அமர்விடம் அனுமதி பெற வேண்டும்.
அ) பிரதம அமைச்சர் மற்றும் மற்ற மத்திய அமைச்சர்கள்
ஆ) உச்ச மற்றும் அனைத்து உயர் நீதி மன்ற நீதிபதிகள்.
இ) அனைத்துப் பராளுமன்ற உறுப்பினர்கள்.

அனால் அரசுத்தரப்பு உறுப்பினர்கள் இக்கருத்திலிருந்து வேறுபட்டனர்.  பிரதமர் நீங்கலாக மற்ற அனைவரும் ‘லோக் பால்’ ன் அதிகாரத்திற்குள் அடங்குவர் என்பது இவர்களின் கருத்து.

நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation [CBI]) மற்றும் நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (Central Vigilance Commission [CVC]) ஆகிய நடுவண் அரசு அலுவலகங்கள் ‘லோக் பால்’ உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது ஹசாரே குழுவின் கருத்து.  இதற்கு மாறுபட்ட கருத்தை கபில் சிபல் வெளியிட்டார்.

இப்போது நகைச்சுவையான சில விஷயங்களை கூற விரும்புகிறேன்!

 

கபில் சிபலின் கருத்து : “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ‘லோக் பால்’ன் அதிகார எல்லைக்குள் வருவது தவிர்க்கப் பட வேண்டும்.”  மிகத் தெளிவாக அரசியல்வாதிகளை பாதுகாக்கிறார்!  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்யும்போது அதனை விசாரித்து தண்டனை வழங்கவே ‘லோக் பால்’ உருவாக்கப்படுகிறது.  இவர்கள் என்ன மேகம் விட்டு மேகம் தாவிய போது தடுக்கித் தடுமாறி கீழே விழுந்தவர்களா என்ன?  இவர்களும் பாரத சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தானே?  மக்கள் தானே தேர்ந்தெடுத்தார்கள்? ஏன் இவர்களை கேள்வி கேட்கக் கூடாது?

“இந்தியாவில் நடுவண் அரசுக்கு இணையான ஒரு அரசியல் அமைப்பை ஏற்ப்படுத்த முயல்கிறது ஹசாரேவின் குழு!” – கபில் சிபல்.  அமைச்சர் அவர்களே, உங்களால் நடத்தப்படும் அரசும், அதன் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பிற அரசியல்வாதிகளும் ஊழலில் ஊறித் திளைத்தால், இணை அரசாங்கம் ஏற்பவது நியாயமான ஒன்று.  ஏன் எதிர்கிறீர்கள்?  இதுவரை செய்த ஊழல் எல்லாம் தோண்டி எடுக்கப்படும் என்பதாலா? அல்லது இனி எந்த ஊழலும் செய்ய முடியாது என்பதாலா?

“உயர் நிலை அரசு அதிகாரிகள் மட்டுமே ‘லோக் பால்’ன் அதிகார எல்லைக்குள் இருப்பார்கள்” – கபில் சிபல்.  அமைச்சர் அவர்களே, ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்துள்ள ஊழலில் எல்லாம் அமைச்சர்கள் “எனக்கு ஒன்றும் தெரியாது.  எல்லாம் இந்த அதிகாரிகள் செய்த வேலை.  இப்போது, நான் மாட்டிக் கொண்டேன்” என அறிக்கை விடுகின்றனர்.  மிகுந்த சிரமத்துடன் கல்வி பயின்று, தன் திறமையைக் காட்டி, தேர்வுகளில் வெற்றி பெற்று, நாட்டுக்காய் சேவை செய்யும் அதிகாரிகளை மட்டும் ஏன் பலிகடா ஆக்குகின்றீர்?  அமைச்சர்கள் என்றுமே அதிகாரிகளை நிர்பந்தித்தது இல்லையா? அவ்வளவு நல்லவர்களா நீங்கள்?

அரசுத் தரப்பில் தரப்பட்ட வரைவில் உள்ள ஒரு முக்கிய அம்சம் : “ஊழல் குற்றம் நிரூபணம் ஆனால், குற்றவாளிக்கு ஆறு மாதம் வரை சிறை.  பொய்க் குற்றச்சாட்டு செய்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை.”.  No Comments!

இந்நிலையில் வீராவேச அறிக்கை வேறு!  “அன்ன ஹசாரேவின் போராட்டத்தை, காந்தியடிகள் நடத்திய சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிடுவதா?  தவறு.    அன்னா ஹசாரே, ஒரு விளம்பரப் பிரியர், ஏமாற்று வேலை செய்பவர், மதவாத சக்திகளுடன் தொடர்புடையவர்!”

அமைச்சர் கபில் சிபல் தன் இருக்கையில் இறுமாப்பாய் சாய்ந்தபடி, மற்றவர்களை விமர்சிப்பதை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது, எரிச்சல் தான் மிகுகின்றது.  “நான் தான் ஞானி.  மற்றவர்கள் எல்லாம் ஒன்றும் அறியாத மூடர்கள்!” என்று சொல்லும் விதமான ஒரு உடல் மொழி!

வேறு வழி இல்லை ஐயா!  இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தான்!  உங்களைப் போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து இந்தியாவை விடுவிக்க வேறு வழி இல்லை.

 

 

 

 

 

 

படங்களுக்கு நன்றி :

http://www.indiatogether.org/legislation/images/2005/law-lokpal.jpg
http://cmpaul.files.wordpress.com/2011/01/expose-corruption.jpg
http://www.newsreporter.in/wp-content/uploads/2011/05/Anna-Hazare-Lokpal-Bill.jpeg
http://www.indiavision.com/news/images/articles/2011_05/192805/u8_LOKPAL-BILL.jpg
http://photo.outlookindia.com/images/gallery/20110602/lokpal_bill_20110613.jpg
http://www.ndtv.com/news/images/annapanel295.jpg
http://www.allaboutindia.org/wp-content/uploads/2010/01/Kapil-Sibal-300×240.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஜன் லோக் பால் – வரைவு மசோதா – அரசு ஆடும் கண்ணாமூச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *