இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(118)
–சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
ஒரு நாட்டின் சரித்திரத்தோடு அதன் கலாச்சாரப் பாரம்பரியம் மட்டும் பின்னி இருப்பதில்லை.
பல சமயங்களில் ஒரு நாட்டின் பிரசித்தி பெற்ற தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள், அந்நாட்டின் இலக்கியப் பிரசித்தி வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் எனப் பலவகையானவைகளும் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும்.
ஒரு பிரசித்தி வாய்ந்த பொருளின் பெயரைக் குறிப்பிட்டவுடன் அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று கூறிவிடுவார்கள். அந்நாட்டின் முகவரிகளுள் அதுவும் ஒன்றாகி விடுகிறது.
அதேவகையில் நான் புலம்பெயர்ந்து இன்று எனது வாழ்புலமாகி விட்ட இங்கிலாந்தும் தனக்கேயுரிய பாணியில் பலவற்றினோடு தனது நாட்டின் பெருமையைத் தக்க வைத்துள்ளது எனலாம்.
குறிப்பாக வில்லியம் ஷேக்ஸ்பியர் என்று குறிப்பிட்டதுமே அவரை இங்கிலாந்துடன் தொடர்பு படுத்துவது அவ்விருவருடைய தனித்துவத்தையும் குறிப்பதாகிறது.
ஆனால் இன்றோ தாயரிப்புகளில் கண்டுபிடிப்புகளில் முன்னனி வகித்த இங்கிலாந்து தேசத்தின் “உற்பத்திப்” பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது. அதனுடைய முழுப் பொருளாதார அடிப்படையும் நிதி அடிப்படையிலும், சேவைகளின் அடிப்படையிலுமே அமைந்துள்ளது.
அதுசரி சக்தி இந்த மடலின் வழியே எங்கே இழுத்துச் செல்கிறான் ? என்றொரு கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கை..
மிகவும் சுவையான செய்தி ஒன்றைச் சமீபத்தில் அறிந்தேன், அதைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலேயே உங்களுடன் இந்த மடலுடனான உறவாடல்.
“ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) “ எனும் காரைப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருப்பீர்கள்.
இன்றைய வியாபார உலகில் ஒரு பழைய ஆஸ்டன் மார்ட்டின் காரின் விலையே சுமார் 50 இலட்சத்திற்கு மேலேயே போகும்.
அது சரி இந்தக் காரின் பூர்வீகம் தான் என்ன ?
இங்கிலாந்தின் பக்கிங்கம்ஷ்யர் எனும் இடத்திற்கு அருகில் உள்ளதே இந்த ஆஸ்டன் ஹில் எனும் பகுதி. இப்பகுதியின் இயற்கை வனப்பை மிகவும் ரசிக்கும் லயனல் மார்ட்டின் என்பவர், தாம் விற்பனை செய்யும் சிங்கர் எனும் ஓட்டப்பந்தயக் காரை இப்பகுதியிலேயே பரீட்சார்த்த ஓட்டம் செய்து பார்ப்பார். அவரும் அவரது நண்பரும் இணைந்து ஒரு விரைவுக் காரைத் தாயாரிக்க முடிவு செய்தார்கள்
அவர்கள் தயாரித்த காருக்கு திரு மார்ட்டின் அவர்கள் மிகவும் ரசிக்கும் ஆஸ்டன் ஹில் பகுதியின் முதற்பெயரான ஆஸ்டனையும் திரு மார்ட்டின் அவர்களது பெயரான மார்ட்டின் என்பதனையும் இணைத்து “ஆஸ்டன் மார்ட்டின்” என்று பெயரிட்டார்கள்.
அதுவே பின்பு மிகவும் பிரசித்தி பெற்ற மோட்டார் கார் ஆகியது. அதன் பிரபல்யத்தை அதிகமாக்கியது “ஜேம்ஸ்பாண்ட்” படங்களில் ஜேஸ்பாண்டுக்கு மிகவும் பிடித்தமான மோட்டார் காராக அக்கார் இடம்பெற்ற காரணமே !
இது லண்டனில் 1913ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது உலகப் போரின் போது லயனல் மார்ட்டினும் அவரது பங்குதாரராரும் நண்பருமான பாம்போர்டு என்பவரும் இங்கிலாந்து இராவணுத்தில் இணைந்தார்கள்.
முதலாவது உலகமகாயுத்தம் முடிந்ததும் இந்தக் கம்பெனி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வித்தியாசமான மாடலில் ஆஸ்டன் மார்ட்டின் தயாரிக்கப்பட்டது.
இன்றும் அதிகூடிய விலையுயர்ந்த கார்களின் மத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக்காரின் பிறப்பின் ரகசியம் இதுதான்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan