34. அருங்காட்சி​யகம் ஓர் அறிவுக் கருவூலம்!

0

 யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

சுபாஷிணி ட்ரெம்மல்​

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வின்கலங்களில் ஒன்றின் பெயர் கெப்லர்-22பி. வின்வெளி ஆராய்ச்சியில் புதிய தடம் பதித்து புதிய பாதையை வகுத்த ஜெர்மானியரான யோஹான்னஸ் கெப்லரின் ஞாபகார்த்தமாகவும், அவரது ஆய்வுகளைச் சிறப்பிப்பதற்காகவும் பூமியைப் போல ஏனைய வின்மீண்களைச் சுற்றி வரும் ஒரு வின்கலனுக்குக் கெப்லரின் பெயர் வழங்கப்பட்டது.

 k5

யோஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்தில் அவரது உருவச் சித்திரத்துடன் (ஜூலை 2014)​

இத்தகைய சிறப்பு பெறும்  கெப்லர் யார் என்பதை அறிய நமக்கு ஆர்வம் இருக்கும் அல்லவா? அதனை அறிந்து கொள்ள இன்றைய அருங்காட்சியகப் பதிவில் உங்களுக்கு  நான் அறிமுகப்படுத்தவிருப்பது ஜெர்மனியின் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமமான வைல் டெர் ஸ்டாட் மாநிலத்தில் இருக்கும் யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகமே. இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களுக்காகத் திறக்கபப்ட்டிருக்கும். ஆகையால் அருங்காட்சியக வலைப்பக்கத்தில் திறக்கும் நேரத்தை அறிந்து இங்கு சென்று வருவது நல்லது.

கணித மேதை, வின்வெளி ஆய்வாளர் என்ற சிறப்புக்களுக்கு மட்டும் உரியவரல்ல கெப்லர். வானியல் ஆய்வில் மிக முக்கிய திருப்பு முனையை வழங்கிய மூன்று கோட்பாடுகளைத் தனது ஆய்வின் தெளிவாகக் கண்டு உலகுக்கு வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. 1609 லிருந்து 1619 வரையிலான காலகட்டங்களில் இவர் வெளியிட்ட மூன்று வானவியல் ஆய்வுக் கோட்பாடுகள் இத்துறை ஆய்வுகளுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தன. இது மட்டுமல்லாது. கணிதத்துறையிலும் வெவ்வேறு பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரைப் பதித்த ஒரு பன்முக ஆளுமை யொஹான்னஸ் கெப்லர்.

 k4

​யோஹான்னஸ் கெப்லரின் கண்டுபிடிப்பு – டெலிஸ்கோப் (ஜூலை 2014)

யோஹான்னஸ் கெப்லர் பிறந்து வளர்ந்த கால கட்டத்தில் அறிவியல் உலக ஆய்வாளர்கள், ஏனைய கோள்கள் அனைத்தும் பூமியைச் சுற்றி வருவன என்ற சிந்தனையைக் கொண்டிருந்தனர். சூரியனை மையமாக கொண்டு  இயங்குவது இந்த வான்வெளி என்ற சிந்தனை அப்போது பிறக்காத காலம். இந்த காலகட்டத்தில் தான் கெப்லர் தன் ஆய்வின் வழி, பூமியோடு ஏனைய கோள்களும் சூரியனைத் தான் சுற்றி வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்தவர் என்பதை நிச்சயம் நாம் நினைவு கூற வேண்டும்.

இந்தச் சிந்தனையை முன்வைத்து அறிவியல் ஆய்வு உலகத்தை ஏற்க வைப்பது என்பது மிகச் சாதாரண விஷயம் அல்ல.. அதிலும் அந்த 17ம் நூற்றாண்டில்! ஆயினும் தனது விடா முயற்சியாலும் கடுமையான தொடர் ஆய்வுகளின் வழியாகவும் நிறைந்த சான்றுகளின் வழியும் இந்த உண்மையை உலகுக்குப் புலப்படுத்தினார் கெப்லர்.  இது மட்டுமன்று. கோள்கள் சூரியனைச் சுற்றி பயணித்துச் செல்லும் பாதை  முழுமையான வட்ட வடிவ பாதையல்ல என்ற உண்மையையும் தன் ஆய்வுகளின் வழி கண்டறிந்து நிறுவிய பெருமையும் கெப்லரையே சாரும்.

k3

கெப்லரின் ஆய்வுக் குறிப்புக்கள் அடங்கிய நூல் 17ம் நூற்றாண்டு வெளியீடு

வைல் டெர் ஸ்டாட் ஒரு பசுமை அழகு நிறைந்த ஒரு  சிறு கிராமம். இக்கிராமத்தில் 1571ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் நாள் யொஹான்னஸ் கெப்லர் பிறந்தார். வருமையான குடும்ப சூழலில் வளர்ந்தவர் திரு.கெப்லர். இளம் வயதிலே கல்வியில் நல்ல ஆர்வம் உள்ளவர் இவர். அருகாமையில் இருக்கும் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க இவருக்கு  உபகாரச் சம்பளம் கிடைத்தது. இந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையின் போது நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் அவர்களின் ஆய்வுக் குறிப்புக்களையெல்லாம் ஆர்வத்தோடு படித்து கோள்களைப் பற்றிய ஆய்வுகளில் தம்மை தீவிரமாக இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.

​1596ம் ஆண்டில் கெப்லர் தனது மு​தல்  ஆய்வுப் படைப்பை முன் வைத்தார். இது காப்பர் நிக்கஸ் கட்டளை தொடர்பான ஒரு ஆய்வு. இது ஜெர்மனியில் மட்டுமன்று, ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் மார்ட்டின் லூதர் ஏற்படுத்தி விட்டிருந்த பயங்கர கருத்தலைக ​ள்​ எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1539ம் ஆண்டில் தான்  மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மதத்திதிற்கு எதிரான தனது கருத்துக்களை வெளியிட்டார். அக்கால கட்டத்தில் லூதருக்கு ஆதரவாக டேனீஷ் அரசு செயல்பட்டத்து. லூதரின் கருத்துக்கள் பரவ குழுக்கள் ஆங்காங்கே உருவாகி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.  மார்ட்டின் லூதரின் புதிய கருத்தாக்கம் உருவாக்கிய சிந்தனை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாது தத்தளித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க மத ஆதிக்க சக்திகள் கெப்லர் அடுத்தடுத்து ​வெளியிட்ட கண்டுபிடிப்புக்களை ஏற்றுக்கொள்வதில் ​த​டைகளை முன் வைத்தன என்ற போதிலும் ஆய்வுத் திறமையினால் ஏனைய ஆய்வாளர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராகத் திகழ்ந்தார் கெப்லர்​.

k2

​ட்யூபிங்கன் கிராமம் – கோப்பர்னிக்கஸ் உருவச் சித்திரம்

இந்தக் காலகட்டத்தில் தான் மூலிகை மருத்துவத்தில் ஈடுபட்டு மக்களுக்கு நோய் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட உழைத்த அறிவார்ந்த முறையில் செயல்பட்ட பெண்களை  Witches  என்று சொல்லி அவர்களை உயிரோடு எரிக்கும் கொடூரமான ஒரு பழக்கமும் ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது. கெப்லரின் தாயாரும் இப்படி ஒரு விட்ச் என்று அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்னிலை எழுந்தது என்பதும் ஆச்சரியமான ஒரு உண்மை. அவருக்கு என்ன நேர்ந்தது.. கெப்லரின் கண்டுபிடிப்புக்கள் .. அவரது குடும்ப வாழ்க்கை, பயணங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *