தாள்பணிந்து நிற்போமே!

-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

      தனிமையை நாடிநாளும்
      தன்னிலை இழந்துநின்று
      பெரியனாய் உயர்ந்துநின்றார்             ramakrishna
      பெருமகன் ராமகிருஷ்ணர்!

      மனைவியைக் கண்டபோதும்
      மனதினை விட்டிடாமல்
      துணிவுடன் துறவையேற்றார்
      தூயவர் ராமகிருஷ்ணர்!

      அன்னை பராசக்தியாக
      அவர்கண்டார் தம்மனையை
      ஆதலினால் பரமஹம்சர்
      அதியுயரப் போய்விட்டார்!

      முன்னமவர் அன்னையினை
      முழுதுமாய் கண்டதனால்
      அன்னவரின் எண்ணமெலாம்
      அன்னையாய் இருந்ததுவே!

      ராமகிருஷ்ண பரமஹம்சர்
      நாளும்காளி கோவில்நின்று
      ஊணுமின்றி உறக்கமின்றி
      உண்மைகாண உணர்விழந்தார்!

      பாரதத்தாய் மடியில்வந்த
      ராமகிருஷ்ண பரமஹம்சர்
      பாரினுக்கு விடிவுதரும்
      பகலவனாய் ஒளிகொடுத்தார்

      படிப்பறியாப் பரமஹம்சர்
      படிப்படியாய்ப் படிப்பித்தார்
      படிப்பித்த பாடமெலாம்
      பாரினுக்கு வேராச்சு!

      வேராக அவர்நின்றார்
      நீராக அவர்நின்றார்
      ஊரூராய் அவர்வார்த்தை
      உருவேற்றி நின்றதுவே!

     சீடர்பலர் வந்தார்கள்
     சீலத்தைக் காட்டிநின்றார்
     ஞாலமெலாம் அவர்புகழை
     நாளுமவர் பரப்புகிறார்!

    ஆல விருட்சம்என
    அவர்தொண்டு விரிகிறது
    சீலமுடை ராமகிருஷ்ணர்
    தாள்பணிந்து நிற்போமே!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க