கே. ரவி

 

[ஒரு சொல் போதும் ஒரு பாடல் பிறக்க. ‘உலகெலாம்’ என்று இறைவனே ஒரு சொல் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்து பெரியபுராணக் காவியமே உதித்தெழவில்லையா? அப்படிப் பலமுறை ஒரே சொல் என் நெஞ்சில் பாடல் ஊற்றெடுக்க வைத்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னால், சபரி மலையில் இருந்து இறங்கிப் பம்பைக் கரையில் என் குழுவினரோடு நடந்து வரும் போது, ஒலிபெருக்கியில் யாரோ இருவர் பேசிக் கொண்டது சத்தமாகக் கேட்டது. “என்ன நராஜகோபால் அண்ணாச்சி வரலியா?” “சாமி, அண்ணாச்சி பழனிலே இருக்கார்.சாயந்தரம் புறப்பட்டு வரார்.”

அண்ணாச்சி பழனியிலே என்ற சொல் போதும். அப்பொழுதே, என் குழுவினரோடு பாடிக் கொண்டே திரிவேணி பாலத்தை அடைந்தேன். நீங்களும் இங்கே சொடுக்கிக் கேட்கலாம்.]

download

அண்ணாச்சி பழனியிலே தம்பி அத்வானக் காட்டினிலே

ஒண்ணாக வைத்துக் கொண்டாடுவோம் ரெண்டு கண்ணாக வீட்டினிலே

புள்ளி மானத் தேடி வேட்டைக்குப் போயி

வள்ளிமானக் கொண்டுவந்தான் – அண்ணங்காரன்

வள்ளிமானக் கொண்டுவந்தான்

புலிப்பால் தேடிக் காட்டுக்குப் போயி

புலிமேல் ஏறிவந்தான் – சின்னத்தம்பி

புலிமேல் ஏறி வந்தான்

கோவத்தி லேவெறுங் கோவணத் தோடே

குன்றேறி நின்று கொண்டான் – அண்ணங்காரன்

குன்றேறி நின்று கொண்டான்

யோகத்தி லேதவக் கோலத்தி சபரி

மலைமேல் அமர்ந்துகொண்டான் – மணிகண்டன்

மலைமேல் அமர்ந்துகொண்டான்

காமனை எரித்த கண்ணில் இருந்து

கனல்வடி வாயுதித்தான் – கந்தசாமி

கனல்வடி வாயுதித்தான்

மோகினி சுதனாய் அவதரித் தேநம்

மோகம் எரித்திடுவான் – ஐய்யப்பன்

மோட்சம் அளித்திடுவான்

‘சரவண பவ’வெனும் மந்திரத் தில்வேத

சாரம் உரைத்திடுவான் – வேதாந்த

சாரம் உரைத்திடுவான்

சரணமென் றேமனம் உருகி யழைத்தால்

தரிசனம் தந்திடுவான் – ஐய்யப்பன்

‘தத்வமஸி’ என்பான்.

1 thought on “அண்ணாச்சி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க