கே.ரவி

கவிதையை வரவேற்க இயற்கையே கைகட்டிக் காத்திருக்கும் என்பதுபோல் பேசிவிட்டாயே! யாரோ முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. ஏன் அப்படி நடக்காதா அல்லது நடக்கக் கூடாதா? கவிதையே பராசக்தியின் ஊஞ்சல்; அவள் அமர்ந்து உலாவரும் சிவிகை அல்லது பல்லக்கு. இது உண்மையானால், அவளே கவிதையின் ஊற்றுக்கண் என்பது சரியென்றால், ஒரு கவிதை வரும் போது இயற்கை கைகட்டிக் கொண்டு நின்று வரவேற்றுத்தானே ஆக வேண்டும். என் இனிய நண்பன், கவிஞன் பா.வீரராகவன் எந்த அரங்கத்தில் என்ன கவிதை படித்தாலும், அதற்கு முன்னால் தன் கவிதை ஒன்றைக் கட்டாயம் சொல்லுவான்.

மனமாரச் சொன்னகவி எல்லாம்ar
மன்றத்தில் புகழ்கொள்வ தில்லை
எனதானால் இக்கணமே வீழும் – அன்றி
உனதானால் எந்நாளும் வாழும்
எனதில்லை உனதென்றே அர்ப்பணித்தேன்
நின்னருள் நின்செயல் நின்கடனே

கவிதைகளைச் செய்பவளும், கவிதைக்காக ஏங்கும் நெஞ்சங்களில் கவிதை வெள்ளம் பெய்பவளும், சில காதல் நெஞ்சங்களைத் தோட்டங்களாக்கி அங்கே கவிதை மலர்கள் கொய்பவளும், கனவுத் தறியில் கவிதை இழைகள் நெய்பவளும் …..! எல்லாம் அவளே. அவள்தானே இயற்கையன்னை, பராசக்தி.

அவள் கவிதைச் சிவிகையில் அமர்ந்து வரும் நேரம், கவிதை வரும் நேரம் …..!

கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்
கனவுகளும் நினைவுகளும் கலந்துதடு மாறும்
கவிதை வரும் நேரம் இது கவனம்மிக வேண்டும்
கருத்தில் ஒரு நெருப்புமலர் கட்டவிழும் நேரம்
கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

மலருதிரும் ஓசையிலும் மனமதிரும் நேரம்
மதகுடைய வேண்டியொரு நதிபுரளும் வேகம்
மண்மரகதங்களும் விண்ணதிசயங்களும்
பண்வடிவம் ஏற்கத் தவம் செய்யும் கோலம்
கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

சுவர்க்கோழி சில்வண்டு ஸ்ருதிசேர்ப்ப தைக்கண்டு
சிரக்கம்பம் செய்யும் சிறுதென்னம் பாளை
புதிதாக வருகின்ற பூந்தென்றல் காற்றுக்குச்
சதகோடி விண்மீன்கள் மாலை மரியாதை
கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

தவிக்கின்ற நெஞ்சத்தில் தணலாய் எழுந்து – பசுந்
தளிர்க் கரங்களில் பனித் துளியாய்ப் படர்ந்து
கவிழ்கின்ற மேகங்க ளுக்குள் கலந்து
சிரிக்கின்ற தேயொரு கவிதைக் கொழுந்து
கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

கவிதையைச் சுமந்து வரும் பூந்தென்றல் காற்றுக்குச் சதகோடி விண்மீன்கள் மாலையிட்டு மரியாதை செய்யுமாமே!

இதற்குக் காரணம் என்ன? கவிதை உதிக்கும் கணத்தில், ஓர் அதிசயம் நடக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் அந்த அதிசயம் நடக்கும் போதுதான் கவிதை உதிக்கிறது. அது என்ன அதிசயம்?

இந்த உடற்கூட்டுக்குள் அடங்க மறுத்து, இந்த உலக எல்லைகளையும் ஏற்க மறுத்து, எல்லையற்ற வானமாய்த் தானே விரியத் துடிக்கும் ஆதங்கம், பிடிவாதம், வெறி, நெஞ்சில் உண்டாகி, அது மிகும் போது, அதன் கனம் தாங்காமல், நினைவுக்குமிழ் வெடித்துச் சிதற, அதனால் மிக லேசாகி, ஒரு விடுதலை உணர்வோடு அந்த உயிர்த்துடிப்பு உயர உயரப் பறந்து செல்கிறது. ஏதோ ஓர் உயரத்தில், முன்பு யாரோ ஒரு மஹாகவியின், அல்லது, மஹரிஷியின் சங்கல்பத்தில் உருவாகி, ஏதாவது ஓர் உயிர்த்துடிப்பு வந்து தன்னைப் பற்றிக் கொள்ளாதா என்று காத்துக் கொண்டிருக்கும் சலன அலைகளை அது சந்திக்க நேரிடலாம். அந்தச் சந்திப்பே ஒரு யுகசந்திப்பு. அந்தச் சந்திப்பே ஒரு சங்கமம் ஆகும் போது, அந்தச் சங்கமத்தில் ஜனிப்பதுதான் உயர்கவிதை. அப்படியோர் யுகசந்திப்பின் சங்கமத்தில் ஜனித்து வரும் ஒரு மகத்தான கவிதையின் பிறப்பை உலகமே, இயற்கையே ஒரு மாபெரும் வைபவமாகக் கொண்டாடுகிறது. இதுதான் கவிதையின் ஜனன ரகசியம்.

என்னய்யா கதையளக்கிறாய்? இதை யார் சொன்னது. யாரா? கவிதைதான். கவிதையே தன் ஜனன ரகசியத்தை எனக்கு அறிவுறுத்தியது.

வெறிகொண்டு விட்டேன் கவிதை வெறி கொண்டு விட்டேன்
நர்த்தனச் சொற்களில் நானுலா போகவும்
நடனமே நடையாகவும் – விழி
மத்தளம் கொட்டி வியப்பிலே மூழ்கவும்
மீண்டும் மீண்டும் பாடவும்
வெறிகொண்டு விட்டேன்
துரிதகதியில் மனம் துணிவு பெறவும் நடை
துவளாத லயம் சேரவும்
பரிதியுதயம் வெண் பனியில்நிகழும் தனிப்
பரவசம் உருவாகவும்
சிறிதுசிறிதாய் இழை பிரியுமுணர்வே ஒரு
சித்திரத் தறியாகவும்
சிந்தனைக் குள்ளே சிறகடிக்கும் வண்டுயிர்ச்
சங்கிலே நின்றூதவும்
வெறிகொண்டு விட்டேன்
வானைப் பிளக்கும் வைரக் கரங்கள்
இடிமுழக்கம் செய்வதாய் – அலை
வாரித் தெறிக்கும் கடல்திகைக் கும்படி
வார்த்தைப் பிரளயம் நிகழ்வதாய்த்
தேன்பிலிற்றும் சொற்களுக்குள் – ஒளித்
திகிரியே உருகி விழுவதாய் – அண்டக்
கோளமெல்லாம் குலைநடுக்கத்துடன் நேர்க்
கோட்டிலே வந்து நிற்பதாய்ப்
பாட்டிலே என்மனக் கூட்டிலே பலகோடி
வீணைகள் தாமே ஒலிசெய்வதாய்
ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வரமாகவே விண்
மீன்களெல்லாம் நின்றதிர்வதாய்த்
திமிர்பிடித்த யானை சிறகெடுத்துப் பறக்கும்
தினவிலே எக்காளக் கனவிலே
சுக்கு நூறாக வெடித்துச் சிதற
வெறிகொண்டு விட்டேன்
கனவுகளாய் மனவாசல் தோறும்
சிதறிக் கிடக்கிறேன்
படிக்க முயன்றால் பறந்து விடுவேன்
பணிந்து கேட்கிறேன்
காலடி ஓசை கேட்டால் கூட க்
கலைந்து போய்விடுவேன் – மூச்சுக்
காற்றில் பாதை அமைத்தால் உள்ளே
நுழைந்து வளர்ந்திடுவேன்

எப்படியிருக்கிறது கதை! புத்தி சிகாமணி எதுவுமே பேசாமல் உம்மென்று இருக்கிறானே! அவன் கூட தியானத்தில் இருக்கிறானோ!

இப்படிக் கவிதை வெறி ஒருபுறம். வக்கீல் தொழில், குடும்பம், காதல் மனைவி, மறுபுறம். இழுபறிதான். ஆனால், ஷோபனா அடிக்கடி ஒன்று சொல்வாள். அவள் மேல் எனக்குள்ள காதலே, என் அக எழுச்சிக்கு, அதாவது, கவிதை வானில் மென்மேலும் சிறடித்துப் பறப்பதற்கு ஒரு தடையாகி விடக் கூடாது என்பதே அவள் கவலை. மேலே கண்ட கவிதையை நான் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன், என்னுடைய 25-ஆவது பிறந்த நாளன்று, சரியாகச் சொல்வதென்றால், அதற்கு முதல்நாள் மாலை, 12-01-1978 மாலை, அவள் இந்தக் கவலையை ஒரு கவிதையாகவே ஆங்கிலத்தில் வடித்துத் தந்தாள்:

It’s a long time since I wrote to you
In the words of song and honey dew
But now my Love lends to my words
The lilt of life and song of birds

In the rush of time I wonder most
What made me worth your heart as host;
Though I may stumble, every time
You straighten me with thoughts sublime

What bade you bear my wounds and woe?
What shade of rest do I give you?
For every frown upon my face,
Why should your heart pound twice apace?

Let not Love be your tragic flaw
As blessed muse I speak this law
The gale of Life may lash me down
You stay away, do not be blown

You wear a halo round your crown
Don’t crowd it with a worldly frown
As blessed Muse I speak this law
Let not Love be your tragic flaw

இந்தக் கவிதையை நான் எப்படித் தமிழாக்கம் செய்வேன்?

உனக்குநான் எழுதி வெகு நாட்களாயின
பாடற் சொற்களைத் தேனில் நனைத்து
இன்றென்
காதலே சொற்களுக்குக் கொடை வழங்கியது
உயிர்த்துடிப்பும் பறவையின் கானமும் குழைத்து
இப்படித் தொடங்கி வளர்ந்த அந்தக் கவிதையில் இரண்டு வரிகள் அமர வரிகள்.

“காதலே உன் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகிவிட வேண்டாம்; அருள்பெற்ற வாணியாய் இந்த விதிசெய்கிறேன்”

மன்னிக்கவும். அந்த ஆங்கிலக் கவிதையை அப்படியே மொழிபெயர்க்க முடியவில்லை. தோற்றுவிட்டேன். வேறு சொற்களில் அடைபட மறுக்கும் அதன் ரெளத்திரத்தை நான் மதிக்கிறேன். கவித்திறத்தை மிஞ்சிய அதன் பவித்திரத்தை நான் வணங்குகிறேன்.

அடாடா, எனக்கு எல்லாமே கவிதைதானா? ஆம், பள்ளியில் கவிதை, பத்திரிகை நடத்தினால் கவிதை, காதலில் கவிதை, களித்தால் கவிதை, கவலைப் பட்டாலும் கவிதை, திரைப்படம் எடுத்தால் கவிதை, நாடகம் போட்டால் கவிதை ….

“இரு, இரு! கொஞ்சம் பொறு அப்பா. நாடகம் போட்டால் என்று பள்ளி நாடகத்தைத்தானே சொல்கிறாய்?” கேள்வி எழுகிறது.

பள்ளியில் போட்ட நாடகத்தைச் சொல்லவில்லை. திருமணம் ஆன பிறகு ஒரு நாடகம் போட்டோம். அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன் (34)

  1. Ravi,  intha muRai kaiththattalum,pArAttum shobanuvukku..

    Unakkuth thaniyAka aNNAchchi pazhaniyilE pAttokkuk kaiththattal uNdu..

    Su.Ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *