கே. ரவி

கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது என்றா கேட்டேன்? எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும் போதே, தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் சொன்னது நினைவு வந்தது. நான் எழுதிய முதல் கவிதையே “அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்” என்றுதானே தொடங்கியது? அதை அடுத்து நான் எழுதிய கவிதை, “வேலவனின் வேலினிலே விளங்கி நிற்கும் செந்தமிழே” என்றுதானே அமைந்தது? அப்படியென்றால், அப்பொழுதே என் நெஞ்சில் கடவுள் நம்பிக்கை வேரூன்றியிருந்ததே! நடுவில் நான் சிறிது தடுமாறி விட்டேனோ?

இப்பொழுது நினைத்துப் பார்த்தால், அதன் காரணம் சற்று விளங்குகிறது. தமிழ் சரியாக எழுதத் தெரியாத காரணத்தால் வகுப்பில் நேர்ந்த அவமானம், என்னைச் சில மாதங்களுக்குள் தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு வளர்த்துவிட்ட கதையை முன்பே சொல்லி விட்டேன். இதனால், தமிழ், தமிழ் என்று ஒரு தாகம் என்னுள் ஊற்றெடுத்தது. அதே சமயத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் மிகவும் ஈடுபட்டேன். அந்த காலக்கட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர் கிளர்ச்சி எழுந்த அரசியல் வரலாறு நமக்குத் தெரிந்ததுதான். அந்தக் கிளர்ச்சியின் போது அதில் ஈடுபட என்னை ஊக்குவித்தவர் என் தமிழாசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன். வகுப்பில் அவர் ஆற்றிய வீர உரையால் தூண்டப்பட்டு, எங்கள் பள்ளி மாணவர்களைத் திரட்டிக் கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து ஊர்வலம் போனதும், கைவிரலைக் கீறி ரத்தக் கையெழுத்திட்டதும் நினைவுக்கு வருகிறது. அந்த ஈடுபாட்டின் காரணமாக, மொழிப்பற்றின் காரணமாக, அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய அரசியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டேன். 1967-ஆம் ஆண்டுத் தேர்தலில் அண்ணாவின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் பெரிதும் மகிழ்ந்தேன். பாவேந்தர் கவிதைகளும், பகுத்தறிவுப் பாசறை என்று பறைசாற்றிக் கொண்ட அரசியல் இயக்கமும் என் கடவுள் நம்பிக்கையைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விட்டன என்பதே சரி. அத்துடன், எதையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் தீவிரமும் சேர்ந்து கொண்டது. ஆனால், நான் எப்பொழுதும், கடவுள் மறுப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்ததில்லை. கடவுள் உண்டு என்று நிறுவ முடியாத நிலையில், எந்த அனுபவமும் எனக்கு அதற்கு உதவாத நிலையில், கடவுள் உண்டா இல்லையா என்று எனக்குத் தெரியாது, அப்படியே இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும் என்ற நினைப்புடன் சில காலம் இருந்து விட்டேன்.

இந்த காலக்கட்டத்தில்தான், சிந்தனைக் கோட்டத்தில் மாஸ் பிரேயர் என்ற கூட்டு வழிபாடு நடத்தத் தொடங்கியிருந்தோம். அதில் பக்திப் பாடல்கள் பாடுவோம். தெய்வம் உண்டா, இல்லையா என்று தெரியாது என்று சொல்லிக் கொண்டே நானும் அந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் தவறாமல் கலந்து கொண்டு, மிகவும் சிரத்தையோடு மற்றவர்கள் பாடல்களைப் பாடுவதோடு நானும் பக்திப் பாடல்கள் எழுதிப் பாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு வினோதமான நிலை.

அதன் பிறகு நான் தத்துவப் பாடம் படிக்கத் தொடங்கிய கதையை முன்பே சொல்லி விட்டேன். தத்துவ மேதைகளின் தர்க்கமும், வாதங்களும் என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தின. தெளிவான விடை கிட்டவில்லை. ஒருபுறம் இம்மானுவெல் கன்டின் வாதம், மறுபுறம் சங்கரரின் அத்வைதக் கொள்கை! நடுவில், ஏனென்றே தெரியாமல் என்னை ஈர்த்த விவேகானந்தரின் எழுச்சியூட்டும் எழுத்துகள்! ஒரே போராட்டம்தான்! எல்லாவற்றையும் விட, மஹாகவி பாரதியாரின் அதிதீவிரமான பக்திப் பாடலகளும், சக்திப் பாடல்களும் எனக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சி!

அப்போதுதான், என் வாழ்வில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன.

as2

ஷோபனாவின் தம்பி, அதாவது, அவளுடைய சித்தியின் மகன், அவளுடனேயே வளர்ந்தவன், 1981-ஆம் ஆண்டு திடீரென்று தன் வாழ்வை முடித்துக் கொண்டான். இன்றளவும் அதன் காரணம் தெரியவில்லை. இதனால், ஷோபனா மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாள். துயரம் ஒருபுறம் இருக்க, ஏன் இப்படி நடந்தது, என்ன காரணம் என்ற கேள்விகள் அவளை மிகவும் பாதித்தன. விடை கிடைக்காதா, இறந்த தன் தம்பிக்கு என்ன ஆயிற்று, யாராவது வந்து வெளிச்சம் காட்ட மாட்டார்களா என்று அவள் குழப்பத்திலும், விரக்தியிலும் மூழ்கியிருந்த போது, தொலைக்காட்சியில் விளையாட்டுத் துறை வர்ணனையாளராக இருந்த முரளி என்பவர் ஷோபனாவின் நிலையை அறிந்து, தனக்குத் தெரிந்த ஒருவரை மனோவசிய நிபுணர் என்று சொல்லி அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்தான் டாக்டர் நித்யானந்தம். அறிமுகம் ஆன சில நாட்களிலேயே அவரைத் தன் ஆன்மிக குருவாக ஷோபனா ஏற்றுக் கொண்டதோடு என்னையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு உடனே ஆன்மிக நாட்டம் ஏற்படவில்லை. இருந்தாலும், ஷோபனாவின் உள்ளூக்கத்தில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. அவள் சொன்ன செய்திகளை அலட்சியம் செய்யாமல் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன். ஷோபனா டாக்டரிடம் தீட்சை பெற்று விட்டதை என்னிடம் சொன்னாள். அவளுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த எழுத்தாளர் சு.சமுத்திரம், அனந்த பத்மனாபன் இருவருக்கும் டாக்டர் தீட்சை வழங்கியதை அறிந்தேன். எனக்கும் அப்படி ஓர் அனுபவம் நேரிடாதா என்ற எண்ணம் ஏற்பட்டது.

அன்று மாலையே, எப்பொழுதும் போல், வீட்டு மொட்டை மாடியில் சென்று காற்றாட அமர்ந்தேன். அப்படித்தான், காற்று வாங்கப் போய் நிறைய கவிதைகள் அவ்வப்போது வாங்கி வந்திருக்கிறேன். அன்று எப்பொழுதும் போல் அமர்ந்திருந்த என் கண்கள் தாமாக மூடிக் கொண்டன. ஏதோ ஒரு தியான நிலைக்கு யாரோ என்னை அழைத்துச் செல்வது போல் உணர்ந்தேன். சிறிது நேரத்தில், இதெல்லாம் வெறும் பிரமை என்று ஒதுக்கி விட்டுக் கண்களைத் திறந்த போதுதான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதைச் சொல்வதற்கு முன், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்லியாக வேண்டும்.

as3என் அண்ணன், அதாவது, என் சித்தியின் மகன், ஶ்ரீதர், மிகவும் தெய்வ பக்தி உள்ளவன். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்டுதோறும் சபரி மலைக்குச் சென்று கொண்டிருந்தான். நான் அப்போது சபரிமலைக்குச் சென்றதில்லை. என் குடும்பத்திலேயே, என் உடன்பிறந்த சகோதரர்களைக் காட்டிலும் ஶ்ரீதரிடம் எனக்கு நெருக்கமும் பாசமும் அதிகம். 1983-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ஒருநாள் அவன் என்னை மயிலையில் உள்ள ஷீர்டி சாயிபாபா கோவிலுக்குப் போகலாமே என்று அழைத்தான். பாபாவைப் பற்றிப் படித்திருந்தேன். அவருடைய எளிமைத் தோற்றம் என்னை ஓரளவு கவர்ந்திருந்தது. சரி போகலாம் என்று சொல்லி அவனுடன் சாயிபாபா கோவிலுக்குச் சென்றேன். அங்கே நான் எதுவும் பிரார்த்தனை செய்யவில்லை. வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருந்த போது, ஶ்ரீதர் என்னிடம் சாயிபாபா பற்றி ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டான். பார்க்கலாம் என்றேன். அத்துடன் விடாமல், “சங்கம்” என்ற ஹிந்திப் படத்தில் முகேஷ் பாடிய “தோஸ்த் தோஸ்த் நா ரஹா” என்ற பாடல் மெட்டிலேயே பாபா பற்றிய பாடல் அமைய வேண்டும் என்ற ஒரு விசித்திரமான விண்ணப்பத்தையும் வைத்தான். அவன் சொல்லி முடிக்கும் முன்பே, நான் மெல்லப் பாடத் தொடங்கி விட்டேன்: “சாயிராம் சாயிராம்” என்று, அதுவும் அவன் கேட்டுக் கொண்ட மெட்டிலேயே.

சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்

 

தாயின் கருணை சாயி ராம் – ஒளிas4

தவழும் வதனம் சாயி ராம்

நேய உணர்வு சாயி ராம் – என்றும்

நிலைக்கும் உறவு சாயி ராம்

 

தூய மனமுன் ஆலயம்

தீப ஒளியுன் ஆசனம்

தேகம் எடுக்கும் ஆணவம் – அதைத்

தடுக்கும் உன் அருட்கரம்

 

நீரும் நெருப்பும் சேருமோ – உன்

நிழலில் துயரம் தோன்றுமோ – உன்

பார்வை அழைக்கும் போது – மனம்

பாதை மாறிப் போகுமோ

 

சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்

இந்தப் பாடலைப் பாடும் போது என் கண்களிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர் கசிவதை உணர்ந்தேன். அதில் உள்ள சொற்கள் மெட்டுக்காகக் கோக்கப்பட்ட சொற்கள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

அடுத்த நாள், மீண்டும் ஶ்ரீதரும் நானும் சாயி பாபா கோவிலுக்குச் சென்றோம். திரும்பி நடந்து வரும்போது, ஶ்ரீதர் தன்னுடன் சபரி மலைக்கு வர முடியுமா என்று கேட்டான். யோசிக்கவே இல்லை. சரியென்று சொல்லி விட்டேன். நடந்து வரும் போதே, இன்னொரு பாடலையும் பாடினேன். ஆபோகி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் பல்லவி, பம்பை நதியில் விளக்குகள் மிதந்து செல்லும் காட்சியைப் பற்றி இருந்தது. சபரி மலைக்கு நான் சென்றதில்லை; பம்பை நதியைப் பார்த்ததில்லை; அதில் பக்தர்கள் விளக்குகள் மிதக்க விடும் செய்தியும் எனக்குத் தெரியாது. எப்படியோ பாடல் வந்தது:

பம்பையிலே செல்லும் தீபங்களே – எங்கள்AYYAPPA

நம்பிக்கையின் ஒளி ஓடங்களே

பம்பையிலே செல்லும் தீபங்களே

 

செந்தழல் போல்மேனி சீறும் புலியேறிக்

கைகளில் வில்லேந்திக் காவல்செய் யும்தீரம்

பந்தள ராஜன் மைந்தனைக் காண

வந்தவர் பிணிதீர்க்கும் புண்ய நதி தீர்த்தம்

பம்பையிலே செல்லும் தீபங்களே

 

நெய்யபிஷேகத்தில் நெஞ்சுருகாதா

கற்பூர தீபத்தில் கண்பனிக்காதா

ஐய்யனைக் காணும் தருணம் வராதா

ஆவலைத் தீர்த்து வைக்கும் ஆனந்த க்ஷேத்ரம்

 

பம்பையிலே செல்லும் தீபங்களே – எங்கள்

நம்பிக்கையின் ஒளி ஓடங்களே

பம்பையிலே செல்லும் தீபங்களே

[இந்தப் பாடலை என்னிசையில் நண்பர் ராஜகோபால் பாடியதைக் கேட்கச் சொடுக்கவும் —–]

அந்தப் பாடல் வந்த அடுத்த நாள்தான், டாக்டர் நித்யானந்தத்தின் ஆன்மிகப் பாதையில் சேரலாமோ என்ற நினப்பு எனக்கு ஏற்பட்டது. அன்றுதான், நான் மொட்டை மாடியில் சென்று அமர்ந்து கொண்டேன். த்யான நிலைக்கு யாரோ என்னை அழைத்துச் செல்வது போன்ற உணர்வை பிரமை என்று அலட்சியம் செய்துவிட்டுக் கண்ணைத் திறந்தால், அந்த மொட்டை மாடியின் சுவரின் மேல், ‘4’ என்ற வடிவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, ஒரு கிழவர் அமர்ந்திருந்தார். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால் அவர் அங்கே இல்லை. மாலை மயக்கமோ? திரும்பினேன், பின்னால் சுவரில் அதே கிழவர், வெள்ளைத் தாடி! மீண்டும் மறைந்தார். திரும்பினால், முன்னால் சுவர் மேல் மீண்டும் அவர், சாயி பாபாவேதான்! எனக்குச் சற்று பயமாக இருந்தது. ஆனால் உற்றுப் பார்த்தேன். அவர் முகம் மட்டும் கருப்பாக, டாக்டர் நித்யானந்தத்தின் முகச்சாயலில் தெரிந்தது. விரைந்து மாடியில் இருந்து இறங்கி வந்து விட்டேன். அது நடந்த சில நாட்களிலேயே நானும் டாக்டரின் ஆன்மிகப் பாதையில் சேர்ந்து விட்டேன்.

எப்படியோ, கடவுள் பற்று இல்லாமல் இருந்த நான், சபரி மலைக்கு வருவதாக ஶ்ரீதரிடம் வாக்களித்ததும், டாக்டரின் ஆன்மிகப் பாதையில் சேரும் முடிவுக்கு வந்ததும் ஒரே சமயத்தில் நடந்துவிட்டன. என் வாழ்வில் ஓர் அதிசயமான திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சிகள் அமைந்தன! அதன்பின் காற்றில் அடித்துச் செல்லப்படும் இலவம் பஞ்சு போல நான் வேகமாகப் பறந்து கொண்டிருந்தேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன் – பகுதி 38

  1. Dear Ravi,

    I will mail you two events that comes to my mind in connection with some experience sharing during those days:
    1. When  our meditations -yours on Sai n my GAYATHRI  had a cross impact during our sabari yathra

    2. Your chill feel experience n my relating it to a soundarya lahari( 20th slokas) where the inner manthiram  is GARUDA MANTHRAM N YOUR reply that when you told Doctor of this experience Doctor mystically smiling n replying you ” today is Garuda dharisanan in kanchpuram” – your puthir getting resolved..

    Su.Ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *