-செண்பக ஜெகதீசன்

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கு மதுவிளிந் தற்று.     (திருக்குறள்-332: நிலையாமை)

புதுக் கவிதையில்…

கூடிடும் கூட்டம் அவையில்          shenbaga jegadesan for kuthattu
கூத்தாடும் காட்சி காண,
கலைந்திடும் அதுவே
காட்சி முடிந்ததும்…

இதுதான் கதை-
பெருஞ்செல்வம் சேர்வதும்
பின்னர் விட்டுப்போவதும்…!

குறும்பாவில்…

கூத்துசபை வரும் கூட்டம்
போவதுபோல் போய்விடும்,
செல்வந்தனிடம் சேரும் பணமும்…!

மரபுக் கவிதையில்…

கலையாம் கூத்து நடக்கையிலே
    காண வந்திடும் ரசிகர்களும்
கலைந்தே செல்லுவர் முற்றிலுமாய்
    காட்சி முடிந்ததும் சபைவிட்டே,
மலைபோல் செல்வம் சேர்ந்துவந்து
    மனிதனைச் செல்வனாய் ஆக்கிடினும்
நிலைப்ப தில்லை அவனிடமே
நீங்கிச் சென்றிடும் அவனைவிட்டே…!

 லிமரைக்கூ…

கூத்து முடிந்ததும் அவைகலையும் கூட்டம்,
சேர்ந்த பணமும்
சிலநாளில் கைவிட்டு ஓடியேவிடும் ஓட்டம்…!

கிராமிய பாணியில்…

கூத்து கூத்து தெருக்கூத்து
கூட்டம் கூடிடும் தெருக்கூத்து,
ஆட்டம் பாட்டம் முடிஞ்சதுமே
பாக்க வந்த கூட்டமெல்லாம்
பறந்து போவும் எடத்தவுட்டே…

பணத்து கதயும் இதுதானே,
சேந்து வந்த பணமெல்லாம்
கூத்துசப கூட்டம்போல
சேந்து போயிரும் பாத்துக்க…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *